ஒன்றைச் சொன்னால் அதற்கு ஒரேயொரு பொருள்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. ஒரே சொல்லுக்கும் ஒரே சொற்றொடருக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட பொருள்களும் இருக்கலாம். தமிழில் அவ்வாறுதான் இருக்கின்றன.
'கலம்' என்ற சொல்லை எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு உண்கின்ற பாத்திரம் என்று ஒரு பொருள் உண்டு. கப்பல் என்கின்ற பொருளும் உண்டு. ஆக, ஒரு சொல்லே பலப்பல பொருள்களைத் தரவல்லது.
அப்படி ஒன்றுக்கும் மேற்பட்டு இருபொருள் தோன்றுமாறு சொல்வது சிலேடை எனப்படும். இதை 'இரட்டுற மொழிதல்' என்று கூறுவார்கள்.
கி.வா.ஜகந்நாதன் என்னும் தமிழறிஞரை நாம் அறிந்திருக்கிறோம். அவர் பேச்சு வழக்கில்கூட அடிக்கடி சிலேடை தோன்றக் கூறுவதில் வல்லவர். ஒருமுறை அவர் நண்பர்களுடன் மகிழுந்தில் சென்றுகொண்டிருந்தார். வழியில் மகிழுந்து அணைந்து நின்றுவிட்டது. மகிழுந்தின் ஓட்டுநர் வண்டியில் அமர்ந்திருந்தவர்களிடம் “ஐயா... எல்லாரும் சேர்ந்து தள்ளினால் வண்டியைக் கிளப்பிவிடுவேன்...” என்று கேட்டுக்கொண்டார்.
உடனே வண்டியில் அமர்ந்திருந்தவர்கள் எல்லாரும் இறங்கி, மகிழுந்தைத் தள்ளத் தொடங்கினர். ஆனால் கி.வா.ஜ. வண்டியை விட்டு இறங்கவில்லை. வண்டி ஓட்டுநர் அவரைப் பார்த்தார். அதற்குக் கி.வா.ஜ. சொன்னார், “என்ன பார்க்கிறாய்... நான் தள்ளாதவன்...” என்று கூறினார். அதைக் கேட்டு எல்லாரும் சிரித்தார்களாம்.
இங்கே கி.வா.ஜ. கூறிய “தள்ளாதவன்” என்பதற்கு, இரண்டு பொருள்கள் பொருத்தமாய் அமைவதைப் பாருங்கள். தள்ளாதவன் என்றால், 'வண்டியைத் தள்ளாதவன்' என்று பொருள். அதே சமயம் அகவையில் மூத்த கிழவர்களையும் 'தள்ளாதவர்கள்' என்று கூறுவார்கள். அதனால் கி.வா.ஜ. இருபொருள்படும்படி சிலேடையாக 'வண்டியைத் தள்ளாதவர், தள்ளும் வலிமையற்ற முதியவர்' என்று கூறினார். இதுதான் சிலேடை என்னும் இரட்டுற மொழிதலாகும்.
காளமேகப் புலவர் சிலேடையாய்ப் பாட்டெழுதுவதில் வல்லவர். இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர்களில் சுரதாவும் நா.காமராசனும் இரட்டுற மொழிவதில் சிறந்தவர்கள்.
'வஞ்சிக் கோமான் விழிகள் சந்திக்கின்ற வஞ்சிக்கோ மான்விழிகள்”, என்று நா.காமராசன் எழுதியிருக்கிறார். வஞ்சிக் கோமான் என்பவன் சேர மன்னன். வஞ்சியைத் தலைநகராகக் கொண்டவன். சேர மன்னனின் விழிகள் பார்க்கின்ற பெண்ணுக்கு மான்விழிகள் என்னும் பொருளில் இரட்டுற மொழிகின்றார். இங்கே “வஞ்சிக் கோமான் விழிகள்” என்னும் தொடர், சேரமன்னனின் கண்களையும் பெண்ணின் மான்போன்ற விழிகளையும் குறித்தது.
- மகுடேசுவரன்