PUBLISHED ON : ஆக 29, 2016

பாரம்பரிய விளையாட்டுப் பொருட்களில் ஒன்று நுங்கு வண்டி. ஏப்ரல், மே மாதங்களில் பனங்காய் நிறைய விளையும். வெயிலின் கொடுமையை விரட்ட, இயற்கை தந்த உணவான பனங்காயை சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்பர். பனங்காய் உடலுக்கு குளுமை தரக்கூடியது.
கிராமத்துச் சிறுவர்கள் நுங்கை, தண்ணீர் சொட்ட சுவைத்து உண்ட பிறகு, அந்தக் காயில் வண்டி செய்து தரச்சொல்லி அடம் பிடிப்பார்கள்.
நுங்கு வண்டி செய்ய சம அளவுள்ள இரண்டு காலியான பனங்காய்கள் தேவை. அரை அடிக்கும் குறைவான இருபுறம் கூர்மையுள்ள வளையாத குச்சியால் இரண்டு காய்களையும் நடு பகுதியில் குத்தி ஒன்றிணைக்க வேண்டும். வண்டியை தள்ளிக்கொண்டு போக, நீளமான ஒரு கொம்பு. கொம்பின் நுனி தள்ளுவதற்கு தகுந்தமாதிரி வி (V) வடிவில் இருக்க வேண்டும். இந்த வடிவத்தை 'கவை' என்பார்கள்.
கிராமத்து சிறுவர்கள் ஒருவருக்கொருவர் போட்டிப் போட்டிக்கொண்டு இந்த வண்டியை ஓட்டுவார்கள். பாதை மேடு பள்ளம் இல்லாமல் சமதளமாக இருந்தால் வண்டி வேகமாக ஓடும். உடற்பயிற்சியை உள்ளடக்கிய விளையாட்டு. மனமகிழ்ச்சியையும் கொடுக்கக் கூடியது.
