ஜனவரி 9, 1922 - ஹர் கோபிந்த் கொரானா பிறந்த நாள்
இந்திய அமெரிக்க மூலக்கூறு உயிரியல் அறிவியலாளர். செயற்கை முறையில் மரபணுக்களை ஆய்வுக்கூடத்தில் உற்பத்தி செய்து, அறிவியல் உலகுக்கு புது வழிகாட்டினார். மரபுக்குறியீடு, புரதத்தை செயற்கையாக உற்பத்தி செய்தல் ஆய்வுக்காக, நோபல் பரிசு பெற்றிருக்கிறார்.
ஜனவரி 9, 2003 - வெளிநாடுவாழ் இந்தியர்கள் நாள்
வெளிநாடுவாழ் இந்தியர்களால் நம் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைகிறது. இந்தியாவில் இல்லாமல் பிற நாடுகளில் வாழும் இந்தியர்களின் சார்பாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. மகாத்மா காந்தி, தென்னாப்பிரிக்காவில் இருந்து மும்பை வந்து சேர்ந்த நாளின் நினைவாக இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது.
ஜனவரி 11, 1973 - ராகுல் டிராவிட் பிறந்த நாள்
உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களுள் முக்கியமானவர். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் இருந்திருக்கிறார். சிறந்த ஆட்டக்காரர், சிறந்த டெஸ்ட் ஆட்டக்காரர் என்கிற பெருமைகள் இவருக்குண்டு. அர்ஜுனா, பத்மஸ்ரீ, பத்மபூஷண் போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார்.
ஜனவரி 12, 1863 - சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள்
இந்தியாவின் தலைசிறந்த ஆன்மிகத் தலைவர்களுள் ஒருவர். இந்தியக் கலாசாரம், பண்பாட்டை உலகுக்கு எடுத்துக்காட்டினார். 1893இல் சிகாகோ நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய சொற்பொழிவு உலகப்புகழ் பெற்றது. இவரது தன்னம்பிக்கைக் கருத்துகள் இளைஞர்களை ஈர்த்ததால், இவர் பிறந்தநாள் தேசிய இளைஞர் நாளாகக் கொண்டாடப்படுகிறது.
ஜனவரி 13, 1949 - ராகேஷ் சர்மா பிறந்த நாள்
விண்வெளியில் பறந்த முதல் இந்தியர். விண்வெளிக்குச் சென்ற 138வது மனிதர். ரஷ்யாவின் சோயுஸ் டி-11 விண்கலத்தில் சென்று, சல்யூட்-7 என்னும் விண்வெளி மையத்தில் எட்டு நாட்கள் தங்கியிருந்தார். இவரது பணிகளைப் பாராட்டி அசோக சக்ரா விருது வழங்கப்பட்டது. சோவியத் ரஷ்யாவின் நாயகன் என்னும் விருதையும் பெற்றார்.
ஜனவரி 14, 1977 - நரேன் கார்த்திகேயன் பிறந்த நாள்
உலக கார் பந்தயங்களில் முதன்மையானதாகக் கருதப்படும் எஃப் 1 போட்டிகளில் கலந்து கொண்ட முதல் இந்தியர். 1996இல் ஃபார்முலா ஆசியா பந்தயங்களில், முதல் வீரராக வந்ததால், 'முதல் ஆசியர்' என்ற பெருமை கிடைத்தது. 2010ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது பெற்றார்.

