எழினி என்பது தகடூரை ஆண்ட அரசர் ஒருவரின் பெயர். அதிகமான் எழினி என்று அழைக்கப்பட்டார். பல்வேல் எழினி, நெடும்பூண் எழினி, பொலம்பூண் எழினி என்ற பெயர்களில் அரசர்கள் இருந்திருக்கிறார்கள். இவர்களைப் பற்றி, அகநானூறு, புறநானூறு, குறுந்தொகைப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. எழினி என்பது, அரசர்களின் பெயராக மட்டும் அல்ல; திரைச் சீலையைக் குறிக்கும் சொல்லாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
காவிரிப்பூம்பட்டினத்தில், கடலில் நீராடச் சென்ற அரச குமாரர்கள், செல்வந்தர்கள் மணற்பரப்பில் எழினிகளால் அமைந்த அறைகளில் தங்கி இருந்தனர் என்று சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. அதாவது, அலங்கரிக்கப்பட்ட துணிகொண்டு தங்குவதற்கான அறையை அமைப்பது.
கோவலனும் மாதவியும் கடலில் நீராடச் சென்றபோது, ஓவியங்கள் வரையப்பட்ட எழினியால் அமைந்த அறைகளில் தங்கி இருந்தனர் என்று குறிப்பிடுகிறது சிலப்பதிகாரம்.
'ஓவிய எழினி சூழவுடன் போக்கி
விதானித்துப் படுத்த எண்கால் அமளிமிசை'
அக்காலத்தில் நாடக மேடைகளுக்கும் எழினியை பயன்படுத்தினார்கள்.
சமஸ்கிருதத்தில் யவனிகா என்பது திரைச்சீலையைக் குறிக்கும்.