PUBLISHED ON : மார் 25, 2019

மக்கும் தன்மையற்ற நெகிழி (Plastic) பொருட்களால் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள அபாயம் குறித்த விழிப்புணர்வு பெருகி வருகிறது. ஆயினும் கடந்த பத்தாண்டுகளில் குறைந்த விலையிலும், அதிகப் பயனுள்ளதாகவும் கிடைக்கும் நெகிழிப் பொருட்களுக்கு மக்கள் அன்றாட வாழ்க்கையில் பழகிவிட்டனர். இந்நிலையில், மாற்றுப் பொருட்களை பயனுள்ளதாகவும், தரமானதாகவும் சந்தையில் கிடைக்கச் செய்தால் மட்டுமே நெகிழிப் பொருட்களை ஒழிக்க முடியும்.
நெகிழிப் பொருட்களுக்கு மாற்றாக என்ன செய்யலாம் என யோசித்த சென்னையைச் சேர்ந்த வீணா பாலகிருஷ்ணன், சுதர்சனா பாய் என்ற இரு இளம்பெண்கள் களத்தில் இறங்கியுள்ளனர். எவர்வார்ட்ஸ் இண்டியா (Everwards India) எனும் நிறுவனத்தை சென்ற ஆண்டு தொடங்கினார்கள். அவர்களின் முதன்மை நோக்கமே, அன்றாடச் செயல்களுக்கு மறுசுழற்சிக்கு உட்படக்கூடிய பொருட்களைக் கண்டுபிடிப்பதுதான்.
49 ரூபாய் விலையில் க்ராஃபைட் மற்றும் செய்தித்தாளைக் கொண்டு பென்சில் தயாரிக்கிறார்கள். மூங்கில் இழைகளைக் கொண்டு டூத் பிரஷ் தயாரிக்கின்றனர். ஸ்கிரப், குளியல் ப்ரஷ்கள், பாட்டில் சுத்தம் செய்யும் பொருட்கள் என அன்றாடப் பயன்பாட்டில் உள்ள 40 பொருட்களை இவர்களின் நிறுவனம் தயாரிக்கிறது. இவற்றின் விலை 40 ரூபாய் முதல் 799 ரூபாய் வரையாகும்.
தயாரிப்புகளின் தரத்தை உறுதிப்படுத்திக் கொள்ள, நிறுவனத்தின் பங்குதாரர்களான வீணாவும் சுதர்சனாவுமே இப்பொருட்களைத் தங்களது அன்றாட வாழ்வில் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் உள்ளூர் மாற்றுத்திறனாளிகள், ஏழை எளியவர்கள், கைவினைஞர்கள் ஆகியோருக்கு வேலை வாய்ப்பும் வழங்குகின்றனர்.
பயன்படுத்தப்பட்ட காபிப் பொடியைக் கொண்டு காபி ஸ்கிரப், பழைய துணியில் பைகள், தேங்காய் கொட்டாங்கச்சியைக் கொண்டு டீ கப், சோப்புப் பெட்டி என அசத்துகின்றனர். குப்பை என நினைத்து வீசும் பொருட்களை மிகுந்த பயனுள்ள முறையில் மறுசுழற்சி செய்வதும் இவர்கள் நிறுவனத்தின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்றாகும்.
தங்கள் தயாரிப்புகள் அனைத்தையும் கண்ணாடி அல்லது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டப்பாக்களில் பொதிந்து தருவதால், அவற்றையும் தினசரி வாழ்வில் பயன்படுத்த முடியும் என்கின்றனர். அதோடு குப்பைகள் இல்லாத வாழ்க்கை முறை குறித்த பயிற்சிப் பட்டறையையும் இவர்களின் நிறுவனம் ஏற்பாடு செய்கிறது.