PUBLISHED ON : ஜூன் 20, 2016

வெளவால் பறவையா? அது பறக்கும் தன்மையுள்ள விலங்கு. பாலூட்டிகளில், பறக்கும் சக்திகொண்ட ஒரே உயிரி வெளவால்தான்.
உலகில் கோடிக்கணக்கான உயிரிகள் இருக்க, அதற்கு எல்லாம் இல்லாத சிறப்பு வெளவாலுக்கு மட்டுமே இருப்பது ஆச்சரியம்தான்.
வௌவால்களில் ஆயிரக்கணக்கான இனங்கள் உண்டு. பகலில் உறங்கி இரவில் மட்டுமே இரை தேடும். கூட்டமாக மரங்களில் தொங்கிக்கொண்டிருக்கும். உணவுக்காக 50 கிலோ மீட்டர் வரைகூடப் பயணிக்கும். மரம், குகை, பாறை போன்றவற்றில் தலைகீழாகத் தொங்குவதற்கு வசதியாக இதன் கூர்மையான கை நகங்கள் அமைந்திருக்கின்றன. சுமார் 20 முதல் 30 வருடங்கள்வரை உயிர் வாழும்.
எதிரே என்ன பொருள் இருக்கிறது, எவ்வளவு தூரத்தில் உள்ளது என்பதை, தான் எழுப்பும் சத்தத்தின் எதிரொலியில் இருந்து கண்டுபிடித்துவிடும்.
புழு, பூச்சி, பழங்கள், தேன் போன்றவை இதன் உணவு.
சில வகை வெளவால்கள் ரத்தம் குடிக்கும். ரத்தம் குடிப்பவை 'வேம்பையர்' (vampire) என்று அழைக்கப்படுகின்றன. கூர்மையான பற்களால் இரையின் தோலைக் கிழித்து ரத்தத்தை உறிஞ்சும். சில மனிதர்களைக்கூட வௌவால் இதே விதத்தில் தாக்கக் கூடும்.
பழந்தின்னி வெளவால்தான் உலகில் பெரியது. இதைத்தான் பறக்கும் நரி (Flying Fox) என்று அழைக்கிறார்கள்.
இறகு விரித்த வெளவாலை உற்றுப் பார்த்தால் ஒரு குடையை இரண்டாகப் பிரித்து வைத்து பறப்பது போல் இருப்பது இன்னும் ஆச்சரியம்.
