தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/பாலைவனமும் அழகே!

பாலைவனமும் அழகே!

பாலைவனமும் அழகே!


PUBLISHED ON : மே 14, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 14, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நடைபயணம்

மலைமுகட்டில் நடை, பூங்காவில் நடை என்றெல்லாம் கேள்விப்பட்டிருப்போம். பாலைவனத்தில் நடைபயணம் போகலாம் என்று எனக்குச் சொன்னது 'யூத் ஹாஸ்டல்'தான். அதுவும் ராஜஸ்தானில் உள்ள தார் பாலைவனத்தில் நடை. கொஞ்சம் ஆசை, கொஞ்சம் ஆச்சரியம், கொஞ்சம் பிரமிப்பு கலந்துகட்டி அடித்தது. ஆனால் அந்த அனுபவம் எப்படி இருக்கும் என்பதைப் பார்த்துவிட விரும்பினேன்.

உடனே 'யூத் ஹாஸ்டல்' அமைப்பு மூலமாக 6 பகல் 5 இரவு பாலைவனப் பயணத்துக்கு ஒரு நபருக்கான கட்டணம் 4,500யைச் செலுத்தினேன். முதல் நாள் காலை சென்னை - டில்லி விமானப் பயணம். மாலையில் பழைய டில்லி - ஜோத்பூர் ரயில் பயணம். அங்கிருந்து இரண்டாம் நாள் காலை பொதுப்பேருந்தில் ஜோத்பூர் - செய்சால்மர் யூத் ஹாஸ்டல் பேஸ் கேம்ப் பயணம்.

மாலை 5 மணி வாக்கில் பேஸ் கேம்ப்பை அடைந்தோம். கேம்ப் அமைப்பாளர்கள் தேனீர் வழங்கி எங்களை வரவேற்றார்கள். அன்று இரவு கொட்டகையில் தங்கினோம். கேம்ப் விதிப்படி காலை 5.30 மணிக்கு அனைவரும் எழுந்துவிட வேண்டும். பயிற்சியாளர் மேற்பார்வையில் உடற்பயிற்சி. பேஸ் கேம்ப்பில் இருந்து கிளம்பி நடைபயணம் மேற்கொள்ளும் ஐந்து நாட்களும் குளிக்க முடியாது; உடற்கழிவு செய்வதற்கும், குடிக்கவும் மட்டும்தான் தண்ணீர் கிடைக்கும்.

7 மணி சூரியன்

மறுநாள் காலை உணவு முடிந்ததும் ஊரைச் சுற்றிப் பார்க்க எங்களை அனுப்பினார்கள். மதியம் ஒரு மணி வாக்கில் பேருந்து மூலம் 25 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள 'தமுந்த்ரா' என்ற இடத்திற்குப் பயணமானோம். அங்கிருந்து 3 மணி நேரம் பாலைவனத்தில் நடந்து, 'கராரா' என்ற இடத்தை அடைந்தோம். பாலைவனத்தில் நடப்பது என்றதும், மணற்பரப்பில் நடப்பது என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். கரடான நிலத்தில்தான் நாங்கள் பெரும்பாலும் நடந்தோம்.

கராராவில் ஓர் இரவு தங்கிவிட்டு, 'சாம் சாண்ட் டியூன்' (Sam Sand Dunes) என்ற இடத்திற்குக் கிளம்பினோம். 14 கி.மீ., நடந்து அந்த இடத்தை மாலை 4 மணி வாக்கில் அடைந்தோம். மணல் முகடுகள் இருக்கும் அந்த இடம் மிகவும் புகழ்பெற்றது. தார் பாலைவனப் புகைப்படங்களில் இந்த இடத்தை அதிகம் காணலாம். 'மணல் முகடுகளைப் பார்த்து வாருங்கள்!' என அமைப்பாளர்கள் சொன்னார்கள். எங்களது கேம்ப் ஓர் அழகிய குன்றின் மேல் அமைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்து சூரியன் மறைந்த காட்சியைப் பார்த்தது எங்களைக் கொள்ளைகொண்டது. 7 மணிவரை சூரிய ஒளியைப் பார்க்க முடிந்தது.

ஒட்டகச் சவாரி

அடுத்த நாள் 10 கி.மீ., ஒட்டகச் சவாரி செய்து, பீடா ஃபாண்டா என்ற இடத்தை அடைந்தோம். முந்தைய நாட்களில் ஒட்டகச் சவாரி செய்பவர்களைப் பார்க்கும்போதெல்லாம், 'ஆஹா நாமும் இப்படி சொகுசாகச் சென்றால் நன்றாக இருக்குமே!' எனத் தோன்றும். ஒட்டகம் மேல் ஏறினோம். ஆரம்பத்தில் ஜாலியாகத்தான் இருந்தது. போகப்போக இடுப்பு, தொடை என ஒவ்வொரு பாகமும் அசைய அசைய வலி எடுக்கத் தொடங்கியது. என்றாலும், கிண்டலும் கேலியுமாக அந்த அனுபவமும் இனிமையாக மாறிப்போனது.

ஒட்டகச் சவாரியில் நாங்கள் சென்றடைந்த இடம் சுதாசரி. அங்கும் அழகிய மணல் முகடுகள். விழுந்து புரண்டு விளையாடினோம்.

ஒவ்வொரு கேம்ப்பிலும் உள்ளூர் மக்கள் மூலமாகத்தான் எங்களுக்கு இரவுச் சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த இடத்தில், 'உங்களுக்கு சுர்மா செய்து தருகிறோம்' என்றார்கள். தரையில் குழி தோண்டி, கங்கு வைத்து அதில் பிசைந்த மைதா மாவை லட்டு போல உருட்டி வைத்து மூடிவிட்டார்கள். இரண்டு மணி நேரம் கழித்து, அந்த உருண்டைகள் பொறபொறவென ஆகிவிட்டன. அவற்றை உடைத்து உதிர்த்து நெய் கலந்து வைத்துவிட்டார்கள். பருப்பு கடைசல் மாதிரி ஒரு குழம்பை ஊற்றிப் பிசைந்து சாப்பிட்டோம். அவ்வளவு ருசி! அந்த மக்களுக்கு அது விசேஷ உணவாம். அன்புடன் எங்களுக்கு சமைத்துக்கொடுத்தார்கள்.

வண்ணமயமான வாழ்க்கை

மறுநாள் 'பரானா' என்ற இடத்திற்கு 12 கி.மீ., நடந்து சென்றோம். மறுநாள் ஜெய்சால்மருக்குப் பேருந்தில் கூட்டிச் சென்றார்கள். வழியில் சிதிலமடைந்த கோவில் ஒன்றைப் பார்த்தோம். 'இந்த இடத்தை ஏதோ திரைப்படத்தில் பார்திருக்கிறோமே!' என நினைத்தோம். 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தில் சிதிலமடைந்த பண்டைய ஊராகக் காட்டப்பட்ட இடம் அது. பேஸ்கேம்ப் திரும்பி குளித்துக் கிளம்பி சாப்பிட்டுவிட்டு ஊருக்குக் கிளம்பினோம்.

நீர் நிலைகள், பசுமை உள்ள இடம்தான் அழகு என்றில்லை. சுட்டெரிக்கும் வெயில், கரடு நிலம், சுடு மணல், குறைவான தண்ணீர் உள்ள பாலைவனமும் அழகுதான். அங்கு வாழும் மக்களும் அங்கு கிடைப்பதைக் கொண்டு வண்ணமயமான வாழ்க்கையைத்தான் வாழ்கிறார்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us