PUBLISHED ON : ஜூலை 30, 2018

கடலூர் தேசிய மாணவர் படையைச் (என்.சி.சி. - N.C.C.) சேர்ந்த 40 மாணவ, மாணவியர் புதுச்சேரி - தூத்துக்குடி வரையிலான 450 கி.மீ. பெருங்கடல் சாகச பாய்மரப் படகுப் பயணம் மேற்கொண்டனர். இதன் பகுதியாக, கடலூரில் மாற்றுத்திறனாளி இளைஞர் ஸ்ரீராம் கடலில் நீந்தும் நிகழ்ச்சி நடந்தது. இளைஞர்களின் தாழ்வுமனப்பான்மை நீங்கவும், சவால்களை எதிர்கொண்டு வாழவும் உத்வேகம் அளிக்கும் விதத்தில் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஸ்ரீராம் சீனிவாசனுக்கு வயது 25. பிறவியிலேயே பெருமூளை வாதம் மற்றும் மனவளர்ச்சி குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர். இயல்பாகப் பேசவோ, நடக்கவோ இயலாதவர். மற்றவர்களின் கருத்துகளைப் புரிந்துகொள்வதிலும் சிரமம் இருக்கும். இவரின் நிலைகண்டு பெற்றோர் சோர்ந்துபோய்விடாமல் தேவையான தொடர் பயிற்சிகளை அளித்துவந்தனர். 4 வயதிலேயே ஸ்ரீராமுக்கு நீச்சலில் ஆர்வம் இருப்பதைக் கண்டுகொண்டனர். அதனால் மற்ற பயிற்சிகளுடன் தொடர்ந்து நீச்சல் பயிற்சியும் கொடுத்துவந்தனர்.
ஆரம்பத்தில், நீரில் மிதக்க மட்டுமே செய்தார் ஸ்ரீராம். பிறகு, ஆசிரியர்களின் பயிற்சியாலும், அவரின் முயற்சியாலும் நன்றாக நீந்தத் தொடங்கினார். மாவட்ட, மாநில, தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான பல போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றிருக்கிறார்.
ஸ்ரீராம் நீந்தும்போது, பாய்மரப் படகில் இருந்து மாணவர்களும் உடன் நீந்திய பயிற்சியாளர்களும் அவரை உற்சாகப்படுத்தியபடியே இருந்தனர். இவர் ஏற்கெனவே கோவாவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் பங்கேற்று கடலில் இரண்டரை கிலோ மீட்டர் தூரம் வரை நீந்திச்சென்று சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியின் முடிவில் ஸ்ரீராமின் இச்சாதனையை கப்பற்படை அதிகாரிகள் உட்பட பலரும் பாராட்டினர்.
பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்று பதக்கம் வாங்க வேண்டும் என்பதுதான் ஸ்ரீராமின் ஆசை.
