PUBLISHED ON : அக் 03, 2016

முன்னா: டேய் ஷார்ப்பு நேத்து எனக்கொரு கனவு. ஒரு பறக்கும் தட்டு, அதுல இருந்து ஏலியன்கள் வீட்டு மொட்டை மாடில இறங்குற மாதிரி!
சங்கர்: ஏதாச்சும் ஹாலிவுட் படம் பார்த்தியா? அவங்கதான் அடிக்கடி ஏலியன பூமிக்கு வர வைப்பாங்க.
மு: அப்படின்னா நெஜமாவே ஏலியன் இருக்காங்களா? அவங்க எலி மாதிரிதான இருப்பாங்க?! வால் இருக்குமா?
ச: அவங்க எலியன் இல்லடா ஏலியன். வேற்று கிரக வாசிகள்.
மு: கிரகம் புடிச்ச ஏலியன் அவங்க கிரகத்துல இருந்து நம்ம கிரகத்துக்கு ஏன் வரணும்?
ச: ஏலியன்ஸ் விஷயமெல்லாம் கட்டுக்கதையாக்கூட இருக்கலாம். பிரான்ஸ் மன்னன் நெப்போலியன் கி.பி.1794ல் பல நாட்கள் காணாமல் போயிருந்தார். ஒரு வித்தியாசமான மனிதன் அவரைக் கடத்திட்டுப் போனதாக ஒரு கதையும் சொன்னாங்க.
மு: வாவ்வ்வ்... கதை சூப்பரா இருக்கே. நெப்போலியன் vs ஏலியன் அப்படின்னு ஒரு படம் இன்னுமா ஹாலிவுட்ல வராம இருக்கு?!
ச: அது என்ன படமோ தெரியல. ஆனால், எகிப்தியர்கள் வரைந்த சித்திரவடிவ படங்கள், பறக்கும் தட்டுகளில் ஏலியன்கள் நைல் பள்ளத்தாக்கிற்கு வந்தார்கள் என்பதை உறுதி செய்கின்றன.
மு: அந்தச் சித்திரம் வரைஞ்ச எகிப்தியனுக்கும் எனக்கு வந்த மாதிரி கனவு வந்திருக்கும். ஒருவேளை, நான் ஏன் போன பிறவில பிரமிடு மம்மியா இருந்திருக்கக் கூடாது?!
ச: 'எகிப்து பிரமிடுகளையும் மனிதன் உருவாக்கியிருக்க சாத்தியமே இல்லை, அவை ஏலியன்களால் உருவானவை' இப்படிச் சொல்றவங்களும் ரொம்பப் பேர் இருக்காங்க.
மு: இது நிஜ கதையா, இல்ல நீயா அடிச்சு விடுற கதையா?
ச: நிஜம்தான்! அவங்க நம்மளவிட அட்வான்ஸ்டு டெக்னாலஜி தெரிஞ்சவங்களாக இருக்கலாம்ன்னு விஞ்ஞானிகள் சொல்றாங்க.
மு: என்ன டெக்னாலஜி தெரிஞ்சிருந்தாலும் ரோபோ மாதிரி ஃப்ரெண்டா பழகுனா சரி!
ச: வேற்றுகிரக வாசிகளைத் தேட, உலகின் மிகப் பெரிய ரேடியோ தொலைநோக்கியை சீனா உருவாக்கி இருக்கிறது. எப்படியும் ஏலியன்களைக் கண்டுபிடிச்சுருவாங்க!
மு: மினியன் மாதிரி ஏலியனும் காமெடியா இருந்தா சூப்பரா இருக்கும்!
