
நவம்பர் 26, 2015 - அரசியல் சாசன நாள்
இந்திய அரசியல் சாசன வரைவுக்குழுவின் தலைவராக இருந்த அம்பேத்கரை கௌரவிக்கவும், அரசியலமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
நவம்பர் 27, 1986 - சுரேஷ் ரெய்னா பிறந்தநாள்
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர். 50 ஓவர் உலகக் கோப்பை, டி-20 உலகக் கோப்பை, ஐ.பி.எல், சாம்பியன் லீக் என, அனைத்திலும் சதமடித்த முதல் இந்திய வீரர் இவர்தான்!
நவம்பர் 28, 1820 - ஃபிரெடரிக் ஏங்கல்ஸ் பிறந்தநாள்
ஜெர்மனியின் அரசியல் தத்துவஞானி. கம்யூனிச சித்தாந்தத்தை கார்ல் மார்க்ஸ் உடன் இணைந்து உருவாக்கினார். முதலாளித்துவ பொருளாதாரம் பற்றிப் பல கருத்துகளைக் கூறினார்.
நவம்பர் 30, 1858 - ஜகதீஷ் சந்திரபோஸ் பிறந்தநாள்
மார்க்கோனிக்கு முன்னரே வானொலி அலைகள் மூலம், கம்பியில்லா ஒலிபரப்பைக் கண்டுபிடித்த இந்திய விஞ்ஞானி. தாவரங்களுக்கும் உயிருண்டு என்ற உண்மையைச் சொன்ன ஆய்வாளர்.
டிசம்பர் 1, 1954 - மேதா பட்கர் பிறந்தநாள்
சமூக சேவகர். குஜராத், நர்மதை ஆற்றில் கட்டப்பட்ட அணைக்கு எதிரான போராட்டத்தின் மூலம் அறியப்பட்டார். சுற்றுச்சூழல், மக்களின் பிரச்னைகளுக்காகத் தொடர்ந்து போராடி வருகிறார்.
டிசம்பர் 2, 2001 - உலக கணினி எழுத்தறிவு நாள்
அன்றாட வாழ்வின் அத்தியாவசியத் தேவையாக கணினி மாறிவிட்டது. டிஜிட்டல் சாதனங்கள் பற்றிய விழிப்புணர்வையும் தொழில்நுட்பம் பற்றி அறிந்துகொள்ளவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.