PUBLISHED ON : ஜூன் 02, 2025

நான்கு வயதுக் குழந்தையாக இருந்த போதே நான் கிரிக்கெட் மட்டையை எடுத்து விட்டேன். என் அப்பா சஞ்சீவ் தான் எனக்குப் பந்து வீசுவதும் எடுத்துப் போடுவதுமாக இருந்தார். ஒன்பது வயதில் என் ஊருக்கு அருகில் உள்ள ஒரு கிரிக்கெட் அகாடமியில் சேர்த்து விட்டார். பாட்னாவில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் சேர்ப்பதற்காக எங்களிடம் இருந்த கொஞ்ச நிலத்தையும் விற்று விட்டு, என்னை அங்கே சேர்த்தார் அப்பா. எனக்காக அம்மா விடியற்காலையிலேயே எழுந்து சமைத்துத் தருவார். அவர்களின் கஷ்டத்தை உணர்ந்து நான் கிரிக்கெட்டில் முழுக் கவனம் செலுத்தினேன்.
2024இல் என்னுடைய 12 வயதில், மும்பைக்கு எதிராக, ரஞ்சி கோப்பையில் ஆடும் வாய்ப்பு கிடைத்தது. அதே ஆண்டு 19 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான இளையோர் அணியில் இடம்பிடித்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், 58 பந்துகளில், சதம் அடித்தேன்.
தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிரிமியர் லீக் எனப்படும்
ஐ.பி.எல். 2025இல், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக, 1.10 கோடி ரூபாய்க்கு, என்னை ஏலத்தில் எடுத்தார்கள். சமீபத்தில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில், 35 பந்துகளில் 101 ரன்கள் அடித்து,
ஐ.பி.எல். விளையாட்டில் வேகமாகச் சதம் அடித்த இந்திய வீரர் என்ற தகுதியைப் பெற்றுள்ளேன். இதில் 11 சிக்ஸர்களும் அடங்கும். குறைந்த பந்துகளில் அரை சதம் எடுத்த வீரர் என்ற பெயரும் எனக்குக் கிடைத்துள்ளது. எனக்கு முன்பாக கிரிஸ்ட் கெயில்தான் 30 பந்துகளில் 100 ரன்கள் எடுத்த வீரர் என்ற நிலையில் இருந்தார். அவர் வெளிநாட்டு (மேற்கு இந்தியத் தீவு) வீரர் என்பதால், இந்திய வீரர்களில் நான் முதலிடம் பிடித்துள்ளேன்.
கிரிக்கெட் கடவுள் என்று கூறப்படும் சச்சின், திராவிட், கங்குலி, விராட், தோனி, ரோகித் என முன்னணி வீரர்கள் அனைவரும் என்னை வாழ்த்தியதைப் பெருமையாக நினைக்கிறேன். நம் பாரதப் பிரதமரும் என்னை வாழ்த்தியதை மறக்கவே முடியாது. இந்த ஜூன் இங்கிலாந்தில் நடைபெற உள்ள இளையோருக்கான உலகக் கோப்பைப் போட்டிக்கும் நான் செல்ல இருக்கிறேன். மிகக் குறைந்த வயதில் ஐ.பி.எல்.போட்டிக்குத் தேர்வான முதல் வீரர் நான் தான்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நான், யார் என்று கண்டுபிடியுங்கள்.
விடைகள்: வைபவ் சூர்ய வன்சி