PUBLISHED ON : ஆக 21, 2017
நகரத்தில் இருந்து பள்ளி விடுமுறைக்கு தன் கிராமமான புன்சாரி (Punsari) வருகிறான் ஹிமான்ஷு படேல். எவ்வித அடிப்படை வசதியும் இல்லாமல் தன் கிராமம் இருப்பதும், நகரத்தில் கிடைக்கும் வசதிகளும் அவன் மனத்தை உறுத்தின. வளர்ந்து பட்டதாரியான பின், நகரில் வேலை பார்த்துக்கொண்டு தங்கிவிடாமல், கிராமத்திற்கு நல்லது செய்யவேண்டும் என்று முடிவெடுத்து, கிராம ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு, வெற்றியும் பெறுகிறார். பதவிக்கு வந்தபின், தான் நினைத்த மாற்றங்களைச் செயல்படுத்த ஆரம்பித்தார் ஹிமான்ஷு.
இன்று அந்தச் சிறிய கிராமத்தில் கம்பியில்லா இணைய இணைப்பு (wifi), கண்காணிப்பு கேமராக்கள், குப்பையிலிருந்து மின்சாரம், சோலார் பேனல்கள் போன்ற நவீன வசதிகள் உருவாகியுள்ளன. கழிப்பறைகள், தெரு விளக்குகள், மினி பஸ் வசதி போன்ற அடிப்படை வசதிகளும் ஏற்பட்டுள்ளன. புன்சாரி வளமான கிராமமாக மாறியுள்ளது.
தாய் சேய் இறப்பு விகிதம் பூஜ்ஜியம், நூறு சதவீதம் தடுப்பூசிகள், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு என்பதே இல்லை என்று சொல்லுமளவுக்கு சுகாதாரத் துறையிலும் தன் கிராமத்தை மிளிரச் செய்திருக்கிறார் ஹிமான்ஷு. இந்தியாவின் சிறந்த கிராமத்திற்கான விருதைப் பிரதமரிடம் இருந்து இக்கிராமம் பெற்றுள்ளது. பிறந்த மண்ணை நேசிக்கும் இது போன்ற இளைஞர்கள் ஒவ்வொரு கிராமத்திற்கும் இருந்துவிட்டால்… குறையொன்றுமில்லை.