PUBLISHED ON : மே 23, 2016

உலக ஆமைகள் பாதுகாப்பு தினம் மே 23
மெதுவாகச் செல்வதற்கு உதாரணமாக ஆமைகளைச் சொல்வார்கள். ஆமை நிலத்தில் ஒரு மணி நேரத்திற்கு 70 மீட்டர் தொலைவு வரைதான் செல்லும். ஆனால், நீரில் வேகமாக நீந்தும்.
ஆமைகளின் மூன்று வகைகள்
1. டர்ட்டில் (Turtle) - நிலத்திலும், நீரிலும் வாழும் கடல் ஆமைகள்
2. டார்ட்டாய்ஸ் (Tortoise) - காட்டின் நிலப்பரப்பில் மட்டும் வாழும் ஆமைகள்
3. டெராபின் (Terrapin) - ஆறு, குளம் போன்ற சுத்தமான நீர் நிலைகளில் வாழும் ஆமைகள்
நீரிலும், நிலத்திலும் வாழ்வதால் ஆமைகளை இரு வாழ்விகள் என்கிறார்கள். இவை முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் இனத்தைச் சேர்ந்தவை. ஆமையின் மேல் ஓடு பலமானது. இதன் விலா எலும்புகளும் முதுகு எலும்புகளும் ஒன்றாகி உடல் தசைகள் சுருங்கிக் காணப்படும். இதன் நுரையீரல் மேல் ஓட்டை ஒட்டியவாறு அமைந்திருக்கிறது. ஆமையின் கண் சிறியது. அனைத்து வண்ணங்களையும் ஆமையால் காண முடியும். ஆமைக்கு, பற்களுக்குப் பதிலாக கொம்பு போன்ற அசையாத அலகு இரு தாடைகளிலும் இருக்கிறது. முகரும் திறன் மிகவும் அதிகம்.
ஆமையின் கை, கால்கள் நீர், நிலத்தில் வாழ ஏற்றதாக உள்ளன. முன் கால்கள் துடுப்புகளைப் போல் இருப்பதால் மிக வேகமாக நீந்திச் செல்லும். பின்னங்கால்களில் உள்ள விரல்கள், சவ்வு போன்ற அமைப்பால் இணைக்கப்பட்டுள்ளன. கடல் ஆமைகளின் வாயிலும், கழிவுகளை வெளியேற்றும் பகுதியிலும் சிறப்பு ரத்த நாளங்கள் உள்ளன. நீரில் மூழ்கி இருக்கும் போது பிராண வாயுவை நீரிலிருந்து பிரித்தெடுத்துச் சுவாசிக்க இவை உதவுகிறது. நிலத்தில் வாழும் ஆமை தன் தலை, கால் ஆகியவற்றை ஆபத்து வரும்போது ஓட்டுக்குள் இழுத்துக்கொண்டு தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும். ஆனால், கடல் ஆமைகளால் இப்படிச் செய்ய முடியாது. வாழ்நாள் முழுவதும் பல நாட்டுக் கடல் பகுதிகளில் சுற்றும் கடல் ஆமை, இனப்பெருக்க காலத்தில் மட்டும், தான் பிறந்த கடற்கரைக்கு வந்துதான் முட்டையிடும்.
உலகில் அழிந்துவரும் இனங்களில் ஆமையும் ஒன்று. உலகம் முழுவதும் சுமார் 300 கடல் ஆமை வகைகள் காணப்படுகின்றன. இறைச்சிக்காகவும் முட்டைக்காகவும் ஆமைகள் வேட்டையாடப்படுகின்றன. மீன்பிடி படகுகளின் விசிறிகளில் மோதுவதாலும், மீன் வலைகளில் சிக்கியும் இவை இறக்கின்றன. ஆமைகள் முட்டையிடும் இடங்கள் அழிக்கப்படுவதும் ஆமை இனம் அழிந்து வருவதற்கு முக்கியக் காரணம்.
ஆமைகள் கடல் வாழ் உயிரின உணவுச் சங்கிலியில் முக்கிய இடம் பிடிக்கின்றன. தற்போது, இவை அழிந்து வருவதால் கடல் உயிரின உணவுச் சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டு பல்வேறு கடல்வாழ் உயிரினங்கள் அழியும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

