PUBLISHED ON : செப் 18, 2017
இந்தியாவில் பல்வேறு வகையான பாடத்திட்டங்கள் கடை பிடிக்கப்பட்டு வருகின்றன.
சி.பி.எஸ்.இ., மெட்ரிகுலேஷன் போன்றவை இல்லாமல், இந்தியா முழுக்க ஒரே மாதிரியான தரமான கல்வி முறை கொண்டு வரப்பட வேண்டியது அவசியமா என்று திருவள்ளூர் ஞான வித்யாலயா பள்ளி மாணவர்களுடன் உரையாடினோம். ஒரே மாதிரியான கல்வி முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்துவது சாத்தியமாகுமா, அப்படியான கல்வி முறை அறிமுகம் செய்யப்படுவதால், ஏற்படும் நன்மை தீமைகள் என்ன என்பது குறித்து மாணவர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
ஒரே மாதிரியான கல்வி முறை இந்தியாவில் கொண்டு வரப்பட்டால் நல்லதுதான். அதே சமயம், இந்தியா போன்ற பல மொழி, பண்பாடு, வரலாறு, கலாசாரங்கள் உள்ள நாட்டில், நாடு முழுக்க ஒரே மாதிரியான கல்வி முறை கொண்டு வருவது சாத்தியமா என்பதைப் பற்றியும் யோசிக்க வேண்டும். அறிவியல், கணிதம் போன்ற பாடங்களில், ஒரே மாதிரியான கல்வி முறையைக் கொண்டு வருவது சாத்தியம்தான். ஆனால் மொழிப் பாடங்கள், வரலாறு போன்றவற்றில் அந்தந்த மாநில வரலாறு, பண்பாடு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பாடத்திட்டம் வகுக்கப்பட வேண்டும்.
பா.யோகேஸ்வரி, 9ம் வகுப்பு
ஒரே மாதிரியான கல்வி முறையை அறிமுகப்படுத்தினால், கல்வியில் உள்ள ஏற்றத் தாழ்வுகள் நீங்கும். சி.பி.எஸ்.இ., மெட்ரிக், சமச்சீர் கல்வி முறையில் உள்ள பாடத்திட்டங்களில் உள்ள சமம் இன்மையை இதன் மூலமாக அகற்றலாம். சிறந்த கல்வியாளர்களைக் கொண்டு நாடு முழுக்க ஒரே கல்வி முறை கொண்டு வரப்பட்டால் எல்லா மாணவர்களும் ஒரே மாதிரியான கல்வியைக் கற்றுத் தேரலாம். நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்வதிலும் எந்தச் சிரமமும் இருக்காது. எனவே, இந்தியா முழுக்க தரமான ஒரே கல்வி முறையை அறிமுகம் செய்ய வேண்டும்.
அ.பிரித்திவிராஜ், 12ம் வகுப்பு
இப்போது நாங்கள் படிக்கிற பாடத்திட்டத்திற்கும், வேறு பாடத்திட்டத்தைப் படிக்கிற மாணவர்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. மெட்ரிக் முறையில் படித்து நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுகிற ஒரு மாணவர், அதே வகுப்பில் பயிலும் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவரைவிட கல்வித் தரத்தில் குறைந்தே விளங்குகிறார். எளிமையாகவும், நடப்புக் காலத்திற்கு ஏற்றபடியும் நம் நாட்டில் தரமான ஒரே மாதிரியான கல்வி முறையை பாடத்திட்டமாக வைத்தால், எல்லா வகுப்பு மாணவர்களுக்கும் பயனுள்ளதாக அமையும்.
ந.ச.ஸ்ரீராம், 12ம் வகுப்பு
போட்டித் தேர்வுகள் எழுதும்போது, சி.பி.எஸ்.இ. மாணவர்கள் எதிர்கொள்வதற்கும், மெட்ரிக் மாணவர்கள் எதிர்கொள்வதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. ஒரே மாதிரியான கல்வி முறை கொண்டு வரப்பட்டால், தரமான கல்வியை அனைவரும் பெறலாம். நம் கல்வித்துறையில் முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். பாடத்திட்டம் பல ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் மாற்றப்படுகிறது. இதனால் காலத்திற்கேற்ற கல்வியை நாங்கள் பயில முடிவதில்லை. இந்தியா முழுக்க ஒரே மாதிரியான கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டு, ஒவ்வோராண்டும் பாடத்திட்டத்தில் புதிய விஷயங்களைச் சேர்த்து அறிமுகம் செய்ய வேண்டும். தேர்வுக்காகப் படிப்பதாக இல்லாமல், மாணவர்களின் அறிவுத் திறனை மேம்படுத்துவதாக பாடத்திட்டங்கள் அமையப்பெற்றால் நல்லது. கல்வி ஆய்வாளர்கள் உதவியுடன் தரமான கல்வி முறையும் பாடத்திட்டமும் ஏற்படுத்தப்பட வேண்டும்.
பா.அபிராமி, 9ம் வகுப்பு
இந்தியா முழுக்க ஒரே மாதிரியான கல்வித் திட்டத்தைக் கொண்டு வருவதில் நிறைய நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. மாணவர்களாகிய நாங்கள், எங்கள் மாநில வரலாறு, பண்பாடு, கலாசாரம் போன்றவற்றை, பாடங்களில்தான் கற்கிறோம். பல மாநிலங்கள் உள்ள நம் நாட்டில் சமூக அறிவியல் போன்ற பாடங்களில், அந்தந்த மாநிலத்துக்கான விஷயங்கள் சேர்க்கப்பட்டு பாடத்திட்டம் அமைக்கப்பட வேண்டும். அப்படி இல்லையென்றால், வரலாறு போன்ற பாடங்களில் பொதுவான விஷயங்களை ஒரே பாடமாகவும், அந்தந்த மாநில வரலாறு, மொழிப்பாடங்களைக் கூடுதல் பாடமாகவும் இணைக்கலாம். நாடு முழுக்க ஒரே மாதிரியான கல்வி முறையைக் கொண்டு வந்தால், கல்வியில் ஏற்றத் தாழ்வுகள் இருக்காது.
வெ.சுவாதி, 12ம் வகுப்பு
ஒரே மாதிரியான கல்வி முறை தேவையில்லை. அதற்குப் பதிலாக பாடத்திட்டங்களில் உள்ள வேற்றுமைகள் களையப்பட வேண்டும். பாடத்திட்டம் ஒரு கல்வி முறையில் ஒன்றாகவும், மற்றொரு கல்வி முறையில் வேறொன்றாகவும் உள்ளது. ஒரே வகுப்பைப் பயிலும் இரு வேறு மாணவர்களின் கல்வி அறிவு வெவ்வேறாக உள்ளது. அதுபோல இல்லாமல் ஒரே பாடத்திட்டம் எல்லா வகுப்புகளுக்கும் வழங்கப்பட வேண்டும். போட்டிகள் சூழ்ந்த இந்த உலகில், மாணவர்கள் தரமான கல்வியைப் பெற பாடத்திட்டத்தை திருத்தி அமைத்தாலே போதுமானது. பாடங்கள் தேர்வு அடிப்படையில் இல்லாமல், புரிந்துகொள்ளும் விதத்தில் இருக்க வேண்டும். புரிந்துகொள்ளாமல் மனப்பாடம் செய்து தேர்வு எழுதி மதிப்பெண் அடிப்படையில் படிப்பதாகக் கல்வி முறை இருக்கக்கூடாது. சமச்சீரான கல்வி முறையை கொண்டு வரலாம். நாடு முழுக்க ஒரே மாதிரியான பாடத்திட்டம் என்பது சரியாக இருக்காது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏற்றபடி தரமான கல்வி முறையை அமல்படுத்த வேண்டும்.
பி.மோகனபிரியா, 9ம் வகுப்பு

