sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

மொழிபெயர்ப்பு, மொழியாக்கம்: வேறுபாடு

/

மொழிபெயர்ப்பு, மொழியாக்கம்: வேறுபாடு

மொழிபெயர்ப்பு, மொழியாக்கம்: வேறுபாடு

மொழிபெயர்ப்பு, மொழியாக்கம்: வேறுபாடு


PUBLISHED ON : ஜன 20, 2020

Google News

PUBLISHED ON : ஜன 20, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'This is a beautiful seashore' என்று ஆங்கிலத்தில் ஒருவர் வியக்கிறார்.

அருகில் நின்ற ஒருவருக்குத் தமிழ் தெரியவில்லை. 'என்ன சொல்றீங்க?' என்று அவரையே கேட்கிறார்.

'இது ஓர் அழகிய கடற்கரைன்னு சொன்னேன்' என்கிறார் அவர். அதைத் தலையசைத்து ஒப்புக்கொள்கிறார் இரண்டாமவர்.

இங்கு நிகழ்ந்தது 'மொழிபெயர்ப்பு' (Translation). ஒருவர் ஒரு மொழியில் சொன்ன கருத்து, அதே நபரால் இன்னொரு மொழிக்கு அப்படியே மாற்றப்பட்டுள்ளது.

மாறாக, அந்த முதல் மனிதர் தன்னுடைய ஆங்கிலச்சொற்றொடரை 'இது ஓர் அற்புதமான, பேரழகான, காணக்காணச் சலிக்காத கவின்நிறைந்த கடற்கரை.' இப்படி மொழிபெயர்த்திருந்தால்?

இந்த அழகிய தமிழ்ச்சொற்றொடரும் கடற்கரையைப் பாராட்டுகிறது. அவர் தொடக்கத்தில் சொன்ன ஆங்கிலச் சொற்றொடரும் கடற்கரையைப் பாராட்டுகிறது. இந்த ஓர் ஒற்றுமையைத் தவிர, இந்த இரு சொற்றொடர்களும் முற்றிலும் மாறுபட்டுள்ளன. தமிழ்ச்சொற்றொடரில் உள்ள பல குறிப்புகள் மூலச்சொற்றொடரில் இல்லை. எடுத்துக்காட்டாக, ஆங்கிலத்தில் 'காணக்காணச் சலிக்காத' என்ற குறிப்பே இல்லை. ஆனால், தமிழில் உள்ளது.

ஆகவே, இதை மொழிபெயர்ப்பு (ஒன்றை இன்னொன்றாக மாற்றுவது) என்பதைவிட, மொழியாக்கம் (அதே கருத்தைக்கொண்ட இன்னொன்றைப் புதிதாக ஆக்குவது) என்பதுதான் சரி. ஆங்கிலத்தில் இதை Transcreation என்கிறார்கள்.

மொழிபெயர்ப்பு இருக்கும்போது மொழியாக்கம் எதற்காக? மூலச்சொற்றொடரில் இல்லாத விஷயங்களைப் புதுமொழியில் சேர்ப்பது சரிதானா?

ஒரு மொழியிலுள்ள விஷயங்களை, இன்னொரு மொழிக்குக் கொண்டுசெல்லும்போது, சொல்லுக்குச் சொல் அப்படியே மொழிபெயர்ப்பதில் பல பிரச்னைகள் வரக்கூடும். மொழிபெயர்ப்பாளரையும் அறியாமல் மூலமொழியின் சொற்றொடர் கட்டமைப்பு புதிய மொழியில் நுழைந்துவிடலாம். படிப்பவர்களுக்கு இது அன்னிய உணர்வைத் தரலாம், இயல்பற்ற ஒன்றை வாசிக்கிறோம் என்ற எண்ணத்தையும், சலிப்பையும் ஏற்படுத்தலாம்.

இதனால், மூல எழுத்தாளரும் அதைப் புதியமொழிக்குக் கொண்டுசெல்பவரும் இதுபற்றி முன்கூட்டியே பேசித் தீர்மானிப்பது நல்லது. சட்ட ஆவணங்கள், மருத்துவக் குறிப்புகள் போன்ற சிலவற்றைத் தவிர, மற்ற அனைத்துக்கும் மொழியாக்கத்தைப் பயன்படுத்தலாம். மூலத்திலுள்ள கருத்தை மட்டும் மாற்றிவிடக்கூடாது.

சில நேரங்களில், மூலத்தை முழுமையாக மொழிபெயர்க்காமல் அதன் கருத்துகளை மட்டும் புதியமொழியில் விளக்கிச்சொல்லும் பழக்கமும் உள்ளது. இதை, Interpretation (விளக்கிச்சொல்லுதல்) என்கிறார்கள்.

Translationக்கு இன்னொரு மாற்றும் உள்ளது. அதை Transliteration (ஒலிபெயர்ப்பு) என்பார்கள். எடுத்துக்காட்டாக, 'Bus' என்ற ஆங்கிலச் சொல்லைப் 'பேருந்து' என்ற தமிழ்ச்சொல்லாக எழுதுவது மொழிபெயர்ப்பு. 'பஸ்' என்று அதே சொல்லைத் தமிழ் எழுத்துகளில் எழுதுவது ஒலிபெயர்ப்பு. அதாவது, மூலமொழியிலுள்ள ஒலியை மட்டும் புதியமொழிக்குக் கொண்டு வருகிறோம். புதிய மொழியில் அதற்கென்று உள்ள சொல்லைப் பயன்படுத்துவதில்லை.

தமிழ்போன்ற வளமான மொழிக்கு, ஒலிபெயர்ப்பு எப்போதும் தேவைப்படாது. எனினும், சில நேரங்களில், குறிப்பாகக் கலைச்சொற்களைப் பயன்படுத்தும்போது, ஒலிபெயர்ப்பு விரும்பப்படுகிறது. எடுத்துக்காட்டாக, Computerக்குத் தமிழில், கணினி என்ற சொல் இருப்பினும், அதைக் கம்ப்யூட்டர் என்றே பலரும் உச்சரிக்கிறார்கள்.

மொழிபெயர்ப்பு, மொழியாக்கம், விளக்கிச்சொல்லுதல், ஒலிபெயர்ப்பு என, வகை எதுவானாலும், நோக்கம் ஒன்றுதான்: ஒரு மொழியிலிருக்கும் கருத்துகளை, அந்த மொழியை அறியாத வேற்றுமொழியினர் மத்தியில் கொண்டுசெல்வது. அவ்வகையில் மொழிபெயர்ப்பாளர்கள், மொழியாக்க வல்லுனர்கள், விளக்கிச்சொல்லுவோர், ஒலிபெயர்ப்பாளர்கள் மிக முக்கியமான பங்களிப்பை வழங்குகிறார்கள்.

- என். சொக்கன்






      Dinamalar
      Follow us