தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/சிறுவர்களுக்கு சினிமா கொண்டாட்டம்!

சிறுவர்களுக்கு சினிமா கொண்டாட்டம்!

சிறுவர்களுக்கு சினிமா கொண்டாட்டம்!


PUBLISHED ON : நவ 13, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 13, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சாரி சாரியாக மாணவர்கள் முகத்தில் உற்சாகமும் துள்ளலும். அவர்களோடு வந்த பள்ளி ஆசிரியர்களுக்குத்தான் பெரும் வேலை. மாணவர்களை, அவர்கள் கல்விச் சுற்றுலா அழைத்துச் சென்று பழக்கப்பட்டவர்கள். ஆனால், திரையரங்குக்கு அழைத்துச் சென்றதில்லை.

சிறுவர்களுக்கான திரைப்படங்களைப் பார்க்க அவர்களை அழைத்து வருவதும், கூடவே தாங்களும் சிறுவர்களாக மாறி, படங்களை ரசிப்பதும் அண்மைக் காலமாகத் தொடர்கிறது.

இதெல்லாம் எங்கே? ஹைதராபாத்தில்.

கடந்த 8ம் தேதி தொடங்கி, 14ம் தேதி (நாளை) வரை நடைபெறும், 20வது சர்வதேச சிறுவர் திரைப்படவிழா, சிறுவர்களுக்கு நல்ல சினிமாவை அறிமுகப்படுத்தும் பணியைச் செய்து வருகிறது. சிறுவர்களுக்கான சினிமாவைத் தயாரித்து, ஆதரிக்க வேண்டும்; சிறுவர்களுக்கான சினிமாவை சிறுவர்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கில் செயற்படும், இந்திய சிறுவர் திரைப்படக் கழகம் (Children's film Society Of India), இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

1955ம் ஆண்டில், முன்னாள் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, இதுவரை, 10க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் 250க்கும் மேற்பட்ட சிறுவர் திரைப்படங்களைத் தயாரித்துள்ளது.

தேசிய சிறுவர் திரைப்பட விழாவை ஆண்டுக்கு ஒரு முறையும், சர்வதேச சிறுவர் திரைப்பட விழாவை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையும் நடத்தி வருகிறது.

இந்த 20வது சர்வதேச சிறுவர் திரைப்படவிழாவில், மொத்தம் 317 சிறுவர் திரைப்படங்கள், ஹைதராபாத் நகரின் 13 திரையரங்குகளில், மொத்தம் 41 திரைகளில் திரையிடப்பட்டு வருகின்றன. ஒரு நிமிடத்திலிருந்து இரண்டரை மணி நேரம் வரை ஓடக்கூடிய இந்தத் திரைப்படங்களில், சிறுவர்கள் இயக்கிய 24 குறும்படங்களும் அடக்கம்! காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, உலகின் பல்வேறு நாட்டுச் சிறுவர் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்டிருக்கும் 300 சிறுவர்களும், ஹைதராபாத் நகரப் பள்ளிகளில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான சிறுவர்களும், இந்தத் திரைப்படங்களைக் கண்டுகளித்து வருகிறார்கள். உலகெங்கிலும் இருந்து வந்திருக்கும் சிறுவர் திரைப்பட இயக்குனர்கள், பல்வேறு நாடுகளில் சர்வதேச சிறுவர் திரைப்பட விழாக்களை ஏற்பாடு செய்யும் திரைப்பட விழா இயக்குனர்கள், இந்தச் சிறுவர்களுடன் இணைந்து திரைப்படங்களைப் பார்த்து, சிறுவர் சினிமாக்கள் பற்றி அவர்களுடன் உரையாடி வருகிறார்கள்.

அவ்வப்போது தவளையாக மாறிவிடும் ஓர் ஆசிரியர் மீது அன்பு செலுத்தி, அவருக்கு ஆபத்து நேராமல் பாதுகாக்கும் மாணவர்கள்; தனது தாத்தா விட்டுச்சென்ற சாக்லேட் ஆலையை, 13 வயதில், தன்னுடைய நண்பர்களின் உதவியுடன், நஷ்டத்தில் இருந்து மீட்கும் சிறுவன்; குதிரை ஏற்றப் பயிற்சியின்போது, ஒரு குதிரையால் சரியாக நடமாட முடியாத அளவுக்குக் காயப்படுத்தப்பட்ட ஒரு சிறுமி, தன் வீட்டுப் பெரியவர்களுக்குத் தெரியாமல், ஓர் ஆதரவற்ற குதிரையைத் தத்தெடுத்து வளர்ப்பது; காலில் அடிபட்ட ஒரு பாட்டி, 'இனி தான் வாழக்கூடாது' என்ற எண்ணத்தில் பட்டினி கிடக்கும் சூழலில், பாட்டியின் இளம்வயது வாழ்க்கையில் சம்பந்தப்பட்ட நண்பர்களை வரவழைத்து, அவருக்கு நம்பிக்கை ஊட்டும் சிறுமி; ஒரு கால் வளர்ச்சி தடைப்பட்ட நிலையில் மாற்றுத்திறனாளி மாணவன் கால்பந்தாட்டத்தில் சாதிப்பது எனச் சிறுவர்கள் தான் இந்தத் திரைப்படங்களின் நாயகர்கள்.

எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் சிறுகதையைத் தழுவி, தமிழக இயக்குனர் பி. சிவக்குமார் இயற்றிய, 'ஸ்டாம்ப் ஆல்பம்' என்ற குறும்படமும் திரையிடப்பட்டது.

தியேட்டர்களில் ஒரே விசில் சத்தமும், கைதட்டல்களும்தான். அவ்வளவு வரவேற்பு.

குழந்தைகளை அழைத்து வந்த ஆசிரியர்கள் அவ்வப்போது, 'ஏய் பசங்களா சத்தம் போடாதீங்க!' என்று அதட்டினாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல், சிறுவர்கள், சிறுவர்களாகவே இருக்கிறார்கள்.

'இதுவரை நாங்கள் இவ்வளவு குழந்தைகள் படங்களைப் பார்த்ததே கிடையாது'. 'ட்ரீட் வைத்த மாதிரி இருக்கிறது'. 'தியேட்டர்களிலும் இந்த மாதிரியான படங்கள் ரிலீஸ் ஆனால் நன்றாக இருக்கும்'. இப்படிக் குழந்தைகள் பேசிக்கொள்வதை நிதர்சனமாகக் கேட்க முடிந்தது.

சிறந்த திரைப்படங்களுக்கு நாளை (14.11.2017) நடக்கவிருக்கும் நிறைவு விழாவில், விருதுகள் வழங்கப்பட உள்ளன. சிறார் தேர்வு என்ற பெயரில் சிறுவர்களும் சிறந்த படங்களைத் தேர்வுசெய்ய இருக்கிறார்கள். விவரம் அடுத்த திங்கள் இதழில்…

- நர்மதாதேவி, மனோபாலா, ஹைதராபாத்தில் இருந்து

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us