
ஜனவரி 20, 1937 - அமெரிக்க அதிபர்கள் பதவியேற்கும் நாள்
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறும். அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அதிபர் ஜனவரி 20 அன்றே பதவியேற்பார். பதவியேற்கும் நாள் ஞாயிற்றுக்கிழமையாக இருந்தால், மறுநாள் பதவியேற்பார்கள்.
ஜனவரி 21, 1953 - பால் ஆலன் பிறந்த நாள்
பில்கேட்ஸ் உடன் இணைந்து மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தைத் தொடங்கினார். ஐடியா மேன், மேன் ஆஃப் ஆக் ஷன் என்று அழைக்கப்பட்டார். Q-DOS மென்பொருளைக் கண்டறிந்தார். 30 வயதில் கோடீஸ்வரராகி அறக்கட்டளையின் மூலம் நற்பணிகள் செய்து வருகிறார்.
ஜனவரி 23, 1897 - சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாள்
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர். நேதாஜி (தலைவர்) என்று மக்களால் அழைக்கப்பட்டார். இந்தியர்களை ஒன்று திரட்டி தேசிய இராணுவத்தை உருவாக்கினார். பெண்கள் படைக்கு 'ஜான்சி ராணி' என்று பெயரிட்டு, ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தினார்.
ஜனவரி 24, 1924 - சி.பி.முத்தம்மா பிறந்த நாள்
இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்ற முதல் பெண். பாலின பாகுபாடுகளை எதிர்த்து வழக்குத் தொடர்ந்து, சிறப்பு வாய்ந்த தீர்ப்பைப் பெற்றார். வெளிநாட்டுத் தூதர், உயர் ஆணையாளர் போன்ற பதவிகளையும் அலங்கரித்த முதல் இந்தியப் பெண் இவரே!
ஜனவரி 25, 2011 - தேசிய வாக்காளர் நாள்
18 வயது நிரம்பிய இந்திய மக்கள் அனைவரும், வாக்களிப்பதைக் கடமையாகக் கருத வேண்டும். குறிப்பாக இளைஞர்களிடம் வாக்களிக்கும் உணர்வை அதிகப்படுத்தும் நோக்கத்துடன் 2011 முதல் இந்த நாள் இந்திய அரசாங்கத்தால் அனுசரிக்கப்படுகிறது.
ஜனவரி 26, 1950 - இந்தியக் குடியரசு நாள்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் எப்படி ஆட்சி செய்ய வேண்டும் என்பதை நிர்ணயிப்பதே அரசியல் அமைப்புச் சட்டம். மேதைகள் சேர்ந்து உருவாக்கிய அரசியல் அமைப்புச் சட்டத்தை இந்திய அரசு ஏற்றுக் கொண்ட நாள் குடியரசு நாளாகக் கொண்டாடப்படுகிறது.