PUBLISHED ON : செப் 10, 2018

வண்ணத்துப்பூச்சியின் சிறகுகள் பல வண்ணங்களில் ஒளிர்கின்றன. சிறகுகளின் மேல் நுண்ணிய செதில்கள் உள்ளன. அவற்றின் நுனிகளில் நுண்துகள்கள் உருவாகின்றன. இந்தத் துகள்கள் ஒவ்வொரு வண்ணத்துப்பூச்சிக்கும் உடற்கூறு செல்களின்படி மாறுபடும். உடற்கூறு செல்கள்தான் வண்ணத்துப்பூச்சியின் நிறத்துக்குக் காரணமானவை. இந்த வண்ணத்துகள்கள் கைகளில் ஒட்டிக்கொள்ளக்கூடிய அளவுக்கு மிக மென்மையானவை. வண்ணத்துப்பூச்சியின் நிறம் நம் கைகளில் ஒட்டிக்கொண்டால், அந்த இறகுப்பகுதி நிறமற்று வெளிர் நிறமாகக் காட்சியளிக்கும்.
சில விலங்குகள் மற்றும் பறவைகளின் கண்கள் இருட்டில் பளீரென ஒளிரும். அவற்றின் கண்களின் பின்னால் 'டேப்டம் லுசிடம்' (Tapetum Lucidum) என்ற விழித்திரை ஒளிரும் செல் படலம் உள்ளது. ஒளி, கண்களின் 'ரெட்டினா' எனப்படும் விழித்திரையில் பட்டு, கண்களின் உட்புறம் சென்று 'டேப்டம் லுசிடம்' படலத்தின் மீது விழும்போது, பிரதிபலிக்கிறது. இரவில் குறைந்த ஒளியிலும் விலங்குகள், பறவைகளின் கண்களுக்கு உருவங்கள் தெரிய, இந்த ஒளிரும் படலம் உதவுகிறது.
- ப.கோபாலகிருஷ்ணன்
