தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/விகற்பங்கள்

விகற்பங்கள்

விகற்பங்கள்


PUBLISHED ON : ஆக 21, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 21, 2017


Follow on Google
அ நிறம் | அளவு

உங்கள் வகுப்பில் பல மாணவர்கள் இருக்கிறார்கள். எல்லாரும் ஒரே மாதிரியா தோன்றுகிறார்கள்?

ம்ஹூம், இல்லை; ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறார்கள். சிலர் குள்ளம், சிலர் உயரம், சிலர் ஒல்லி, சிலர் குண்டு, சிலர் வெள்ளை, சிலர் கருப்பு, சிலர் சுறுசுறுப்பு, சிலர் சோம்பல்.

கடைக்குச் சென்று ஒரு புத்தகம் வாங்கினால், அதில் எல்லாப் பக்கங்களும் ஒரேமாதிரி அளவோடு இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அதுதான் பார்ப்பதற்கு அழகு.

ஆனால், மனிதர்கள் எல்லாரும் அப்படி ஒரேமாதிரி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க இயலாது. பலவிதமான மனிதர்கள் ஒன்றாக இருப்பது இன்னோர் அழகு.

செய்யுளிலும் இப்படித்தான். ஒரேமாதிரி சொற்கள் வரிசையாக அமைந்தால் ஓர் அழகு; வெவ்வேறுவிதமான சொற்கள் வரிசையாக அமைந்தால் இன்னோர் அழகு.

எடுத்துக்காட்டாக, இந்த வரிகளைப் பாருங்கள்:

மல்லிகைப் பூவே இங்கே வா

அல்லிப் பூவே அருகில் வா

முல்லைப் பூவே விரைவில் வா

நல்லது சொல்வேன், உடனே வா

இந்தப் பாடலின் ஒவ்வோர் அடியிலும் முதல் சொற்கள் ஒரேமாதிரி அமைப்பில் உள்ளன: ம'ல்'லிகை, அ'ல்'லி, மு'ல்'லை, ந'ல்'லது என நான்கு சொற்களிலும் இரண்டாம் எழுத்து 'ல்' என அமைந்துள்ளது. இதனை எதுகை என்பார்கள்.

ஆக, இந்தப் பாடலில் நான்கு அடிகள், ஒவ்வோர் அடியிலும் ஒரே எதுகை வந்திருக்கிறது. ஆகவே, இதனை 'ஒரு விகற்பம்' என்பார்கள்.

'விகற்பம்' என்ற சொல்லின் பொருள், வேறுபாடு அல்லது வகை. 'ஒரு விகற்பம்' என்றால், நான்கு அடிகளின் தொடக்கமும் ஒரே வகையில் அமைந்துள்ளன.

இப்போது, இந்தப் பாடலைக் கொஞ்சம் மாற்றுவோம்:

மல்லிகைப் பூவே இங்கே வா

அல்லிப் பூவே அருகில் வா

சாமந்திப் பூவே விரைவில் வா

தாமரைப் பூவே ஓடி வா

இங்கே முதல் இரண்டு அடிகளிலும் ம'ல்'லிகை, அ'ல்'லி என ஒரே எதுகை வந்துள்ளது; அடுத்த இரண்டு அடிகளிலும் சா'ம'ந்தி, தா'ம'ரை என ஒரே எதுகை வந்துள்ளது. ஆகவே இதனை 'இரு விகற்பம்' என்பார்கள்.

அடுத்து, இதே பாடலை மீண்டும் மாற்றுவோம்:

மல்லிகைப் பூவே இங்கே வா

அல்லிப் பூவே அருகில் வா

சாமந்திப் பூவே விரைவில் வா

ரோஜாப் பூவே உடனே வா

இங்கே முதல் இரண்டு அடிகளிலும் ம'ல்'லிகை, அ'ல்'லி என ஒரே எதுகை வந்துள்ளது; ஆனால் மூன்றாவது, நான்காவது அடிகளில் அவ்வாறு அமையவில்லை: அங்கே சாமந்தி, ரோஜா என எதுகை அல்லாத அமைப்பு வந்துள்ளது.இப்படி மூன்று வெவ்வேறு அமைப்புகள் இங்கே வந்திருப்பதால், இதனை 'மூ விகற்பம்' என்பார்கள்.

உங்களிடம் திருக்குறள் புத்தகம் உள்ளதா? அதில் ஒரு விகற்ப, இரு விகற்பப் பாடல்களைக் கண்டுபிடியுங்களேன்.

- நாகா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us