PUBLISHED ON : அக் 01, 2018

அன்னி பெசன்ட்
1.10.1847 - 20.9.1933
லண்டன், இங்கிலாந்து
இந்திய நாட்டின் சுதந்திரத்துக்காக வாழ்வைத் தியாகம் செய்த இந்திய வீரர்கள் எத்தனையோ பேர் இருக்கின்றனர். ஆனால், நம் நாட்டைச் சேராத ஒருவர், வேறு நாட்டிலிருந்து வந்து, நமது மக்களின் சுதந்திரத்துக்காக ஒருவர் போராடினார். அவர்தான் அன்னி பெசன்ட். 'பெண்களுக்குக் கல்வி போதிப்பேன்; 21வயது ஆகாத பெண்களுக்குத் திருமணம் செய்து வைக்க மாட்டேன்; விதவைகளின் மறுமணத்தை ஆதரிப்பேன்' என்று பெண் விடுதலைக்காகவும் போராடினார். ஏழைக் குழந்தைகளுக்கு கல்வியுடன் உணவும் கிடைக்க வேண்டும் என்பது அவரின் இலட்சியமாக இருந்தது.
ஏழைகளுக்கு எதிரான இன்னல்களை இளம் வயதிலேயே பார்த்து வளர்ந்ததால், ஏதாவது ஒரு வழியில் அவர்களுக்காகத் தொண்டாற்ற விரும்பினார். பல புத்தகங்களை எழுதி, 'அடிமை நாடுகளுக்கு பிரிட்டிஷ் அரசு சுதந்திரம் வழங்க வேண்டும்' என்று பேசினார். 'நேஷனல் ரீஃபார்மர்' என்ற பத்திரிகையில் உதவி ஆசிரியராகப் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போதுதான் பிரம்மஞான சபையில் சேர்ந்து, பின்னாளில் அந்த இயக்கத்தின் தலைமைப் பொறுப்பையும் ஏற்றார்.
இந்தியாவுக்கு முதன்முதலாக 1893இல் வந்தபோது, 'புண்ணிய பூமி' என்று பெருமைபடக் கூறினார். 'பழைய வேதத்தையும் கோட்பாடுகளையும் இந்திய மக்கள் மதித்துக் கடைப்பிடிக்க வேண்டும். அப்போதுதான் இந்தியா, பழைய உயர் நிலையை அடையும்' என்றார்.
1904இல் காசியில் பெண்கள் பள்ளியையும், சென்னை உட்பட பல நகரங்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கான பள்ளியையும் தொடங்கினார். இந்தியாவுக்கு சுயாட்சி வேண்டும் என்று கிளர்ச்சி நடத்தினார். அதற்காக 'ஹோம் ரூல் லீக்' என்ற இயக்கத்தைத் தொடங்கி, தனது நாளிதழான 'நியூ இந்தியா'வில் எழுதினார்.
மகளிர் வாக்குரிமைக்காகவும் தொழிலாளர் மேம்பாட்டுக்காகவும் பணியாற்றினார். தீப்பெட்டித் தொழிற்சாலையில் வேலை பார்த்த பெண்களுக்கு அதிக ஊதியம், ஒழுங்கான இருப்பிட வசதி ஆகியவற்றைப் போராடிப் பெற்றுத் தந்தார்.
1917இல் கோல்கட்டாவில் நடந்த மாநாட்டில், இந்திய காங்கிரசின் தலைவராக ஓராண்டிற்குத் தேர்வு செய்யப்பட்டார். இந்திய விடுதலைக்காகப் பல போராட்டங்களில் கலந்துகொண்டு சிறைக்குச் சென்ற அன்னி பெசன்ட் தனது 81வது வயதில் அரசியலில் இருந்து விலகினார்.
தன் வாழ்க்கையின் பாதியை, இந்திய மக்களுக்காக அர்ப்பணித்து, அவர்களின் இதயமாக வாழ்ந்தார் அன்னி பெசன்ட்!
