PUBLISHED ON : நவ 13, 2017

பன்னிரண்டு வயது மாணவர் ஒருவர்; கவிதை எழுதினார்.
இது ஒரு பெரிய விஷயமா? அந்த வயதில் எல்லா மாணவர்களுக்கும்தான் கவிதை எழுதுகிற ஆசை இருக்கும். காகிதத்தில் ஐந்தாறு வரிகள் எழுதிப் பார்ப்பார்கள்.
ஆனால், இராசமாணிக்கம் என்ற இந்த மாணவர், ஐந்தாறு வரிகள் எழுதவில்லை, காவியம் எழுதினார். அதுவும் ஒன்றல்ல, இரண்டு காவியங்களை எழுதினார்.
அந்த வயதில், அம்மாணவருக்கு இருந்த கவித்திறனும், தமிழார்வமும் உண்மையிலேயே வியப்புக்குரியவைதான். அதே சமயம், அவர் இரண்டு காவியங்களை எழுத, இன்னொரு காரணமும் உண்டு: அவருடைய நண்பர் தீனதயாளன்.
வேடிக்கையான விஷயம், அந்தத் தீனதயாளனுக்குத் தமிழே தெரியாது. ஆகவே, இராசமாணிக்கம் எழுதும் கவிதைகளை அவர் வாசித்துச் சுவைக்க வாய்ப்பில்லை.
ஆனாலும், இராசமாணிக்கம் அவரை விடவில்லை. ''நான் எழுதிய ஒரு கவிதையை வாசித்துக் காண்பிக்கிறேன். நீ அதைக் கேட்டு உன்னுடைய கருத்துகளைச் சொல்'' என்றார்.
''எனக்கு வேறு வேலை இருக்கிறதே'' என்று நழுவப்பார்த்தார் தீனதயாளன்.
''கொஞ்சம் பொறு, நீ என்னுடைய கவிதையைக் கேட்டால், நான் உனக்குச் சுவையான தின்பண்டங்கள் வாங்கித் தருகிறேன்'' என்று ஆசைகாட்டினார் இராசமாணிக்கம்.
தின்பண்டங்களின் மீது ஆசையில்லாத சிறுவர்கள் உண்டா? தீனதயாளன் இந்த ஏற்பாட்டுக்கு ஒப்புக்கொண்டார்.
அதன்பிறகு, தினந்தோறும் தான் எழுதும் கவிதைகளையெல்லாம், தீனதயாளனிடம் வாசித்துக் காட்டுவார் இராசமாணிக்கம். அவரும் அதைக் கேட்டு ரசிப்பார்.
ஆரம்பத்தில் தின்பண்டத்துக்காகக் கவிதை கேட்க ஆரம்பித்த தீனதயாளன், கொஞ்சம் கொஞ்சமாக இலக்கிய ருசியில் சொக்கிப்போனார். இராசமாணிக்கத்தின் கவிதைகளைக் கேட்டு மகிழ்ந்தார், சிரித்தார், அழுதார், சுவைத்தார், பாராட்டினார்.
இதையெல்லாம் பார்த்துப் பார்த்து, இராசமாணிக்கத்துக்கும் ஊக்கம் அதிகரித்தது. ஆர்வத்துடன் நிறைய எழுதத் தொடங்கினார்.
பின்னர் அவர் பெரிய எழுத்தாளராகப் புகழ்பெற்று, பல நூல்கள் எழுதியபோது, தன் சிறுவயது நண்பரான தீனதயாளனைக் குறிப்பிட்டு நன்றி தெரிவித்தார். 'அந்த இளம் சுவைஞனை என் வாழ்நாள் உள்ளவரை என்னால் மறக்க முடியாது' என்றார்.
அந்த இராசமாணிக்கம், 'பாவலரேறு' என்று போற்றப்படும் பெருஞ்சித்திரனார். 1933ல் சேலம் மாவட்டத்தில் பிறந்தவர். சிறுவயதிலிருந்தே எழுத்தாளராக வளர்ந்து, பல அருமையான படைப்புகளை வழங்கியவர்; தமிழுணர்வை மக்கள் மத்தியில் பரப்பியவர்.
பெருஞ்சித்திரனாரின் பாடல்கள் 'கனிச்சாறு' எனும் தலைப்பில், தொகுக்கப்பட்டிருக்கின்றன. அவருடைய கட்டுரைகள், ஆய்வுரைகளும் பல நூல்களாக வெளியாகியிருக்கின்றன.
- என். சொக்கன்
