தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/கீரைதான் தமிழர் சாய்ஸ்!

கீரைதான் தமிழர் சாய்ஸ்!

கீரைதான் தமிழர் சாய்ஸ்!


PUBLISHED ON : செப் 16, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 16, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாம் அரசர்கள் வீட்டு சமையல் அறையைப் பற்றி நிறைய பார்த்துவிட்டோம். ஒரு மாறுதலுக்கு, காவிரியைச் சுற்றி இருக்கும் உழைப்பாளி மக்களைப் பற்றித் தெரிந்து கொள்வோமா?

இவர்களுடைய உணவுமுறை, இயற்கையைச் சார்ந்தே இருந்து வந்திருக்கிறது. அவர்களைச் சுற்றி என்ன பொருள் விளைகிறதோ அதையே உண்டு வந்திருக்கிறார்கள். அவர்களுடைய உணவில் கீரைக்கு முக்கிய பங்குண்டு. அவர்கள் கீரைக்கஞ்சி சமைத்து உண்பார்கள். பெரும்பாலும் கீரைக்கஞ்சி அவர்களுடைய அன்றாட உணவாகவே இருந்திருக்கிறது.

அரிசியை அலசி, உலையில் போடும்போது, நறுக்கிய கீரைகளையும் போடுவார்கள். இதை கஞ்சிப் பதத்திற்கு காய்ச்சுவார்கள். இதை மதிய உணவிற்கு எடுத்துச் செல்வார்கள். மிதமான உப்பும், தண்ணீரும் விட்டுக் காய்ச்சுவார்கள். அதனால், கஞ்சி கூழ் மாதிரி ஆகிவிடும். ஆகவே, மதியம் குடிக்கும்போது, தண்ணீரும், உப்பும் சேர்த்துக் கொள்வார்கள். மாங்காய், வெங்காயம் என, துணை உணவுகளோடு, கீரைக் கஞ்சி பிரமாதமாக ருசிக்கும்.

அதேபோல், இங்கு கீரையைக் காய்ச்சிக் குடிக்கும் வழக்கம் இருந்திருக்கிறது. நவீன மொழியில் சொல்ல வேண்டும் என்றால், சூப். பல கீரைகள் அல்லது ஒரு கீரை மட்டுமே கொண்டு சமைக்கிறார்கள். இதில் கீரையுடன் வெங்காயம் சேர்த்து கொதிக்க வைப்பார்கள். அதேபோல், நறுமணப் பொருட்களும் சேர்ப்பார்கள்.

நாம் பல பாரம்பரிய உணவு வகைகளைத் தான் மீண்டும் அறிமுகம் செய்கிறோம். ஏனெனில், இன்று சிறுதானியச் சிற்றுண்டிக் கடைகளில் மேற்சொன்ன அனைத்துமே கிடைக்கின்றன.

கீரையை இரவு உணவிற்கு ஏற்ற வகையில் இங்குள்ள மக்கள் செய்து பார்த்திருக்கிறார்கள். கீரை சூப், கஞ்சி என, எதைச் சாப்பிட்டாலும் பெரிய திருப்தி கிடைக்காது. அவர்களுக்கான கீரை உணவுதான் கீரை அடை. கீரை அடை மிகவும் பிரபலம். பருப்புகளோடு கீரை கலப்பதால், ருசியாகச் சாப்பிட முடியும். ஆனால், இது ருசிக்காக செய்யப்படவில்லை; நோய்களைக் குணமாக்க கீரை அடை செய்திருக்கிறார்கள்.

இதில் முருங்கை அடை, முடக்கத்தான் அடை பலரும் செய்யும் உணவுப் பண்டம். முருங்கை இரும்புச் சத்திற்காகவும், முடக்கத்தான், எலும்பு, தசை வலுப் பெறுவதற்காகவும் சாப்பிடப்பட்டது. பருப்பு, அரிசியோடு சேர்த்து, கீரைகளையும் அரைப்பார்கள். இதில் காரத்திற்கு மிளகாய் வற்றல் சேர்க்கப்படும். ஆனால், புளியை மட்டும் சேர்க்க மாட்டார்கள். ஏனெனில் புளியைப் போட்டு அரைக்கும்போது, அதனுடைய முழுப் பயன்களும் கிடைக்காதாம். கீரைகளின் மருத்துவக் குணத்தை புளி முறித்துவிடுமாம்.

- சோலை சுந்தரபெருமாள்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us