PUBLISHED ON : ஆக 21, 2017
சுப்பையா சிவசங்கர நாராயணப் பிள்ளை
பிறப்பு : ஏப்ரல் 5, 1901
மறைவு: ஆகஸ்ட் 31, 1950
பெற்றோர் : சுப்பையா பிள்ளை; கோமதி அம்மாள்
1770ம் ஆண்டில், எட்வர்ட் வேரிங் (Edward Waring) என்ற கணித மேதை ஒரு கருத்தை வெளியிட்டார்.
Meditationes algebraicae என்ற தனது புத்தகத்தில், 'ஒவ்வொரு எண்ணையும் அதிகபட்சமாக 4 வர்க்கங்களின் (Squares) கூடுதலாக, 9 முப்படிகளின் (Cubes) கூடுதலாக, 19 நாற்படிகளின் (4th powers) கூடுதலாக, 35 ஐம்படிகளின் (5th powers) கூடுதலாக, 73 அறுபடிகளின் (6th Powers) கூடுதலாக எழுதலாம்' என்று குறிப்பிட்டிருந்தார்.
அடுத்த ஆண்டிலேயே அந்தப் புத்தகத்தின் மறுபதிப்பில், 'எந்த எண்ணையும், அதிகபட்சம் இத்தனை K படிகளின் கூடுதலாகக் குறிப்பிட முடியும்' என்று ஒரு சூத்திரத்தை வழங்கினார்.
அவர் குறிப்பிட்டது சரிதானா என்று நிறுவ முடியாமல், 165 ஆண்டுகளாகப் பல கணித மேதைகள் தவித்தார்கள்.
1935ம் ஆண்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுப்பையா சிவசங்கர நாராயணப் பிள்ளை (எஸ்.எஸ். பிள்ளை) என்ற கணித மேதை, வேரிங்ஸின் கூற்று சரி என்று நிரூபித்தார். 'K என்ற படி, ஐந்தைவிட அதிகமாக இருக்கும் பட்சத்தில் என்ற எண்ணிக்கையில் அமைந்த, K படிகளின் கூடுதலாக, ஒரு எண்ணைக் குறிப்பிட முடியும்' என்று நிரூபித்தார் எஸ்.எஸ்.பிள்ளை.
எஸ்.எஸ்.பிள்ளையின் புகழ் உலகமெங்கும் பரவியது. பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஆய்வுசெய்ய ஐன்ஸ்டைன், ஓபன்ஹைமர் உள்ளிட்ட மாமேதைகள் அழைப்பு விடுத்தனர். “எனது கணித ஆய்விற்கு என் தாய்நாடே போதும்,” என்று வாய்ப்புகளை மறுத்தார், எஸ்.எஸ்.பிள்ளை.
அமெரிக்காவின் ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருந்த சர்வதேச கணித மாநாட்டில் சிறப்புரை ஆற்ற ஆகஸ்ட் 30, 1950 அன்று 'Star of Maryland' என்ற விமானத்தில் சென்னையிலிருந்து புறப்பட்டார். ஆகஸ்ட் 31, 1950 அன்று சஹாரா பாலைவனத்தில் தொழில்நுட்பக்கோளாரால் விமானம் விபத்துக்குள்ளானதில், எஸ்.எஸ்.பிள்ளை மரணமடைந்தார்.
யார் அவர்?
திருநெல்வேலி மாவட்டம் தென்காசிக்கு அருகே வல்லம் கிராமத்தில் பிறந்தவர்.
சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தார்.
ஆரம்பக் கல்வி முதல், பி.ஏ. ஹானர்ஸ் படிப்புவரை பலரது உதவியால் படித்துத் தேர்ச்சி பெற்றார்.
எண்ணியலில் அவர் செய்த ஆய்வுகளைச் சிறப்பித்து, சென்னைப் பல்கலைக்கழகம் அவருக்கு, முனைவர் பட்டத்திற்கும் மேலான D.Sc. (Doctor of Science) பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தது.
1929ம் ஆண்டில், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் பணியில் சேர்ந்தார்.
மொத்தம் 76 கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளார்.