செப்டம்பர் 18, 2003: உலக தண்ணீர் கண்காணிப்பு நாள்
குடிநீர் ஆதாரமாக இருக்கக்கூடிய நீர்நிலைகளின் அமிலத்தன்மை, காரத்தன்மை ஆகியவற்றைப் பரிசோதித்துப் பார்த்து, நீரின் தரம் குறையாமல் பாதுகாக்க வேண்டும். தண்ணீர் வளங்களைப் பாதுகாப்பதில் பொது விழிப்புணர்வையும் ஈடுபாட்டையும் உருவாக்க இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
செப்டம்பர் 19, 1965: சுனிதா வில்லியம்ஸ் பிறந்த நாள்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை. 'நாசா'வால் தேர்ந்தெடுக்கப்பட்டு, சர்வதேச விண்வெளி நிலையம் சென்றார். விண்வெளியில் அதிக நாட்கள் தங்கியிருந்த பெண் என்கிற பெருமை இவருக்கு உண்டு. மொத்தம் 322 நாட்கள் இவர் விண்வெளியில் இருந்தார்.
செப்டம்பர் 21, 1987: உலக அமைதி நாள்
போர் இல்லாத உலகம் எப்போதும் அமைதியாகவே இருக்கும். உலக யுத்தத்தின் பாதிப்பை உணர்ந்து அமைதி நாளை பல நாடுகள் அனுசரிக்கின்றன. உலகில் அமைதியை வலியுறுத்தவும், நாடுகளிடையே போர் ஏற்படுவதைத் தடுக்கவும் ஐ.நா. சார்பில் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
செப்டம்பர் 22, 1791: மைக்கேல் ஃபாரடே பிறந்த நாள்
மின்சாரத்தின் தந்தை. கம்பிச் சுருளுக்குள் காந்தத்தை நகர்த்துவதன் மூலம், மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்று கண்டறிந்தார். வாயுக்களை முதன்முதலில் திரவமாக மாற்றியவரும் இவரே! நல்ல எழுத்தாளராக, அறிவியலை எளிய மனிதனுக்கும் புரிய வைத்தார்.
செப்டம்பர் 24, 1861: மேடம் பிகாஜி காமா பிறந்த நாள்
இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை, பெண் சுதந்திரம், வாக்குரிமைக்காகக் குரல் கொடுத்தார். ஆரம்ப காலத்தில் இந்திய விடுதலைக்கான போராட்டங்களை வெளிநாட்டிலிருந்து இயக்கியவர்களில் மிக முக்கியமானவர். இந்திய விடுதலையின் சின்னமாக மூவண்ணக் கொடியை வெளிநாட்டில் ஏற்றி வைத்தார்.

