
தொலைக்காட்சியில் புயல் பற்றிய எச்சரிக்கைச் செய்திகள் சொல்வதைக் கேட்டு இருப்பீர்கள். அப்போது, 'புயல் எச்சரிக்கைக் கூண்டு 1 ஏற்றப்பட்டுள்ளது; 2 ஏற்றப்பட்டுள்ளது' என எண்களைக் குறிப்பிட்டுச் சொல்வார்கள். அது என்ன கூண்டு... என்ன எண்?
புயல் வீசும்போது பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாவது கடலோரப் பகுதிகள். குறிப்பாகத் துறைமுகங்கள். புயல் குறித்த எச்சரிக்கையைத் தெரிவிக்க துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டுகள் ஏற்றப்படுகின்றன. துறைமுகங்களை நோக்கி வரும் படகுகள், கப்பல்கள், கடலில் இருந்து கரையை நோக்கி வருபவர்களை, மீனவர்களை எச்சரிக்க விடுக்கப்படும் 'சிக்னல்'தான் இந்தக் கூண்டுகள். இந்த எச்சரிக்கையைத் தெரிவிக்க, கடலில் இருந்து காண ஏதுவாக, துறைமுகத்தில் ஓர் உயர்ந்த கம்பத்தில் பகல் நேரத்தில் கூண்டுகளையும், இரவு நேரத்தில் சிகப்பு- வெள்ளை விளக்குகளையும் ஏற்றுவார்கள். கொடி ஏற்றினால் காற்றில் கிழிந்துவிட வாய்ப்புண்டு. அதனால் கூண்டு. புயல் பாதிப்பைக் குறிக்கிற எண்கள் இந்த கூண்டுகளுக்கு பெயர்களாக அளிக்கப்படுகிறது.
புயல் கூண்டு எண் குறித்த விளக்கம் :
1 - புயல் உருவாகக்கூடிய வானிலை உள்ளது.
2 - புயல் உருவாகி உள்ளது.
3 - திடீர் காற்றுடன் மழை பெய்யக்கூடும்.
4 - துறைமுகம் புயல் அச்சுறுத்தலுக்கு ஆளாகலாம். இது உள்ளூருக்கான எச்சரிக்கை.
5 - துறைமுகத்தின் இடப் பக்கமாகப் புயல் கடப்பதால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படலாம்.
6 - துறைமுகத்தின் வலப் பக்கமாகப் புயல் கடப்பதால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படலாம்.
7 - துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படக்கூடிய ஆபத்து
8 - துறைமுகத்தின் இடப் பக்கமாக புயல் கரையைக் கடப்பதால் கடுமையான வானிலைக்கு நிச்சயம் உட்படும் என்று எச்சரிக்கப்படுகிறது.
9 - துறைமுகத்தின் வலப் பக்கமாக கரையைக் கடந்து செல்லும் நேரத்தில் புயலினால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு நிச்சயம் உட்படும் என்று எச்சரிக்கப்படுகிறது.
10 - துறைமுகம் அல்லது அதன் அருகே கடந்து செல்லும் புயலினால் பெரிய அபாயம் ஏற்பட்டிருப்பதாக அர்த்தம்.
11 - வானிலை எச்சரிக்கை மையத்துடன் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலையால் கேடு விளையலாம்.

