PUBLISHED ON : மார் 02, 2020

மாணவப் பருவத்தில் கிடைக்கும் கைதட்டல் என்பது வாழ்க்கை முழுவதும் நினைவில் இனிக்கக்கூடியது. அதனாலேயே படிப்பு தாண்டி, மாணவர்களுக்கென பல்வேறு கலைப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. அந்த மகிழ்வை நினைவூட்டவே, சமீபத்தில் எப்போது, எதற்கு கைதட்டல் பெற்றீர்கள்? என கேட்டிருந்தோம். கோவை, சரவணம்பட்டி, விமல்ஜோதி கான்வென்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவியரிடம் கலந்துரையாடினோம்.
த.கவிப்பிரியா, 12ஆம் வகுப்பு
கணபதி பகுதியில் உள்ள தமிழ்ச்சங்கம் நடத்திய, திருக்குறள் மற்றும் ஆத்திசூடி எழுதுதல் போட்டியில் பங்கேற்று முதல் பரிசு பெற்றேன். அதேபோல், காமராசர் பிறந்த நாளன்று, அவரைப் பற்றி எங்கள் பள்ளியில் பேசி, கைதட்டுப் பெற்றேன்.
அ.செளமியா, 11ஆம் வகுப்பு
எங்கள் பள்ளி விழாவில் நடந்த போட்டியில், நான் குட்டிக்கரணம் அடித்து நடனம் ஆடியபோது, பலரும் உற்சாகம் பொங்க கைதட்டினர். சக மாணவர்களும், ஆசிரியர்களும் என்னை வெகுவாகப் பாராட்டினர். அதை இப்போது நினைத்தாலும் உற்சாகமாக உள்ளது.
செ.வித்யா, 11ஆம் வகுப்பு
குடியரசு தின விழாவில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில், 'தமிழர் பாரம்பரியம் வளர்கிறது' என்ற தலைப்பில் பேசினேன். அதைப் பார்த்து கைதட்டி மகிழ்ந்த என் பெற்றோர் உச்சிமுகர்ந்து என்னைப் பாராட்டியது மறக்க முடியாத ஒன்று.
ந.ப.சுஹிதா, 11ஆம் வகுப்பு
சில மாதங்களுக்கு முன் எங்கள் பள்ளியில் கருத்தரங்கு நடைபெற்றது. அதில் நிதானமாகவும், தெளிவாகவும் நான் உரையாற்றியதற்காக, பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் என் சக மாணவியர் கைதட்டி வாழ்த்துக் கூறியது மறக்க முடியாத தருணம்.
சி.திவ்யதர்ஷினி, 12ஆம் வகுப்பு
குடும்ப உறவுகளின் சிறப்புகள் என்ற தலைப்பில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் சிறப்பாகப் பேசி, பரிசு வென்றேன். இதற்காக சக மாணவர்கள் கைதட்டியபோது, பெரும் மகிழ்ச்சியாக இருந்தது.
செ.செ.செல்சியா ஜெமீமா, 11ஆம் வகுப்பு
பள்ளியில் நடந்த நடனப்போட்டியில் 3ஆம் பரிசு, ஓவியப் போட்டியில் முதற் பரிசு கிடைத்துள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள் கைதட்டலுக்கு நடுவே பரிசு பெற்றது மறக்கமுடியாதது. கைதட்டல் கொடுக்கும் மகிழ்ச்சி அளவில்லாதது.

