PUBLISHED ON : ஜன 20, 2020

தெற்காசியாவின் மிகமுக்கிய உணவு அரிசி. ஒவ்வொரு பகுதியிலும் அரிசி பலவிதங்களாகச் சமைக்கப்பட்டுள்ளன. 9,000 ஆண்டுகளுக்கு முன், சீனாவில் முதன்முதலாக நெல் விளைவிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
அரிசியின் நீண்ட வரலாற்றை தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், ஆசியாவில்தான் தேட முடியும். ஏனெனில், இங்குதான் அரிசி என்பது மக்களின் விருப்பமான உணவாக இருந்து வந்திருக்கிறது.
உதாரணமாக, நம்முடைய தமிழகத்தில் இட்லி, தோசை இல்லாத வீடுகளையோ, சிற்றுண்டிகளையோ பார்க்க முடியாது. காலை முதல் இரவு வரை அரிசி என்ற மூலப்பொருள் இல்லாமல், தென்னக உணவு நிறைவு பெறாது.
அரிசியைச் சாப்பிடலாமா, வேண்டாமா என, எத்தனையோ கேள்விகள் இருந்தாலும், அரிசியை ஏதாவது ஒரு விதத்திலாவது சாப்பிடுவோம். சர்க்கரை குறைபாடு உள்ளவர்கள், அரிசி உணவைச் சாப்பிடவே கூடாது என மருத்துவர்கள் சொல்கிறார்கள். ஆனால், தெற்காசியாவில் அரிசியை முதன்மை உணவாகச் சாப்பிடும் நாடுகளில் சர்க்கரை குறைபாடு உள்ளவர்களின் எண்ணிக்கை குறைவுதான். பூட்டான் நாட்டில் அரிசிதான் மூன்று வேளை உணவு. ஆனால், அங்கு சர்க்கரை குறைபாடு உள்ளவர்கள் இல்லை.
அரிசி, எப்போது நம்முடைய விருப்பமான உணவாக வந்திருக்கும்? எப்படிக் கண்டுபிடித்தார்கள் என்பதைச் சுருக்கமாகப் பார்ப்போம்.
வேட்டையாடி உணவு உண்ணும் கலாசாரம் குறையத் தொடங்கியது. மக்கள் நிரந்தரமாக ஓரிடத்தில் நிலையாகத் தங்கி வாழ முடிவு செய்தனர். அதையடுத்து, காடுகளில் உள்ள பல தானியங்களை விளைவித்து பரிசோதனை செய்தனர். அரிசி எளிமையாக விளைந்தது. அதுவே பல பகுதிகளுக்குப் பரவியது.
அரிசி என்பது ஊட்டச்சத்தான உணவு என்ற கண்ணோட்டத்தில் விளைவிக்கப்படவில்லை. நம்முடைய தேடல் ஊட்டச்சத்தா என்பதை நோக்கி போகும்தான், அரிசியை முழுவதுமாக ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தோம். ஏறக்குறைய பல ஆராய்ச்சியாளர்கள், தற்போதும் ஊட்டச்சத்தான உணவின் பட்டியலில்தான் அரிசியை வைத்திருக்கிறார்கள்.
அரிசியை ஒரேவிதமாக சமைத்திருந்தால், அரிசி என்றோ அலுப்பைக் கொடுத்திருக்கும். ஆனால், நாம் பலவிதங்களில் ருசியாக செய்யக் கற்றுக்கொண்ட காரணத்தால், நம்மால் அரிசியை விடமுடியவில்லை.
- சிவசு