PUBLISHED ON : ஜூன் 03, 2019

அண்மைக் காலத்தில், வானில் வலம் வந்த 'குருவிகளைக் காணோமே' என்று பலரும் கவலைப்பட்டனர். ஆனால் குருவிகளுக்கான கூடுகளை உருவாக்கினால், அவற்றை வாழவைக்க முடியும் என நிரூபித்திருக்கிறார் சூழலியலாளர் சாதனா ராஜ்குமார். அவரது செயற்பாடுகள் குறித்துப் பேசினோம்:
குருவிகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது எப்படி?
சிறுவயதில் குருவிகளை ஏராளமாக பராமரித்திருக்கிறேன். வேலை, குடும்ப் பொறுப்புகள் அதிகரித்ததில் குருவிகளை மறந்திருந்தேன். என் அம்மா, ஒரு நாள் குருவிகள் கண்ணில் தென்படுவதே இல்லை தெரியுமா என்று என்னிடம் கேட்டார். அப்போதுதான் அட! ஆமா, குருவிகளைப் பார்க்கவே முடியவில்லையே என்பது உறைத்தது. உடனே குருவிகளை மீட்கும் முயற்சிகளைத் தொடங்கினேன். என் பள்ளிப் பருவத்து நண்பர், மர வேலை செய்பவர். அவரிடம் மரத்தால் ஆன கூடுகள் செய்யச்சொல்லி, எனது பகுதியில் இலவசமாகக் கொடுத்தேன். குருவிகளுக்காக மரத்தை வெட்டக்கூடாதென பானைக் கூடுகளைச் செய்து வழங்கி வருகிறோம்.
செல்போன் கோபுரங்களின் கதிர்வீச்சால்தான் குருவிகள் குறைந்துவிட்டன என்கிறார்களே?
அது நல்ல கற்பனைக் கதை. மரங்கள் இல்லாததும், கூடுகள் இல்லாததுமே குருவிகள் குறைந்துபோகக் காரணம்
கூடுகளின் சிறப்பம்சம் என்ன?
கூடு என்பது, வெறும் உணவு அளிப்பதற்காகவோ, குஞ்சு வைப்பதற்கு மட்டுமோ அல்ல. குஞ்சுகள் பொரித்ததும், கூட்டிலிருந்து வெளியே வருவதற்கான இடமாகவும் அது இருக்க வேண்டும்.
உங்களது முயற்சியால் குருவிகளின் எண்ணிக்கை அதிகரித்தா?
குருவிகளது வாழ்விடத்தில்தான் கூடுகளை வைக்க வேண்டும். சென்னையில் மயிலாப்பூர், சாந்தோம், அடையார், போன்ற பகுதிகளில் வாங்கிச் சென்றவர்கள் நல்ல செய்தியைத்தான் சொன்னார்கள்.
மக்களிடம் நீங்கள் வைக்கும் கோரிக்கை ஏதாவது உண்டா?
உங்கள் பகுதியில் வாழும் முக்கியப் பறவையான குருவிகளை மீட்க முயலுங்கள். சிறு செடிகள், பசுமையான சூழல், தானியங்கள், தண்ணீர், கூடுகள் வைத்து குருவிகள் வாழ்வதற்கான சூழலை உருவாக்குங்கள். நிச்சயம் குருவிகள் உங்கள் வீடு தேடி வரும். இம்முயற்சியில் மக்கள் இணைந்தால்தான் மாற்றங்கள் சாத்தியம் என்பதை நான் உணர்ந்திருக்கிறேன்.
