PUBLISHED ON : டிச 30, 2019
இந்திய வங்கித் துறையில் அரசாங்கத்தின் பொதுத் துறை வங்கிகள், தனியார் வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள் என்று பலரும் கோலோச்சுகிறார்கள். இதில், சிறிய வங்கிகள் தங்களுக்கென ஓர் இடத்தை ஏற்படுத்திக்கொண்டு இருப்பது பலருக்கும் பிடித்திருக்கிறது.
அதுவும், உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, 2019இல் பங்குச்சந்தைக்கு வந்தது. அதன் வளர்ச்சிக்காக கூடுதல் நிதி தேவைப்பட்டது. அதற்காக பொதுமக்களிடம் இருந்து பணத்தைத் திரட்ட, பங்குச் சந்தைக்கு வந்தது.
37 ரூபாய் மதிப்புடைய இதன் பங்குகள், இந்தியப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் நாளில் ரூ. 58.75 வரை விலை உயர்ந்தது. டிசம்பர் கடைசிய்ல 53 ரூபாயாக இதன் மதிப்பு நிலைத்திருக்கிறது.
இது பல செய்திகளைச் சொல்கிறது. சின்ன வங்கிகளுக்கு என்று தனியொரு நடைமுறை இருக்கிறது. அதன் வரவு செலவுகளைக் கையடக்கமாக வைத்துக்கொள்ள முடியும். தகுதியானவர்களைப் பார்த்து கடன் கொடுக்க முடியும். கொடுத்த கடனை நிச்சயம் திரும்ப வாங்க முடியும்.
அதாவது, இத்தகைய சிறிய வங்கிகளிடம் வாராக்கடன் என்ற பிரச்னை பெருமளவு இருக்காது. அவற்றால், சிறப்பாக நிர்வகிக்க முடியும்.
நாம் வங்கிகளிடம் இதைத்தானே எதிர்பார்க்கிறோம்? நாம் செய்யும் சேமிப்பு, நல்லபடியாக வளர வேண்டும். அதேசமயம், அது பாதுகாப்பாகவும் இருக்கவேண்டும். வங்கியும் வளர வேண்டும், பொதுமக்களாகிய நாமும் உயரவேண்டும்.
பெரிய வங்கிகளைவிட, சிறிய வங்கிகள் இதனைச் சிறப்பாகச் செயற்படுத்துகின்றன. உஜ்ஜீவன் சிறிய வங்கியைத் தொடர்ந்து மேலும் பல சிறிய வங்கிகள், பங்குச் சந்தைக்கு வரவிருக்கின்றன.
2019இல் இந்த முன்னேற்றம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
