PUBLISHED ON : மார் 12, 2018

கடற்கரையோர யூனியன் பிரதேசப் பகுதி டையூ (Diu). இது, தனது மின்சாரத் தேவைகளுக்கு, அண்டை மாநிலமான குஜராத்தையே சார்ந்து இருந்தது. ஆனால், கடந்த மூன்றாண்டுகளில் இங்கு, சூரிய ஒளி மின் உற்பத்தி பல மடங்கு பெருகியது. தற்போது, இந்தியாவிலேயே முழுமையாக சூரிய ஒளி மின்சக்தியைப் பயன்படுத்தும் முதல் யூனியன் பிரதேசம் என்ற பெருமையை டையூ பெற்றுள்ளது.
இங்கு, 50 ஏக்கர் பரப்பில் சூரிய ஒளி மின்சக்தி தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. நாளொன்றுக்கு 13 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகிறது. அதில் 3 மெகாவாட் வரை, கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள தகடுகளில் இருந்தே கிடைக்கிறது. மீதமுள்ள 10 மெ.வா. மின்சாரம், மின் நிலையங்களில் உற்பத்தியாகிறது.
அரபிக் கடலின் ஓரத்தில் அமைந்துள்ள டையூ தீவு, 1961ஆம் ஆண்டுதான் இந்திய ராணுவ நடவடிக்கையின் காரணமாக போர்ச்சுகீசியர்களின் வசமிருந்து விடுதலை பெற்றது. அதன்பின், கோவா, டையூ மற்றும் டாமன் பகுதிகள் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டன. பிறகு, இக்கூட்டமைப்பிலிருந்து கோவா பகுதி மட்டும் தனி யூனியன் பிரதேசமாக பிரிந்து சென்றுவிட்டது. ஆனாலும் இம்மூன்று பகுதிகளின் மின்சார வாரியம், ஒரே நிர்வாகத்தின் கீழ் உள்ளது.
“56 ஆயிரம் பேர் மட்டுமே வசிக்கும் சிறிய பகுதி டையூ. இதன் குடிநீர் மற்றும் மின்சாரத் தேவைகளுக்கு குஜராத்தையே நம்பியிருந்தோம். மின் உற்பத்தியில் தற்சார்பு பெறவும், மின் இழப்பைத் தவிர்க்கவும் சூரிய ஒளி மின்சக்தி உற்பத்தியில் இறங்கினோம். தற்போது, மக்களின் மின் கட்டணச்சுமையும் வெகுவாகக் குறைந்துள்ளது” என, மின்வாரிய பொறியாளர் மிலிந்த் தெரிவித்துள்ளார்.
சூரிய மின் சக்தி தயாரிப்பில் இறங்கிய பின்னர் மின் வாரியம் கட்டணங்களை வெகுவாக குறைத்துள்ளது. 0 முதல் 100 யூனிட்டுகளுக்கு ரூ. 1 என்ற விகிதத்திலேயே கட்டணம் விதிக்கப்படுவதால் இப்போது மக்களுக்கு 12% வரை கட்டணத் தொகை குறைந்துள்ளது.
டையூ பகுதியைப் பின்பற்றி எல்லா மாநிலங்களும் சூழலியலுக்கு பாதிப்பில்லாத, சூரிய ஒளி மின்சார உற்பத்தியில் கவனம் செலுத்தினால் தன்னிறைவை எட்டுவதோடு மக்களின் மின் கட்டணச் சுமையும் பெருமளவு குறையும்.

