
காடுகள் என்றாலே மரங்கள் நிறைந்திருக்கும். ஆனால் காடுகள் செழிப்பாக இருக்க வேண்டும் என்றால், புதர்கள் அவசியம். இந்தப் புதர்கள் ஏன் அவசியம் என்பதற்கு உதாரணமாக, ஜெர்மனியில் நடந்த சம்பவம் ஒன்றைப் பார்ப்போம்.
ஜெர்மனியில் உள்ள காட்டுப் பகுதிக்கு வந்த புதிய வன இலாகா அதிகாரி ஒருவர், காட்டை சுத்தப்படுத்தும்போது, வேண்டாத செடிகளையும், புதர்களையும் வெட்டி எறிய வேண்டும் என்று முடிவு செய்தார். மேலும் காட்டில் மரங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்று நினைத்தார். வேலையாட்கள் காட்டில் கீழே கிடந்த பழுத்த இலைகளை ஒன்றாகச் சேர்த்து எரித்தனர். புதர்களையும் வெட்டி எறிந்தனர்.
இதன் பிறகு வீடு சுத்தமாக இருப்பதுபோல, காடும் சுத்தமாக இருந்தது. புதிய மரக்கன்றுகள் வரிசையாக நடப்பட்டன. இவற்றைப் பார்க்கும்போது, சுவர் ஓரத்தில் வரிசையாக நாற்காலிகள் போடப்பட்டிருப்பது போல் இருந்தன. இதைப் பார்த்ததும், புதிய வன இலாகா அதிகாரி மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். மூன்று ஆண்டுகள் சென்றன.
அப்போது, காட்டில் சில புதிய விஷயங்களை அதிகாரி கண்டார். மரங்கள் மெல்லியதாக இருந்தன. ஊசி இலை மரங்களின் இலைகள் எண்ணிக்கை குறைவாக இருந்து ஒளி ஊடுருவும் தன்மையைப் பெற்றிருந்தன. காடு முழுவதும் இருந்த மரங்கள், இறந்து கொண்டிருந்தன. சில மரங்கள் இலையுதிர் காலம் போல் இலைகளே இல்லாமல் இருந்தன. பெரிய மரங்கள் சில புயலில் சாய்ந்தது போல் கிடந்தன.
காட்டின் நிலைமையைப் பார்த்ததும், வன இலாகா அதிகாரி திகைப்படைந்தார். அவர்கள் காட்டை சுத்தப்படுத்தும்போது, எதை அகற்றக் கூடாதோ, அதையும் அகற்றி விட்டனர். இதனால் வன இலாகா அதிகாரியும், காடும் வருந்தத்தக்க அனுபவத்தை பெற்றது.
காட்டில் புதர்கள் முக்கியமானவையா?
ஆம்; முக்கியமானவைதான். காடு என்பது, வெறும் காடு அல்ல. அது மக்கள் தொகை அதிகமாக இருக்கும் நகரம் போன்றது. மேலும் அங்கு பறவைகளும், பூச்சிகளும், விலங்குகளும் வாழ்கின்றன. அங்கு உள்ள சில பறவைகள், தரைக்கு நெருக்கமாகக் கூடு கட்டுகின்றன. அவற்றை நம்மைப் போன்ற மனிதர்கள் கண்டுபிடிப்பது கடினம்.
புதிய ஆள் காட்டிற்குள் வருவதை உணர்ந்தவுடன், அவ்வகைப் பறவைகள் அடர்ந்த புதரினுள் மறைந்து கொள்கின்றன. ஒவ்வொரு பறவை இனத்துக்கும், தனித்தன்மை வாய்ந்த ஒலி (சத்தம்) உள்ளது. அதைக் கொண்டு எந்தப் பறவை என்று கண்டுபிடிக்கலாம். நாம் காட்டிற்குள் சென்றால், பறவைகளின் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். காட்டைச் சுத்தம் செய்யும்போது, புதர்களை வெட்டியதால் பறவைகள் வேறு இடத்திற்கு சென்றன. பறவைகள் இல்லாமல் காடு, தனிமை அடைந்தது மரங்கள் உலர ஆரம்பித்தன.
காட்டில் பறவைகள் முக்கியமானவையா?
ஆம், முக்கியமானவைதான். பறவைகள் கிளைகள் மீது சும்மா இருப்பதில்லை. அவை காலையிலிருந்து மாலை வரை கிளைகளையும், அடிமரத்தையும் கோதிவிடுகின்றன. பறவைகள் அதனுடைய போக்கிலேயே, காட்டைச் சுத்தப்படுத்துகின்றன.
பறவைகளும், குஞ்சுகளும் சின்னஞ் சிறிய பூச்சிகளைத் தேடி உண்கின்றன. காட்டில் உள்ள பறவைகள் தினந்தோறும் நூற்றுக்கணக்கான பூச்சிகளை சாப்பிடுகின்றன. புதர் இல்லாத அந்தக் காட்டிலிருந்து பறவைகள் சென்றுவிட்டதால், பூச்சிகள் பெருகி மரங்களை அரித்து விட்டன.
இயற்கையில் ஒவ்வொன்றும் தொடர்புடையன.
மரங்கொத்திப் பறவை, காட்டின் பாதுகாவலன். மரத்தில் அங்குமிங்கும் அலைந்து தட்டி பார்க்கிறது. மரத்திற்குள் ஏதாவது பூச்சியிருந்தால் சாப்பிட்டு விடுகிறது. காட்டில் உள்ள எறும்புகள், கேடு விளைவிக்கும் சிறிய பூச்சிகளை சாப்பிடுகின்றன.
ஒரு காட்டைப் பாதுகாக்க மரங்கள், பறவைகள் ஆகியவற்றைப் பாதுகாக்க வேண்டும். புதர்களையும், பறவையின் கூடுகளையும் எறும்புப் புற்றுகளையும் சிதைக்கவோ, அகற்றவோ அனுமதிக்கக் கூடாது.
- ப.கோபாலகிருஷ்ணன்