1965ஆம் ஆண்டு, வாணியம்பாடி இந்து மேல்நிலைப் பள்ளியில் ஒரு விழா. தமிழாசிரியர் ஒருவர் திருவாசகம் பற்றிச் சொற்பொழிவு நிகழ்த்தவிருந்தார்.
அந்தப் பள்ளியின் தாளாளரான இராஜமன்னாரும் அந்த விழாவில் கலந்துகொண்டார்.
விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. திருவாசகத்தின் சிறப்புகளை தமிழாசிரியர் நன்றாக எடுத்துரைத்தார். இதைக்கேட்ட இராஜமன்னாருக்கு வியப்பு.
தமிழாசிரியர் ஒருவர் திருவாசகம் பற்றி நன்கு பேசுவதில் வியப்பு எதற்கு?
காரணம் இருக்கிறது. அந்தத் தமிழாசிரியருடைய பெயர், மு. அப்துல்கரீம். அவர் ஓர் இஸ்லாமியர்.
மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகம், இந்துமதக் கடவுளான சிவபெருமானுடைய பெருமைகளைப் பாடுகிறது. சைவத் திருமுறைகளில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. 'திருவாசகத்துக்கு உருகார் ஒருவாசகத்துக்கும் உருகார்' என்ற சொற்றொடர் இந்நூலின் சிறப்பைக் காட்டுகிறது.
எனினும், இஸ்லாமியர் ஒருவர், திருவாசகம் பற்றி இந்த அளவு சிறப்பாகப் பேசியது இராஜமன்னாருக்கு வியப்பளித்தது. நிகழ்ச்சி முடிந்தவுடன் அப்துல்கரீமைப் பார்த்து இவ்வாறு கேட்டார், ''நீங்கள் உரைத்தவை அனைத்தும் உங்களுடைய உண்மையான உணர்வுகள்தானா?''
தாளாளருடைய கேள்வியின் உட்பொருளை அப்துல்கரீம் உணர்ந்துகொண்டார். ''இஸ்லாமியனாகிய நான், திருவாசகத்தில் உருகக்கூடாதா?'' என்று கேட்டார். தன்னுடைய கருத்தை நிரூபிப்பதற்காக, திருவாசகத்திலிருந்தே ஒரு பாடலை எடுத்துக்காட்டினார்:
'ஒரு நாமம், ஓர் உருவம் இல்லாற்கு ஆயிரம்
திருநாமம் பாடித் தெள்ளேணம் கொட்டாமோ.'
இறைவனுக்கு ஒரு நாமம்தானா? ஓர் உருவம்தானா? இது ஒன்றுதான் அவர் பெயர், இது மட்டும்தான் அவருடைய உருவம் என்று யாராவது சொல்லிவிடமுடியுமா? இப்படிப்பட்ட சிறப்பைக்கொண்ட இறைவருக்கு, ஆயிரம் திருநாமங்களைப் பாடுவோம் என்கிறார் மாணிக்கவாசகர். அதைச் சுட்டிக்காட்டிய அப்துல்கரீம், ''மாணிக்கவாசகர் சைவர்களுக்கு மட்டுமா சொந்தம்? இஸ்லாமியர்களுக்கும் சொந்தமானவரல்லவா அவர்!'' என்றார்.
தமிழாசிரியர், தமிழ்த்துறைத் தலைவர், கல்லூரி முதல்வர் என, பல பொறுப்புகளை வகித்த மு. அப்துல்கரீம், முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்தவர்.
அதே சமயம், அவர் இலக்கியத்தைச் சமயச்சார்புடன் பார்க்கவில்லை. 'மக்கள் வாழ்வை நெறிப்படுத்தும் இலக்கியங்கள் எந்தச் சமயச்சார்புடையவையாக இருந்தாலும், அவை தமிழ்ச்சொத்துகள், இந்தியச் செல்வங்கள்' என்றார். 'கம்பராமாயணமும் பெரியபுராணமும் திருவாசகமும் இந்துமதச் சார்புடைய இலக்கியங்களே. எனினும், அவை தமிழர் பொதுச்செல்வங்கள், அவற்றைக் கற்று ஒழுகும் கடப்பாடு இந்தியர்கள் அனைவருக்கும் உண்டு' என வலியுறுத்தினார்.
இலக்கியத்தைக் குறுகியநோக்குடன் காணக்கூடாது என்பதற்குத் தமிழில் இன்னும் பல சான்றுகள் உண்டு. நீதியரசர், தமிழறிஞர், எழுத்தாளராகிய மு.மு. இஸ்மாயில், இஸ்லாமியராக இருந்தபோதும், கம்பராமாயணத்தில் தோய்ந்தவர்.
இந்து மதத்தைச் சேர்ந்த கண்ணதாசன், 'இயேசு காவியம்' எழுதியிருக்கிறார். கிறிஸ்தவரான பேராசிரியர் சாலமன் பாப்பையா கம்பராமாயணத்தைப்பற்றிப் பல ஆழமான படைப்புகளை வழங்கியவர்.
ஆக, உணர்வுப்பூர்வமான நல்ல இலக்கியங்கள் இயற்கையைப்போல் அனைவருக்கும் சொந்தமானவை. நம் பண்பாட்டுக்குச் சொந்தமான பொதுச்சொத்துகள், அவற்றை இவர்கள் மட்டும்தான் படிக்கவேண்டும், இவர்கள்தான் அதற்கு உருகவேண்டும் என்றெல்லாம் யாராலும் கட்டுப்பாடுகளை விதிக்க இயலாது.
- நாகா