PUBLISHED ON : ஜூன் 27, 2016

103 டெஸ்ட் போட்டி
ஒரு நாள் போட்டி 236
28 சர்வதேச 20-20
125 ஐ.பி.எல். போட்டி
விக்கெட்டு 830
இந்திய அணியில், பந்து வீச்சாளர்கள் (Bowlers) எத்தனை பேர் வந்தாலும், ஹர்பஜன் சிங் மட்டுமே 'சுழல் கிங்' ஆக வலம் வருகிறார். இவர், 1980 ஜூலை 3ல் பஞ்சாப், ஜலந்தர் நகரில் பிறந்தார். இவருக்கு மொத்தம் ஐந்து சகோதரிகள். எல்லாருக்கும் செல்லப் பிள்ளையாக இருந்த இவருடைய செல்லப் பெயர்கள் என்ன தெரியுமா? பாஜி, டர்பனேட்டர்!
சீரியஸாக துறுதுறுவென களத்தில் ஆடினாலும் இந்திய அணியிலேயே மிகவும் நகைச்சுவை உணர்வு வாய்ந்தவர் இவர்தான்! உடன் விளையாடும் சக வீரர்களைக் கலாய்ப்பதில் கெட்டிக்காரர் பாஜி. சில வேளைகளில் இந்திய அணி பற்றிக்கூட நகைச்சுவைக் கருத்துகளைப் பேசியிருக்கிறார். அதுமட்டுமல்ல, மற்ற வீரர்கள் போல் மிமிக்ரி செய்வதிலும் வல்லவர்!
ஜிம்பாப்வேயில் 2005ஆம் ஆண்டு நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடரில், கங்குலி தலைமையிலான இந்திய அணி, நியூஸிலாந்துக்கு எதிராக மோசமான தோல்வியைச் சந்தித்தது. தோல்வியடைந்த வருத்தத்தில் இந்திய அணியினர் மகிழ்ச்சியைத் தொலைத்துச் சோகமாக இருந்துள்ளார்கள். அப்போது, ஹர்பஜன் சிங், விளையாட வைத்திருக்கும் கிரிக்கெட் மட்டைகளை எண்ண ஆரம்பித்திருக்கிறார். அணியில் இருக்கும் 15 பேருக்கு 110 மட்டைகள். 'நாம அடிச்ச ரன்களை விட மட்டைகள் அதிகமா இருக்கே' எனச் சொல்லி முடித்ததும் ஓய்வறை முழுக்க சிரிப்புச் சத்தம்.
பெங்களூருவில் 1998ல் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 18 வயதில் அறிமுகமானார். டெஸ்டில் 'ஹாட்ரிக்' வீழ்த்திய முதல் இந்திய பவுலர் என்ற சாதனை படைத்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2001ல் விளையாடும்போது, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவருக்கு, பஞ்சாப் காவல் துறை, 'கௌரவ துணைக் கண்காணிப்பாளர்' பதவியை வழங்கிக் கௌரவப்படுத்தியது.
சோதனைகள் பலவற்றைக் கடந்துதான் சாதனைகள் பல செய்திருக்கிறார் 'டர்பனேட்டர்'!
இவர் 'தூஸ்ரா' முறையில் ஆஃப் ஸ்பின் பந்து வீச்சில் சிறந்தவர். உருது மொழியில் தூஸ்ரா என்றால் 'இரண்டாவது' அல்லது 'மற்றொன்று' என்று அர்த்தம்.
