
மனிதன் கண்ணில்பட்ட நூறு ஆண்டுகளுக்குள்ளாக ஒட்டு மொத்தமாக அழிந்துபோன ஒரு பறவை இனம் உள்ளது. டோடோ (Dodo) என்ற பறவை இனம்தான் அது. மொரிசியஸ் தீவுக்கு 1598-ஆம் நூற்றாண்டில் வந்து இறங்கிய போர்ச்சுகீசிய மாலுமிகள் புதுவிதமான பறவை இனம் ஒன்றைக் கண்டார்கள். அப்பறவையின் மூக்கு வாத்து போலவும், உடல் கோழியைப் போலவும் இருந்தது. இருபது கிலோ வரை எடை இருக்கும் அந்தப் பறவை யாரைப் பார்த்தாலும் விலகி ஓடாது. அருகிலேயே நிற்கும். அதனால் அந்தப் பறவைக்கு 'முட்டாள் பறவை' என்ற பொருள் தரும் 'டோடோ' என்று பெயரை மாலுமிகள் வைத்தனர். எளிதில் சிக்கிக்கொள்ளும் டோடோ பறவையை, உணவுக்காக வேட்டையாடத் தொடங்கினார்கள். கடைசியாக மிச்சப்பட்ட ஒரே டோடோ பறவையும் 1681ஆம் ஆண்டில் இறந்துபோனது.
டோடோ பறவையினம் அழிந்த பிறகு மொரிசியஸ் தீவில் பிரமாண்டமாக நின்று கொண்டிருந்த 'கல்வாரியா' (Calvaria) என்னும் மர இனமும் மெல்ல அழியத் தொடங்கியது. டோடோ பறவை, கல்வாரியா மரத்தின் பழங்களை விரும்பி உண்ணும். அப்படி உண்டு டோடோ பறவைகள் எச்சமாக இட்ட கல்வாரியா மரத்தின் விதைகள் மட்டுமே மீண்டும் முளைக்கும்! இப்படி ஓர் ஆச்சரியமான உறவு, பறவைக்கும் மரத்திற்கும் இருந்திருக்கிறது. இயற்கைக்கும், உயிரினங்களுக்கும் இடையே உள்ள உறவைப் பாதுகாக்க வேண்டியது முக்கியம். அப்படிப் பாதுகாப்பதன் மூலம் நாம் வாழும் பூமியையும் பாதுகாக்கலாம்.

