PUBLISHED ON : நவ 13, 2017

நானும், வாலுவும் மருத்துவமனைக்குச் சென்றோம். வேறு ஒன்றுமில்லை. ஞாநி மாமா இந்த முறை ஹிரண்யா அறுவைச் சிகிச்சைக்காக அட்மிட் ஆகியிருந்தார்.
“எனக்கு இப்ப ஓர் உண்மை தெரிஞ்சாகணும்” என்றான் பாலு. “இது ஹெர்னியாவா? ஹிரண்யாவா? எங்கம்மா ஹிரனியா என்றே சொல்கிறார்.”
மாமா சிரித்தார். “ஹெர்னியாதான். அது லத்தீன் வார்த்தை. ஹிரண்யன் கதை நம் நாட்டுப் புராணக் கதை. ஹெர்னியா பெரும்பாலும் குடல் இறக்கம்தான். ஹிரண்யகசிபு கதையிலும் குடல் வருகிறது. திருமால் சிங்கமாக வந்து ஹிரண்யனைக் கொன்று, அவன் குடலை உருவியதுதான் நரசிம்ம அவதாரக் கதை. உன் அம்மா அதனால்தானோ என்னவோ ஹெர்னியாவை ஹிரண்யா ஆக்கிவிட்டார்!” என்று சிரித்தார் மாமா.
மாமா பொதுவாக பல் தெரிய சிரிக்கமாட்டார். காரணம் முன்பல் ஒன்று ஓட்டை! இப்போது சிரித்தபோது பல்லில் ரத்தக்கறை தெரிந்தது. என்ன என்று கேட்டேன். வாய் வழியாக அனெஸ்தீஷியா (மயக்க மருந்து) கொடுக்கும்போது, தொண்டை வரை செல்ல ஒரு கருவியைப் பயன்படுத்துவார்களாம். அதில் இந்த மாதிரி சிறுகாயம் ஏற்படுவது சகஜமாம்.
சர்ஜரியைப் பற்றி மாமாவிடம் மேலும் விவரம் கேட்டோம். அப்போதுதான் தெரிந்தது. சர்ஜரியில் சர்ஜன் அளவுக்கு முக்கியமானவர் அனெஸ்தெடிஸ்ட் டாக்டரும் என்பது. நோயாளியின் உடலில் ஒரு பகுதி மட்டும் வலி தெரியாமல் மறத்துப் போகச்செய்வது லோக்கல் அனெஸ்தீஷியா. மொத்தமாக மயக்கநிலை தருவது ஜெனரல் அனெஸ்தீஷியா. “இதில் சின்ன தப்பு நடந்தாலும், நோயாளி மயக்கத்திலிருந்து மீளாமல் கோமாவுக்குப் போகும் ஆபத்து உண்டு.” என்ற மாமா, அப்படி தப்பு நடந்து ஒரு பெரிய விளையாட்டு வீரரின் வாழ்க்கையே பாதிக்கப்பட்ட கதையைச் சொன்னார்.
சந்திரசேகர், எண்பதுகளில் தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியனாக இருந்தவர். அர்ஜுனா விருது பெற்றவர். 1983ல் முட்டிவலிக்காக ஓர் அறுவைச் சிகிச்சைக்குச் சென்றார்.
அப்போது அனெஸ்தீஷியா கொடுத்ததில் தப்பு நடந்துவிட்டதால், சந்திரசேகர் கடுமையாகப் பாதிக்கப்பட்டார். ஒருநாள் கோமாவில் இருந்தார். மூளையின் சில பகுதிகள் பாதிக்கப்பட்டதால், கண்பார்வை மங்கலாயிற்று. கை, கால் அசைவுகள் பாதிக்கப்பட்டன. பல்வேறு தரப்பிலிருந்து அவருக்காக நன்கொடைகள் வசூலிக்கப்பட்டு, அடுத்த சிகிச்சை நடந்தது. தேறிவந்தாலும் திரும்ப அவர் டேபிள் டென்னிஸ் விளையாட முடியாதவர் ஆனார்.
தனக்கு இந்த நிலை ஏற்படக் காரணமாக இருந்த மருத்துவமனை மீது வழக்குத் தொடுத்தார். வழக்கு எட்டு ஆண்டுகள் நடந்தது. கடைசியில் சந்திரசேகரக்கு 17 லட்சம் ரூபாய் இழப்பீடு கொடுக்கும்படி மருத்துவமனைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், சந்திரசேகர் இனி விளையாட முடியாதவர் ஆனார். டேபிள் டென்னிஸ் கோச்சாக இப்போது பணிபுரிகிறார்.
“மருத்துவத்தில் ஏராளமான பிரிவுகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் முக்கியமானது என்று புரிகிறது.” என்றேன்.
கூட்டு நடவடிக்கையில் ஒவ்வொரு தனி நபரும் முக்கியமானவர்.
“ஒவ்வொரு மனிதரும், சக மனிதருக்குப் பொறுப்பானவர் என்பதை உணர வேண்டும். அப்படி உணர்ந்த தனிமனிதர்கள் தான் எதையும் சாதிக்க முடியும்” என்றார் மாமா.
மாமாவுக்கு வாங்கி வந்திருந்த ஆப்பிள்களை எடுத்துக் கொடுத்தான் பாலு. “இந்த ஆப்பிளைப் பார்க்கும்போதுகூட, ஒரு தனி மனிதரின் ஞாபகம் தான் வருகிறது. அவரால் ஒரு தனி நாடே சுதந்திர நாடாக உருவாகியிருக்கிறது. இன்றைக்கு உலகத்திலேயே ராணுவம் இல்லாத அமைதியான நாடு எது தெரியுமா?” என்று கேட்டார் மாமா.
“அது தெரியுமே, எத்தனை க்விஸில் பதில் சொல்லியிருக்கிறேன். சுவிட்சர்லாந்து தானே” என்றேன்.
“ஆமாம். ஒரு காலத்தில் இப்போது சுவிட்சர்லாந்தாக இருக்கும் நாட்டின், பல பகுதிகள் ஆஸ்திரியா நாட்டின் அடிமையாக இருந்தன. 1307ல் வில்லியம் டெல் என்ற தனிநபர் செய்த காரியம், தேச விடுதலைக்கு வழிவகுத்தது” என்றார் மாமா.
ஆஸ்திரியா நாட்டு சார்பில் சுவிட்சர்லாந்தில் ஆட்சி நடத்திக்கொண்டிருந்த கெஸ்லர் ஒரு கொடுங்கோலன். அவன் ஊரின் மையப்பகுதியில் ஓர் உயரமான கம்பை நட்டு, அதன் உச்சியில் தன் தொப்பியை மாட்டி அந்த வழியே வருபவர்கள் எல்லோரும் அதற்கு சல்யூட் அடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தான். ஆனால், வில்லியம் டெல், அப்படிச் செய்யவில்லை. அவனைக் கைது செய்த கெஸ்லர், “உன்னையும், உன் மகனையும் கொல்லப் போகிறேன். சாகாமல் தப்பிக்க வேண்டுமென்றால், நான் சொன்னபடி செய்ய வேண்டும்” என்றான்.
என்ன சொன்னான் தெரியுமா? வில்லியம் டெலின் சிறு பையனை மரத்தடியில் நிறுத்தி, அவன் தலை மீது ஆப்பிளை வைத்தான். நூறு அடிக்கு அப்பால் இருந்து வில்லியம் டெல், அம்பால் அந்த ஆப்பிளை வீழ்த்த வேண்டும். அப்படி வீழ்த்திவிட்டால், இருவரையும் மன்னித்துவிடுவதாகக் கெஸ்லர் சொன்னான். வில்லியம் டெல் ஒரு மாபெரும் வில்வித்தைக்காரன். அவன் எய்த அம்பு ஆப்பிளை இரு துண்டாக்கியது. இப்போது கெஸ்லர், வில்லியம் டெலிடம் கேட்டான், “எதற்காக இரண்டு அம்புகளை எடுத்து தயாராக வைத்துக் கொண்டாய்? ஓர் அம்பு தானே எய்த வேண்டும்?”
வில்லியம் டெல், கெஸ்லரை நேருக்கு நேர் பார்த்துச் சொன்னான், “அது உனக்காக. ஆப்பிள் குறி தவறி என் மகன் இறந்திருந்தால் அடுத்த அம்பில் உன்னைக் கொன்று இருப்பேன்.” கெஸ்லர் ஆத்திரமடைந்து வில்லியம் டெல்லை ஒரு பாதாள சிறைக்கு கொண்டு செல்லும்படி உத்தரவிட்டான்.
அந்தச் சிறைக்கு ஓர் ஆற்றின் வழியே படகில் போக வேண்டும். பாதி வழியில் படகு வெள்ளத்தில் தடுமாற ஆரம்பித்தது. படகை பத்திரமாக ஓட்டிச்செல்ல வில்லியம் டெலால் தான் முடியும் என்பதால், அவனை ஓட்ட வைத்தார்கள்.
வில்லியம் டெல் கரையோரமாக இருந்த பாறையில் படகை மோதவைத்து தப்பித்து ஓடினான். அவனை கெஸ்லர் துரத்தி வரும்போது, ஒரு குறுக்கு வழியில் புகுந்து கெஸ்லருக்கு மறுபக்கம் வந்து கெஸ்லரை அம்பு எய்து கொன்றான் வில்லியம் டெல். அதன்பிறகு சுவிட்சர்லாந்து விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருந்த குழுக்களும், வில்லியம் டெல்லும் இணைந்து நாட்டை விடுவித்தார்கள்.
“நிஜமாகவே இது எல்லாம் நடந்ததா?” என்று கேட்டான் பாலு.
“1307ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி இந்த நிகழ்ச்சிகளெல்லாம் நடந்ததாக 1500ல் எழுதப்பட்ட வரலாற்றுப் புத்தகங்களில் இருக்கிறது. ஆனால், இதேபோல தங்கள் நாட்டிலும் ஒருவர் இருந்ததாக டென்மார்க்கிலும் வரலாறு எழுதி வைத்து இருக்கிறார்கள்” என்றார் மாமா.
”அப்படியானால், எந்த வரலாறும் உண்மை இல்லையா?” என்றேன்.
“எல்லா வரலாறும் முழு பொய்யும் இல்லை, முழு உண்மையும் இல்லை” என்றார் மாமா.
வாலுப்பீடியா- 1
நவம்பர் 16 - சகிப்புத்தன்மை தினம்.
நவம்பர் 19 - மகளிர் தொழில்முனைவோர் தினம்
நவம்பர் 15, 1859 - மறுபடியும் ஒலிம்பிக்ஸ் விளையாட்டுகள் தொடங்கிய நாள்.
நவம்பர் 18, 1926 - தனக்கு நோபல் பரிசு வேண்டாம் என்று ஆங்கில எழுத்தாளர் பெர்னாட் ஷா நிராகரித்த நாள்.
வாலுப்பீடியா -2
சுவிட்சர்லாந்து நாட்டில், ஜெர்மன், பிரெஞ்சு, இத்தாலியன், ரோமன்ஷ் ஆகிய நான்கு மொழிகள் உள்ளன.
