PUBLISHED ON : டிச 16, 2019

டிசம்பர் 16, 1770 - பீத்தோவன் பிறந்த நாள்
ஜெர்மானிய இசை மேதை. இசைக் கலைஞராகவும், இசை இயக்குநராகவும் திகழ்ந்தார். கேட்கும் திறன் பாதிக்கப்பட்ட பிறகும் மிகச்சிறந்த சிம்பொனி இசை வடிவங்களை உலகுக்கு வழங்கினார்.
டிசம்பர் 18, 1878 - ஜோசப் ஸ்டாலின் பிறந்த நாள்
சோவியத் யூனியனின் பொதுவுடைமைக் கட்சித் தலைவர். தொழிலிலும் இராணுவத்திலும் நாட்டை வல்லரசாக மாற்றினார். ரஷ்யாவில் தொழில்புரட்சி ஏற்பட இவரது பொருளாதாரத் திட்டங்களே காரணம்!
டிசம்பர் 18, 1856 - ஜே.ஜே.தாம்சன் பிறந்த நாள்
நவீன அணு இயற்பியலின் தந்தை! மின்சாரவியல், காந்தவியலில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, பல புத்தகங்களை வெளியிட்டுள்ளார். 1906இல் இயற்பியலில் நோபல் பரிசு பெற்றார்.
டிசம்பர் 19, 1934 - பிரதிபா பாட்டீல் பிறந்த நாள்
இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர். 12வது குடியரசுத் தலைவராக இருந்தவர். ஒரு வழக்கறிஞராக வாழ்க்கையைத் தொடங்கி, சட்டமன்ற உறுப்பினரானார். 2004இல் இராஜஸ்தான் மாநில ஆளுநராகப் பணியாற்றி இருக்கிறார்.
டிசம்பர் 20, 2002 - ஐ.நா. சர்வதேச ஒருமைப்பாடு நாள்
வறுமையை ஒழிக்கவும், மனித சமூக மேம்பாட்டிற்கு உதவவும் ஐ.நா. சபை உலக ஒருமைப்பாடு திட்டத்தின் கீழ் ஒரு நிதியை நிறுவியது. வளரும் நாடுகளில் நிலையான முன்னேற்றம் ஏற்பட இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
டிசம்பர் 22, 1887 - சீனிவாச இராமானுஜன் பிறந்த நாள்
20ஆம் நூற்றாண்டில் உலகை வியக்கவைத்த, தமிழ்நாட்டு கணித மேதை. 3000க்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார். எண்களின் பகுப்பாய்வுக் கோட்பாடு, முடிவிலா தொடர் போன்ற இவரது ஆய்வுகள் குறிப்பிடத்தக்கவை.
