PUBLISHED ON : ஜன 20, 2020

இந்தாண்டு பல இடங்களில் குளிர் அதிகமாக இருக்கிறது. வட மாநிலங்களில் வழக்கத்தைவிட வெப்பமும் சரி, குளிரும் சரி இரண்டுமே அதிகம்தான். இதன் காரணம் என்னவாக இருக்கும் என, இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் ஆய்வை மேற்கொண்டது.
மத்திய தரைக்கடலில் உருவாகும் வெப்பமண்டலப் புயலானது, இந்தியத் துணைக்கண்டத்தின் வடமேற்குப் பகுதிகளில் திடீர் குளிர்கால மழையை உருவாக்கும். கடந்த ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில்கூட மேற்சொன்னதுபோல நிகழ்ந்தது.
குறிப்பாக, இமயமலையின் மேற்குப் பகுதிகளில், கடந்த ஆண்டு டிசம்பர் 10 முதல் 12ஆம் தேதி வரை மழைப்பொழிவும், பனிப்பொழிவும் இருந்தது.
வடக்கு சமவெளிப் பகுதிகளான பஞ்சாப், ஹரியாணா, டில்லி, உத்தரப் பிரதேசம், மேற்கு பீஹார், வடக்கு ராஜஸ்தான், வடக்கு மத்தியப்பிரதேசம் போன்ற இடங்களில் டிசம்பர் 11 முதல் 13 ஆம் தேதி வரை வெப்பமண்டலப் புயலின் தாக்கம் ஏற்பட்டது.
இந்தத் தாக்கத்தால் இப்பகுதிகளில் ஈரமான காலநிலை நிலவி, மேகக்கூட்டம் உருவானது.மேகக்கூட்டம் உருவானதன் காரணமாக, அந்தப் பகுதிகளில் சூரிய வெளிச்சம் ஊடுருவ முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டது.
இதன் காரணமாகவே, டிசம்பர் 11 முதல் 13ஆம் தேதி வரை அப்பகுதிகளில் சில்லென்ற காலநிலை உருவானது.
பின்னர், அடுத்தடுத்த நாட்களில் வெப்பமண்டலப் புயல் வடக்கு சமவெளிப் பகுதிகளைவிட்டு விலகிப் போனாலும், மேகங்கள் கலையவில்லை. போதாக்குறைக்கு வளிமண்டலத்தில் இருக்கும் மாசு, நிலைமையை இன்னும் மோசமாக்கியது.
இதன் விளைவாக வளிமண்டலத்தில் ஒருவித உயர் அழுத்தம் உருவானது. இந்த அழுத்தம் கடந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி வரை நீடித்தது. இதன் காரணமாக, 30ஆம் தேதி வரை கடுங்குளிரும் நீடித்தது.
போதுமான சூரிய ஒளி இல்லாமல் பகல் பொழுதிலும் குளிர்ந்த சூழ்நிலையே நிலவியதால், பூமியின் மேற்பரப்பானது இரவுநேரத்தில் வெளியிடத் தேவையான வெப்பத்தைக் கிரகிக்க முடியாத சூழ்நிலை உண்டானது.
இதன் காரணமாகவே இரவு நேரங்களில் அசாத்தியக் குளிர் உண்டானது. குறிப்பாக, இந்தியாவின் வடக்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளில் டிசம்பர் 25ஆம் தேதி முதல் குளிர் அலைகள் (cold waves) வீசத் தொடங்கின.
இப்படி குளிரும், குளிர் அலைகளும் சேர்ந்ததால், இந்தியாவின் வடக்குப் பகுதிகளில் நிலைமை விபரீதமான கட்டத்தை நோக்கிச் சென்றது. இந்தக் கடும் பனிப்பொழிவால் வெளிச்சம் குறைவாகவே காணப்படுகிறது. மேலும், இந்தப் பகுதியில் சுமார் 100 மீட்டர் தூரத்தில் உள்ள பொருட்களைக்கூட காண முடியவில்லை. வழக்கத்தைவிட இந்தாண்டு வட மாநிலங்கள் கடும் பனிப்பொழிவை சந்தித்து வருகின்றன.
- சு.கவிதா

