
காலை, மதியம், இரவு என, எந்த நேரத்திலும் நமக்குப் பிடித்த காய்கறிகள், பனீர் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடும் உணவு பீட்சா. எங்கோ பிறந்த பீட்சா, உலக மக்கள் பலருக்கும் பிடித்த உணவாக மாறியிருக்கிறது. வட்ட ரொட்டியில் என்னவெல்லாம் செய்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள் என்று நினைத்தால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
பீட்சா என்பது பீட்டா என்ற கிரேக்க வார்த்தையில் இருந்து தோன்றியது. இந்தச் சொல்லுக்கு ரொட்டி என்று அர்த்தம்.
இது இத்தாலிய நாட்டில் உருவான கார வகை உணவு. வழக்கமாக வட்ட வடிவில் தட்டையாக இருக்கும். கோதுமை மாவை நொதிக்கவைத்துத் தயாரிக்கப்படுகிறது. மேற்பரப்பில் தக்காளி, பாலாடைக்கட்டி, ஆலிவ், இறைச்சி போன்ற பலவும் வகைக்கு ஏற்றபடி சேர்க்கப்பட்டு, மிக அதிக வெப்பநிலையில் ஓவனில் சூடாக்கி சமைக்கப்படும். பெரும்பாலும் கல் ஓவன்களே பயன்படுத்தப்படுகின்றன.
புதிய கற்காலத்தில் இருந்தே தற்போதைய பீட்சா போன்ற உணவு வகை உண்ணப்பட்டு வந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ரொட்டியுடன் காய்கறிகள், பாலாடைக் கட்டிகள், பேரீச்சம் பழம் என, அந்தந்தப் பகுதிகளில் கிடைத்தவற்றை வைத்து மக்கள் உண்டு வாழ்ந்திருக்கிறார்கள்.
'பீட்சா' என்ற வார்த்தை காய்டா என்ற மத்திய இத்தாலி நகரத்தில் முதன்முதலில் லத்தீன் மொழியில் கி.பி. 997இல் தென்பட்டது. குறிப்பிட்ட இடத்தில் குடியிருக்கும் ஒருவர், காய்டா நகரப் பாதிரியாருக்கு ஒவ்வொரு கிறிஸ்துமஸ் மற்றும் ஈஸ்டர் திருநாளுக்கும் பன்னிரண்டு பீட்சாக்கள் (duodecim pizze = twelve pizzas) தரவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது, புழக்கத்திலிருந்துவரும் பீட்சாவின் வடிவம் இத்தாலியின் நேப்பிள்ஸ் பகுதியில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவானது. அதற்கு முன்னர், தட்டையான ரொட்டியின்மேல் பூண்டு, உப்பு, பன்றி இறைச்சி, பாலாடைக் கட்டி, புதினா வகைக் கீரைகள் போன்றவற்றை வைத்துச் சாப்பிட்டிருக்கின்றனர். 1830களில் தான் தக்காளியும் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.
நவீன வகை பீட்சாவுக்கு, 'பீட்சா மார்கரிடா' என்ற பெயரும் உண்டு. 1889ஆம் ஆண்டு இத்தாலியின் ராஜ வம்சத்தினர் ராஃபேல் எஸ்போஸிடோ என்ற பீட்சா உற்பத்தியாளரிடம், அங்கு வந்த ராணி மார்கரிடாவை கௌரவிக்கும் வகையில் புதிய பீட்சா வகைகளை உருவாகுமாறு கட்டளையிட்டனர். அவர் தயாரித்த மூன்று வகை பீட்சாக்களில் ராணிக்கு ஒரு வகை மிகவும் பிடித்துப்போயிற்று. காரணம் அதில் இத்தாலியக் கொடியின் வண்ணங்கள் இருந்ததுதான். சிவப்பு வண்ணம் கொண்ட தக்காளி, பச்சைக்குக் கீரைகள் மற்றும் வெள்ளை நிறத்துக்கு எருமைப் பாலில் தயாரான பாலாடைக் கட்டிகள் இருந்தன. அதனால்தான் இந்த வகை பீட்சாவுக்கு ராணியின் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
19ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்த இத்தாலியர்கள் மூலம் அங்கும் பீட்சா பரவியது. இத்தாலியில் தங்கியிருந்த நேச நாடுகளின் படைகள், இரண்டாம் உலகப் போர் முடிந்து அவரவர் நாட்டுக்குத் திரும்பியபோது பீட்சாவையும் தங்கள் சொந்த நாட்டில் பிரபலப்படுத்தினர். அமெரிக்காவில் 1905ஆம் ஆண்டு லொம்பார்டீஸ் நிறுவனத்தால் முதல் பீட்சா விற்பனையகம் தொடங்கப்பட்டது. தற்போது அமெரிக்க மக்கள் தொகையில் 13% பேர் தினசரி பீட்சா உண்கிறார்களாம்.
பீட்சாவில் அதிக அளவு உப்பு, கொழுப்பு, கலோரிகள் உள்ளதால், அளவோடு சாப்பிடவேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். அதே சமயம் பீட்சா தொடர்ந்து அளவோடு சாப்பிடுபவர்களுக்கு மாரடைப்பு மற்றும் புற்றுநோய் வரும் வாய்ப்புகள் குறைவு என்றும் சொல்கிறார்கள். இதுகுறித்த அதிகாரப்பூர்வ மருத்துவ ஆய்வுகள் இன்னும் செய்யப்படவில்லை. ஆகவே, ஒரு சிலர் இந்த உணவு வகை ஆபத்து என்றும், மற்றும் சிலர் ஆபத்து இல்லை என்றும் கூறுகிறார்கள்.
அமெரிக்காவிலும் கனடாவின் சில பகுதிகளிலும் ஒவ்வோராண்டும் அக்டோபர் மாதத்தை, 'பீட்சா மாதம்' என கொண்டாடுகிறார்கள். அன்றைய தினம் பீட்சாவை ஒரு கட்டுக் கட்டிவிடுவார்கள்.
ஒரு காலத்தில் தெரு ஓரங்களில் மட்டுமே ஏழைகளின் உணவாக விற்கப்பட்டது. பல்வேறு பொருட்கள் படிப்படியாகச் சேர்க்கப்பட்ட பிறகு இன்று செல்வந்தர்களின் விருப்ப உணவாகவே மாறியிருக்கிறது. உலகில் எல்லா பகுதிகளிலும் கிடைக்கும் பீட்சா பலருக்கு எப்போதும் பிடித்த, கனவு உணவுப்பொருள் என்றே சொல்லலாம்.
- லதானந்த்