தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/கைக்குழந்தையே ஆசிரியர்; கரிசனமே பாடம்!

கைக்குழந்தையே ஆசிரியர்; கரிசனமே பாடம்!

கைக்குழந்தையே ஆசிரியர்; கரிசனமே பாடம்!


PUBLISHED ON : ஜூன் 18, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 18, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உமா மிஸ், தனது வகுப்பறைக்கு வரச்சொல்லி இருந்தார். கீழே மர நிழலில் இருக்கும் வகுப்பறைக்குப் போனேன். இன்றைக்கு என்ன ஆச்சரியம் காத்திருக்கிறதோ என்ற எண்ணமே என்னை உற்சாகம் கொள்ள வைத்தது.

மேஜைகள், இருக்கைகள் எல்லாம் வெளியே இருந்தன. உள்ளே எட்டிப் பார்த்தால், தரை முழுக்க அழகழகான விரிப்புகள். சுவரெங்கும் வண்ணவண்ணப் பலூன்கள், காகித அலங்காரங்கள். சின்னப் பையன்களும் பிள்ளைகளும் சுற்றி அமர்ந்திருக்க, நடுவே இரண்டு கைக்குழந்தைகள் கையையும் காலையும் உதைத்துக்கொண்டு படுத்திருந்தன. அதிகம் போனால், 9, 10 மாதங்கள்தான் ஆகியிருக்கும்.

அவர்களுடைய அம்மாக்களாக இருக்கவேண்டும். அவர்கள் சற்று தள்ளி பையன்களோடு அமர்ந்துகொண்டிருந்தார்கள். உமா மிஸ் என்னைப் பார்த்து, 'அருகே வா' என்பதுபோல் அழைத்தார்கள்.

குழந்தைகள் என்றாலே எனக்கு கொஞ்சம் அலர்ஜி. அதுவும் குழந்தைகள் அழ ஆரம்பித்தால் என்னால் தாங்கவே முடியாது. தொடுவதற்கும் தூக்குவதற்கும் ரொம்ப பயம்.

மிஸ் பக்கத்தில் போய் உட்கார்ந்து கொண்டேன். குழந்தைகளை வைத்துக்கொண்டு உமா மிஸ் என்ன செய்கிறார்கள் என்று ஆச்சரியமாக இருந்தது.

“அக்ஷயா… அந்தக் குழந்தை கையில் பொம்மையைக் கொடுத்துப் பாரு..” என்று உமா மிஸ் சொல்ல, ஒரு பெண், சின்ன பொம்மை ஒன்றை ஒரு குழந்தையிடம் நீட்டினாள். அந்தக் குழந்தை கையை உயர்த்தி, ஆட்டி, அசைந்து, பொம்மையைப் பிடிக்க முயற்சி செய்யத் தொடங்கியது.

பக்கத்துக் குழந்தையும் கையை அசைக்க, அதனிடமும் பொம்மையை நீட்டினாள் அக்ஷயா. அதுவும் முயற்சி செய்துகொண்டே இருந்தது. பிடிக்க முடியவில்லை. நழுவிக் கொண்டே இருந்தது, அல்லது எட்டவில்லை. ஆனால், விடாமுயற்சியுடன் அந்தக் குழந்தைகள் பொம்மையை எட்டிப் பிடிக்கத் தொடர்ந்து முயன்றன.

“குழந்தை என்ன பண்ணுது அக்ஷயா?”

“பொம்மையைப் பிடிக்க டிரை பண்ணுது மிஸ்?”

“பிடிச்சுச்சா?”

“இல்ல. டிரை பண்ணுது.”

“தொடர்ந்து டிரை பண்ணுதா, விட்டுடுச்சா?”

“இல்லை. தொடர்ந்து டிரை பண்ணுது. விடலை.”

“நீங்க யாராவது ஏதாவது கிடைக்கலைன்னா, விட்டுடுவீங்களா?”

மொத்த வகுப்பைப் பார்த்தும் உமா மிஸ் பேச, 'இல்லை' என்பது போல் எல்லோரது தலைகளும் அசைந்தன. அப்போதுதான் கவனித்தேன், வகுப்பறையே ஆர்வத்தால் கொப்பளித்துக்கொண்டிருந்தது. ஒரு பையன் முன்னால் எட்டிப் பார்த்துக்கொண்டே இருந்தான். இன்னொரு பெண், ஒரு குழந்தையின் கைவிரலை நீவிவிட்டுக்கொண்டு இருந்தாள்.

குழந்தைகளின் முகபாவங்களைப் பார்த்து, இன்னொரு பையன் சிரித்துக்கொண்டிருந்தான். இன்னொருவன், தன் இடத்தில் இருந்தே, முகத்தை அஷ்டகோணலாக்கி, விளையாட்டுக் காட்ட முயற்சி செய்தான். இன்னொரு பெண்ணோ, கையை அசைத்து, உடம்பை அசைத்து, குழந்தையின் கவனத்தைக் கவர சிரமப்பட்டுக் கொண்டு இருந்தாள்.

எல்லோரது மையப்புள்ளியாகவும் அந்த இரண்டு குழந்தைகளே இருந்தன. திடீரென்று குழந்தைகள் சிரிக்க, எல்லோர் முகத்திலும் கொண்டாட்டம். கஷ்டப்பட்டு ஒரு குழந்தை, அக்ஷயா நீட்டிய சின்ன பொம்மையைப் பிடித்துவிட்டது. அது இப்படியும் அப்படியுமாக அசைத்து, பொம்மையைப் பிதுக்கிக்கொண்டிருந்தது.

“கதிர்…நீ போய் சிரிப்பு மூட்டு!” என்றார் உமா மிஸ். சிரிப்பா, நானா? ஒரு குழந்தை அருகே போய் முழங்காலிட்டு என்ன செய்வது என்று தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.

“கை தட்டு, சிரி…மேலே கையை நீட்டி ஆட்டிக் காட்டு கதிர்” என்றார் மிஸ். ஒண்ணுமே புரியவில்லை. மிஸ் சொன்னதை அப்படியே செய்தேன். முதலில் என்னையோ, என் கைகளையோ அந்தக் குழந்தை கவனிக்கவே இல்லை. அது வேறு ஏதோ கவனத்தில் இருந்தது. பின்னர் நான் கையை மேலே தூக்கி, சூரியன் மாதிரி காட்டி, ஒளி கீழே பாய்வது போல் பாவனை செய்தேன். என்ன தோன்றியதோ, சடக்கென்று ஒரு குழந்தை சிரித்தது.

எனக்கு ஆச்சரியம். நான் செய்ததைப் பார்த்து குழந்தை சிரித்ததா? அல்லது தானே ஏதோ நினைத்துக்கொண்டு சிரித்ததா? மீண்டும் அதையே செய்தேன். மீண்டும் ஒரு 'களுக்.' மீண்டும், மீண்டும் செய்தேன். ஒவ்வொரு முறையும் கன்னத்தில் குழி விழ, கண்கள் அகல விரிய, 'களுக், களுக்.' உற்சாகம் தொற்றிக்கொண்டது. அதனோடு ஏதோ ஒருவிதத்தில் என்னால் பேச முடிந்துவிட்டது.

நான் என்ன பேசுவேன், என்ன சொல்வேன் என்ற கவலை போயே போச்சு. இப்படியே விதவிதமாக கைகளை மேலேயும் கீழேயும் அசைத்து, அசைத்து, அதன் கவனத்தைக் கவரத் தொடங்கினேன். சொன்னால் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். அந்தக் குட்டிக் குழந்தை என் அத்தனை செய்கைகளுக்கும் ரியாக்ட் செய்தது. ஒரு கட்டத்தில் என் விரல் ஒன்றைப் பிடித்துக்கொண்டுவிட்டது.

அவ்வளவு கெட்டியாக. விடவே இல்லை. பிடி நழுவவே இல்லை. அதன் ஸ்பரிசம் என்னை உணர்ச்சிவசப்படுத்தியது. அவ்வளவு மென்மை, அவ்வளவு மிருது… அவ்வளவு அழுத்தம். என்ன அழகு! சட்டென்று என் கண்ணில் நீர் கட்டிக்கொண்டுவிட்டது. முடிந்தவரை மறைத்துக்கொள்ள முயற்சி செய்தேன்.

என்ன உணர்ச்சி இது!

சாயங்காலம் வீடு திரும்பும்போது, உமா மிஸ் விளக்கத் தொடங்கினார். “நாம என்னென்னவோ கத்துக்கறோம். ஆனால், மனிதனோடு அடிப்படை உணர்ச்சிகளில் ஒன்று, கரிசனம். அடுத்தவனின் வலியைத் தன் வலியா பார்க்கக் கத்துக்கறது. இதுக்கு ஆங்கிலத்துல 'எம்பதி'ன்னு பேரு. இன்னிக்கு பல்வேறு கருவிகள், தொழில்நுட்பம் எல்லாம் வந்தபிறகு, சக மனிதனோட உணர்ச்சிகளைப் புரிஞ்சுக்கத் தெரியாமல் தவிக்கறோம். இதைச் சரிசெய்வதுதான் 'ரூட்ஸ் ஆஃப் எம்பதி'ங்கற அமைப்போட திட்டம். இங்க கைக்குழந்தைகள்தான் ஆசிரியர்கள். அவர்களைத் தொடும்போதும், வருடும்போதும், கொஞ்சும்போதும் நமக்குள்ள இருக்குற கள்ளங்கபடமற்ற குழந்தைத் தனம் விழித்துக்கொள்ளும். அதன்மூலம் நம்மோட பசுமையை மீட்டெடுக்கிறோம். கனிவையும் கருணையையும் போற்றத் தொடங்குகிறோம். கல்வியுடைய நோக்கமே முழு மனிதனாக்குவதுதானே? அதில் உணர்வுகளை கூர்மைப் படுத்துவதும் முக்கியம் தானே.” என்றார்.

கெட்டியாக என் விரலைப் பற்றிக் கொண்ட அந்தக் குழந்தை, என் மனத்தில் ஏற்படுத்திய இனம்புரியாத மகிழ்ச்சியுடனேயே நடந்துகொண்டிருந்தேன். உள்ளத்தில் உவகை பொங்கிக்கொண்டிருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us