PUBLISHED ON : ஜன 20, 2020

தெற்காசியா நாடுகளில் குப்பை மேலாண்மை என்பது, மிகப்பெரிய சவாலான விஷயம். அதிலும் வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளில் குப்பைகளை அகற்றுவதில் ஏகப்பட்ட சிக்கல். அதைச் சரிசெய்யும் வகையில், பலரும் புதுப்புது முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். சிலர் அண்டை நாட்டு குப்பை மேலாண்மை முறையைப் பின்பற்றியும் வருகிறார்கள்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் குப்பைகளை அகற்றுதல் இன்னமும் மிகவும் சிரமமான விஷயம்தான். அங்குள்ள பல பகுதிகளில் குப்பைகளால் நோய்த் தொற்று உருவாகிறது. ஆனால், பிலிப்பைன்ஸிலேயே இருக்கும் ஒரு சிறிய நகரம் பலருக்கும் முன்மாதிரியாகத் திகழ்கிறது. அது போட்ரெரோ என்கிற சிறு நகரம். இங்கு 13,500 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 54,000 உறுப்பினர்கள் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயற்பட்டு, குப்பைகளுக்கானத் தீர்வை வெற்றிகரமாகக் கண்டறிந்திருக்கிறார்கள்.
முதற்கட்டமாக, வீட்டில் சேகரமாகும் குப்பைகளை வீட்டில் உள்ளவர்கள் எவ்விதம் தரம்பிரிக்க வேண்டும் என்பதை, அலுவலர்கள் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள். இதன்படி சமையலறைக் கழிவுகள், தோட்டக் கழிவுகள், மறுசுழற்சிக் கழிவுகள், எஞ்சிய கழிவுகள் என்று நான்கு வகையாகப் பிரிக்கிறார்கள். பின்னர் தனித்தனியாகப் பைகளில் போட்டு கட்டி வைக்கிறார்கள்.
இந்தக் குப்பைகளைச் சேகரிப்பதற் கென்றே அலுவலர் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர் வீடுவீடாகச் சென்று குப்பைகளைச் சேகரிக்கிறார்.
குப்பைகள் முறையாகக் கட்டப்படாமல் இருந்தால் அவற்றை குப்பை சேகரிப்பவர் வாங்கிக்கொள்வதில்லை.
அதுமட்டுமல்லாமல் குப்பைகளை ஒவ்வொரு குடும்பமும் எவ்விதம் தரம் பிரிக்கின்றன என்பதைக் கண்காணிக்கவும் இங்கே அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் வீடுவீடாகச் சென்று மக்கள் எந்த அளவுக்கு ஒழுங்குடன் அந்தப் பணிகளைச் செய்கிறார்கள் என்பதையும் மேற்பார்வையிடுகிறார்கள். இதன் காரணமாக, கிட்டத்தட்ட தொண்ணூறு சதவீத மக்கள் தற்போது குப்பைகளைச் சரியாக அப்புறப்படுத்தும் கலையில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.
இப்படி போட்ரெரோ பகுதியில் சேகரமாகும் குப்பைக் கழிவுகளில் ௬௦ சதவீதம் மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் நிலையில் இருப்பதாகவும், தேவையற்ற கழிவுகள் வெறும் ௧௫ சதவீதம் மட்டுமே சேகரமாவதாகவும், பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள, 'மதர் எர்த் பௌண்டேஷன்' என்கிற தனியார் தன்னார்வத் தொண்டு நிறுவனம் அறிவித்துள்ளது.
இவை எல்லாவற்றையும் தாண்டி, சமையலறைக் கழிவுகளை சுமார் 20 சதவீதக் குடும்பத்தினர் விலங்குகளுக்கு உணவாகக் கொடுத்து விடுகிறார்கள். இவர்களைப் பார்த்து பல நகரங்களும் இந்த முறையைச் செயற்படுத்த உள்ளன.
- காரா

