
வின்ஸ்டன் சர்ச்சில்
30.11.1874 - 24.1.1965
ஆக்ஸ்ஃபோர்டுஷைர், இங்கிலாந்து.
போர் வீரர், அமைச்சர், பிரதமர், பேச்சாளர், எழுத்தாளர், ஓவியர், பத்திரிகையாளர் என, பல முகங்கள் கொண்ட தலைவர். இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்தின் பெருமையை உலகறியச் செய்து, உலகத் தலைவர்களில் ஒருவராகப் போற்றப்பட்டவர். இவர்தான் இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில்.
பள்ளிக்கூட நாட்களில் படிப்பில் ஆர்வமின்றி இருந்தார். இதனால், 3 முறை 8ஆம் வகுப்பில் தோல்வி அடைந்தார். போகப்போக நிலைமை புரிந்து படிக்க ஆரம்பித்து பட்டம் பெற்றார். அதன்பிறகு ஒரு பத்திரிகையில் சேர்ந்து, போர்முனைச் செய்திகளை வெளியிட்டதற்காக சிறை சென்றார். ஒரு வீரனாக இராணுவத்தில் சேர்ந்து தளபதியாக உருவெடுத்து வித்தியாசமான போர் நடவடிக்கைகளால் புகழ் பெற்றார்.
உழைப்பு, வீரம், எழுச்சி, திறமை, எதற்கும் அஞ்சாத போர்க்குணத்துடன் திகழ்ந்தார். போர் அனுபவங்களைப் பல நூல்களாக எழுதியுள்ளார். போர் பற்றிய அவரது உரைகள் 20 நூல்களாகத் தொகுக்கப்பட்டு இருக்கின்றன. போர்க்களம் பற்றி 'தி செகண்ட் வேர்ல்டு வார்'
என்று அவர் எழுதிய நூல், 1953இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றது. உலகப் போர்களுக்கு முன் நான்கு படையெடுப்புகளில் பங்கு பெற்றிருக்கிறார். இரு உலகப் போர்களில் வெற்றியைக் குவித்த பெருமையும் சர்ச்சிலுக்கு சொந்தம்.
23 வயதில் அரசியல் அறிவையும் உலக மக்கள் பற்றியும் தெளிவாக அறிந்திருந்தார். 1900இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். பாதுகாப்பு அமைச்சர் பதவி கிடைத்தது. அரசியலில் பல நிலைகளைக் கடந்து இங்கிலாந்து பிரதமராக இரண்டு முறை இருந்திருக்கிறார்.
இந்தியாவுக்கு விடுதலை தருவதை எதிர்த்தவராக இருந்தாலும், இங்கிலாந்துக்கு எழுச்சி நாயகனாகவும் உலகம் போற்றும் தலைவராகவும் அழியாப் புகழ் பெற்றிருக்கிறார் சர்ச்சில்!