கி.ராஜநாராயணன்: 16.09.1922
பிறந்த ஊர் : இடைசெவல், கோவில்பட்டி
வசிக்கும் ஊர் : புதுச்சேரி
சிறப்புப் பெயர்கள் : கரிசல் இலக்கியத்தின் தந்தை, தலைசிறந்த கதைசொல்லி, வட்டார இலக்கியத்தின் முன்னத்தி ஏர்
கிராமங்களுக்கு என சில அடையாளங்கள் உண்டு. காடுகள், கால்நடைகள், திண்ணை வீடுகள், மரத்தடி, கோவில், குளம், மண் மணக்கும் விளையாட்டுகள் என அழகியல் நிறைந்து இருக்கும். இயற்கையோடு வாழும் அந்தக் கிராம மக்களின் வாழ்க்கையைஉரைநடை இலக்கியத்தில் இயற்கையோடு கலந்து கூறுவது கி.ரா.வின் தனிச் சிறப்பு.
'நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவன். பள்ளிக்கூடத்தைப் பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்' என்று தன்னைப் பற்றிக் கூறும் இவர், படித்தது 7ம் வகுப்பு வரை மட்டுமே! விவசாயியான கி.ரா. 40 வயதுக்கு மேல்தான் எழுதத் தொடங்கினார். 'மாயமான்' என்ற முதல் சிறுகதை 1958ல் வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்றதால், தொடர்ந்து பல சிறுகதைகள் எழுதினார்.
தனக்குக் கிடைத்த கதையின் கருவை அழகாக, எளிமையாக விளக்க, கதைப் பின்னல், பாத்திரங்கள், பின்னணி என்று பலவற்றை அமைத்துக் கொள்வார். கரிசல் பூமி மக்களின் வாழ்க்கை, துன்பங்கள், நம்பிக்கைகள், ஏமாற்றங்களை இவரது எழுத்துகள் அதிகம் பேசின. சிறுகதை, குறுநாவல், நாவல், கிராமியக் கதை, கடிதம் என்று தமிழ் இலக்கியத்தில் தனி முத்திரை பதித்தார்.
தேர்ந்த கதைசொல்லியாக இருந்ததால், வாய்மொழிக் கதையின் கூறுகளை தனது படைப்பின் அடிப்படை அம்சங்களாகக் கொண்டு எழுதினார். கரிசல் வட்டார மொழி அகராதியை உருவாக்கியதால், வட்டார மொழிக்கு அகராதி உருவாக்கிய முன்னோடி என்ற பெருமையும் கிடைத்தது. நல்ல இசைஞானம் கொண்டவர். நண்பர்களுக்கு நீண்ட கடிதங்கள் எழுதி, அவர்கள் எழுதும் பதில் கடிதங்களையும் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்.
95வது வயதைக் கொண்டாடும் கி.ரா. இன்றைக்கும் அசராமல் எழுதுகிறார். அதனால்தான் அவரை 'தமிழ் எழுத்துலகின் பீஷ்மர்' என்று கொண்டாடுகிறார்கள்.
விருதுகள்
கதவு (சிறுகதைத் தொகுதி) தமிழ்வளர்ச்சி மன்றப் பரிசு (1965)
பிஞ்சுகள் (குழந்தைகள் நாவல்) இலக்கியச் சிந்தனை பரிசு (1979)
கோபல்லபுரத்து மக்கள் (நாவல்) சாகித்ய அகாதமி விருது (1991)
குறிப்பிடத்தக்க படைப்புகள்
கோமதி
கண்ணீர்
கரிசல் கதைகள்
கி.ரா.பக்கங்கள்
கிராமியக் கதைகள்
கொத்தைபருத்தி
புதுவை வட்டார நாட்டுப்புறக் கதைகள்
கிடை
கோபல்ல கிராமம்
புதுமைப் பித்தன்
மாமலை ஜீவா

