
மாநாடு எப்படி வந்தது?
ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்வது வாழ்க்கைச் செயல். நாகரிகம் வளர்ந்த பிறகு, அவ்வாறு கூடிப் பேசும் செய்கையும் பலபடிகளாக வளர்ந்தது. கூடி உரையாடுதல், ஒரு தரப்பினரை இன்னொரு தரப்பினர் அறிய உரையாடுதல், சான்றோர் உரைகள், இடர் நீங்கக் கலந்துரையாடுதல், நோக்கத்தோடு கூடிப் பேசுதல் என, பலவகையான கூடுகைகள் உள்ளன.சிலரோ பலரோ நேரில் கண்டு, நேரம் செலவிட்டுக் கலந்து பேசும் செய்கை ஒன்றுண்டு. அவ்வாறு கூடுவதைக் கூட்டம் (Meeting) என்று சொல்கிறோம். அலுவலகம் முதல் குடியிருப்புப் பகுதிகள் வரை, எவ்வொன்றுக்கும் கூட்டம் கூட்டிப் பேசுகிறோம். அது ஒப்பீட்டளவில் சிறியதாக இருக்கும். அதுவே கூட்டம் எனப்படுவது.தகுதியுள்ளோரைக் கூட்டி, உரிய தீர்வுகளையும், அடைய வேண்டிய மேம்பாடுகளையும் பற்றிக் கலந்து பேசுமிடம் அவை (Assembly) எனப்படும். அங்கே எல்லோரும் கலந்துகொள்ள முடியாது. தகுதியுள்ளோர் அழைக்கப்படுவர். அவைக்கு வெளியே உள்ளவர்கள், அவர்களுடைய முடிவுகளுக்காகக் காத்திருப்பர். மக்களவை, மாநிலச் சட்டசபை போன்றவை அவ்வகையில் கூடும் அவைகள்.அடுத்த நிலையில் உள்ள பெரிய கூடுகை மாநாடு (Conference) எனப்படுவது. பெரும்பொருளைப் பேசுபொருளாக எடுத்துக்கொண்டு பெருந்திரளைக் கூட்டுவது. Confer என்ற சொல்லுக்கு, 'ஒன்றுகூடிச் சிந்தித்தல், ஏதாவது குறித்த பொருளில் நாட்டம் செலுத்துவது' என பொருள் வழங்குகிறார் தமிழறிஞர் கீ. இராமலிங்கனார். எடுத்துக்கொண்ட பொருளில், ஆழ்ந்து கலந்துரையாடிய பின் தீர்வு நாடுவது. மிகப்பெரிய நாட்டச் செயல் அது. நாடுவதிலேயே பெரிது - மாநாடு. அதனால்தான் 'மாநாடு' என்ற பெயர் வந்தது. ஒரே தரப்பானவர்களையும், ஒரே சார்புள்ளவர்களையும் மட்டுமே நாம் கூட்டிப் பேசுவதில்லை. பலவகையானவர்களையும் பல நிலைப்பாடு உள்ளவர்களையும் கூட்டத்திற்கு அழைத்து உரையாடுவதுண்டு. அத்தகைய கூடுகைகள் பெருங்கூடல் (Convention) ஆகும்.இவை தவிர, ஒட்டுமொத்தக் கூட்டத் திரட்டும் உண்டு. ஒருவரைக்கூட விட்டுவைக்காமல் அனைவரையும் கூட்டுவது. அதற்கு ஆங்கிலத்தில் Congress என்று பெயர். 'மாபெருங்கூடல்' என்ற பொருளில் அமைவது.இவ்வாறு ஒவ்வொரு கூடுகைக்கும், ஒரு பெயரிட்டு வழங்குவது வழக்கமாக இருக்கிறது. - மகுடேசுவரன்

