
தலைமை
அன்று நாங்கள், ஓய்வுபெற்ற இராணுவ லெப்டினன்ட் கர்னல் தியாகராஜனைச் சந்திக்க வந்திருந்தோம். ஓவியாதான் இதற்குக் காரணம். இரண்டு நாட்களுக்கு முன்பு பேசும்போது, “இந்த ஆண்டு டில்லி
குடியரசு தின பரேடுக்கு தலைமை யார் தெரியுமா? தானியா ஷெர்கில்லுன்னு ஒரு யங் லேடி. மொத்த அணிவகுப்புக்கும் ஒரு பெண் தலைமை ஏற்பது இதுதான் முதல் தடவையாம். கேக்கும்போதே சந்தோஷமா இருந்துச்சு. எப்படி செலக்ட் பண்ணாங்களோ” என்று ஆரம்பித்தார்.
உமா மிஸ், ஓவியாவின் ஆர்வத்தைப் பார்த்துவிட்டு, “கர்னல் தியாகராஜனையே கேட்டுருவோமே?” என்றார். இதோ அவர் முன்னால் உட்கார்ந்து கொண்டிருந்தோம்.
“தானியாவைத் தெரியுமா சார்?” ஓவியா தான் ஆரம்பித்தாள்.
“தானியா, 2017இல சென்னையில் இருக்கிற ஆபீசர்ஸ் ட்ரெயினிங் அகாதெமியில தான் படிச்சு பாஸ் அவுட் ஆனாங்க.”
“அணிவகுப்பு அட்ஜூடன்ட் என்பது மிகப்பெரிய பொறுப்பா சார்?” நான் கேட்டேன்.
“நிச்சயமா. கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. டில்லி குடியரசு தின அணிவகுப்புங்கறது எவ்வளவு நீளமானது? குடியரசுத் தலைவர் மாளிகையில் தொடங்கி, செங்கோட்டை வரை கிட்டத்தட்ட 5 கி.மீ. தூரம். அங்கே எத்தனையோ படைப்பிரிவுகள் அணிவகுத்து வருவாங்க. இராணுவ டாங்கிகளும் இதர கருவிகளும் வரும். அவங்க அத்தனை பேரையும் நிர்வாகம் பண்ணி, தலைமையேற்று வழிநடத்துறதுன்னா லேசுப்பட்ட காரியமா? அந்தத் தலைமை இடத்துக்கு தானியா வந்திருக்காங்க. அதுவும் 26 வயசே ஆன, இளம் ஆபீசர்.”
“எப்படி தேர்வு பண்ணியிருப்பாங்க?”
“உடற் தகுதி முக்கியமானது. கூடவே அவங்க பாடிலேங்குவேஜ். மிடுக்கோடு நடக்கும் பயிற்சி. உத்தரவு போடும் வலிமையான குரல் என்று பல விஷயங்களில் தேர்வு நடந்திருக்கும். இவங்கள மாதிரி ஏராளமான ஆபீசர்கள் அந்தந்தப் படைப்பிரிவுகள்ல தேர்வு பெற்று, டில்லி வந்திருப்பாங்க. அவங்க மத்தியில, யார் சிறப்பா இருக்காங்கங்கறதை டில்லி இராணுவ மேலதிகாரிகள் சோதிச்சுப் பார்த்து, தேர்வு செஞ்சு இருப்பாங்க. குடியரசு தின அணிவகுப்புங்கறது உலகமே பார்த்துக் கொண்டிருக்கும் அற்புத விஷயம். அதை தலைமையேற்று நடத்தறதுங்கறது ஒரு கனவு. எல்லோருக்கும் அந்த வாய்ப்புக் கிடைச்சுடாது. தானியா அதுக்குத் தன்னைத் தகுதிப்படுத்திக்கிட்டு இருக்காங்கறதுதான் முக்கியம்.
இங்கே சென்னை இராணுவப் பயிற்சி மையத்துல பரேடு நடக்கும்போது, அணிவகுப்பு அட்ஜூடன்ட், குதிரை மேல ஏறிக்கொண்டு, வளைய வருவாங்க. ஒவ்வொரு பகுதியா போய், அவங்க எப்படி பயிற்சி பண்றாங்கன்னு கண்காணிப்பாங்க. பார்க்கவே அழகாக இருக்கும்.
அதைத்தான் இப்போ, தானியா பண்ணிக்கிட்டு இருக்காங்க. தான் மட்டும் சிறப்பாக செஞ்சா போதாது. மொத்த அணிவகுப்புக்குமே அவங்கதான் பொறுப்பு. அதன் நிர்வாகத்துக்கும் அவங்க தான் பொறுப்பு.”
ஓவியாவுக்குச் சிலிர்த்துவிட்டது.
“அவங்க குடும்பமே, இராணுவக் குடும்பமாமே சார்?”
“ஆமாம். தானியா நாலாவது தலைமுறை. அவங்க கொள்ளு தாத்தா, தாத்தா, அப்பா எல்லோரும் இந்திய இராணுவத்துல வேலை செஞ்சிருக்காங்க. தானியா, நாக்பூர் பல்கலைக்கழகத்துல எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன்ல பி.டெக். பட்டம் வாங்கினவங்க. அதுக்கு அப்புறம், இராணுவப் பயிற்சிக்கு வந்தவங்க. இன்னிக்கு உலகமே திரும்பிப் பார்க்கும் ஓர் உன்னத இடத்துக்கு முன்னேறியிருக்காங்க.”
“எங்களாலயும் இது மாதிரி முன்னுக்கு வர முடியுமா சார்?”
“தாராளமா, பிளஸ் டூ முடிச்சவுடனே இராணுவத்துல சேரலாம். எந்த மேற்படிப்பு படிச்சுட்டும் இராணுவத்துல சேரலாம்.
ஆர்வமும் துணிச்சலும் தான் வேணும். நாட்டின் மேல் பற்றும் ஈடுபாடும் இருந்தால் போதும். இந்தியா உங்களை எந்த உயரத்துக்கும் அழைச்சுக்கிட்டுப் போயிடும். அதுக்கு நேரடி உதாரணம் தான், தானியா ஷெர்கில்.”
“இந்த அளவுக்கு பரேடுக்கு தலைமையேற்பதால, தானியாவுக்கு பதவி உயர்வெல்லாம் கொடுப்பாங்களா?”
“அதைவிட முக்கியமா மெடல் கொடுப்பாங்க. அதை இராணுவத்துல 'டெகரேஷன், கமென்டேஷன்'னு சொல்வாங்க. அதாவது, நமது முன்னேற்றத்துக்கும் பங்களிப்புக்கும் இராணுவம் கொடுக்கும் அங்கீகாரம் அது. இந்திய மக்களோட அங்கீகாரத்தோடு, அரசாங்க மெடலும் கிடைக்கும்போது, அவங்களோட ஈடுபாடு எவ்வளவு அதிகமாக இருக்குன்னு யோசிச்சுப் பாருங்க.” என்று முடித்துக்கொண்டார் கர்னல் தியாகராஜன்.
அதற்கு மேல் பேச வார்த்தைகளே இல்லை. ஜனவரி 26 அன்று, தானியா தலைமையில் நடைபெறப் போகும் அணிவகுப்பைப் பார்க்க வேண்டும் என்ற ஆசைதான் அதிகமானது.