PUBLISHED ON : ஜூன் 20, 2016

அந்தப் பாட்டிக்கு என்று யாருமே இல்லை. ஓர் ஆள் என்றாலும் சாப்பிட வேண்டும் அல்லவா... சமைத்துக்கொண்டு இருந்தாள் பாட்டி. உழை கொதித்தது. பாட்டி அரிசியில் இருந்த கள்ளைக் களைந்து போட்டாள். சிறிது நேரத்தில் பொங்கி வந்தது. தீயைக் குரைத்து எறியவிட்டாள். சோறு நன்கு குலைந்து போகும் முன் ஒரு தட்டால் மூடி, கஞ்சியை வடித்தாள். நீர் ஊற்றி அடுப்பை அணைத்தாள். அடுப்பின் கறியை ஓர் ஓரமாகத் தள்ளி வைத்தாள்.
தட்டில் சோறு போட்டு கறிக் குழம்பை ஊற்றினாள். சாப்பிடத் தொடங்கினாள். அப்போது பார்த்து அவள் வளர்க்கும் நாய் 'வள் வள்' என்று கத்திக்கொண்டே வந்தது. 'அச்சச்சோ... யார் உன்னை அடிச்சது?' பாட்டி அந்த நாயை முதுகில் தடவிக் கொடுத்தாள். அதற்கு வழக்கமாய் சாப்பாடு வைக்கும் களத்தில் சிறிது சோற்றை வைத்தாள். வழியை மறந்த நாய் தின்ன ஆரம்பித்தது. பாட்டி சோறு சாப்பிட்டதும் குடத்தின் மீது வைத்திருந்த அந்த ஒற்றை வாளைப் பலத்தை உறித்துச் சாப்பிட்டாள். தோளை கவனமாகக் குப்பையில் போட்டாள்.
இரவு நிலா ஒலி வீசிக்கொண்டிருந்தது. பாட்டி உறங்கிக்கொண்டிருந்தாள். தனியாக வசிக்கும் அந்தப் பாட்டியின் பக்கத்தில் அந்த நாய் மட்டும் காவலாக விளித்திருந்தது.
கதையைப் படித்துவிட்டீர்களா? பாட்டி பாவம் என்பது ஒரு பக்கம் இருக்க, இந்தக் கதையே பாவம்தான்! இந்தக் கதையின் பல சொற்கள் பிழையானவை. ஓர் எழுத்து மாறியதால் அர்த்தமே மாறிவிட்டவை. அப்படி எழுத்து மாறிய சொற்களைக் கண்டுபிடியுங்களேன்...
விடை:
வந்திருப்பது - வரவேண்டியது
உழை - உலை
கள் - கல்
குரைத்து - குறைத்து
எறிய - எரிய
குலைந்து - குழைந்து
கறி - கரி
களத்தில் - கலத்தில்
வழியை - வலியை
வாளை - வாழை
பலம் - பழம்
தோள் - தோல்
ஒலி - ஒளி
விளித்திருந்தது - விழித்திருந்தது
