PUBLISHED ON : ஜூன் 03, 2019
தினசரி செய்தித்தாள் என்பது, நம்மை அன்றாட உலகத்தோடு பிணைத்து வைப்பது. ஆனாலும், இதன் ஆயுட்காலம் ஒரே நாள் தான் என்பார்கள். மறுநாள் வேறொரு செய்தித்தாள் வந்து விடுமே.. ஆனாலும், அறிவு கொடுக்கும் வேலையை முடித்ததும், அது வீண் காகிதம் என்கிற நிலைக்குப் போய்விடக்கூடாது. படித்து முடித்துவிட்ட செய்தித்தாள்களை வேறு என்னென்ன விதங்களில் பயன்படுத்தலாம் …?
உணவுப் பண்டங்கள் வைக்கும் டப்பாக்களில் (டிஃபன் பாக்ஸ், ஃப்ளாஸ்க் போன்றவை) துர்நாற்றம் இருக்கும்.
செய்தித்தாளைப் பந்து போல் சுருட்டி இந்த டப்பாக்களில் இரவு முழுக்க அடைத்துவைத்தால் துர்நாற்றம் போய் விடும் .
நன்கு பழுத்துவிட்ட தக்காளிகளை ஒவ்வொன்றாக செய்தித்தாளில் சுற்றி சாதாரண வெப்பநிலையில் கூடையில் வைக்கலாம் .
மழைக் காலங்களில் செருப்புக் கழற்றும் இடத்தில் இந்தக் காகிதங்களைப் போட்டுவைக்கலாம். இது ஈரம் பரவுவதைத் தடுக்கும்.
கண்ணாடிப் பரப்பில் படிந்திருக்கும் அழுக்குக் கறைகளை செய்தித்தாள் வைத்துத் துடைத்து அகற்றலாம். சுத்தப்படுத்தும் திரவத்தை ஒற்றிப் பயன் படுத்தலாம் .
ஷூக்களில் ஈரப்பிசுபிசுப்பு இருக்கும். செய்தித்தாள் துண்டுகளை ஓர் இரவு முழுக்க ஷூக்களுக்குள் போட்டுவைத்தால் ஷூக்கள் உலர்ந்துவிடும் .
ஃப்ரிட்ஜில் காய்கறி வைக்கும் ட்ரேயின் கீழ் செய்தித்தாள் காகிதங்களைப் போட்டுவைத்தால் ஃப்ரிட்ஜில் துர்நாற்றம் வராமல் இருக்கும் .
