PUBLISHED ON : மே 09, 2016

புல், செடி, கொடி, மரங்களின் மீது காலை வேளைகளில் பனித்துளிகள் மின்னுவதைப் பார்த்திருப்போம். 'மழைத்துளிகளைப் போலவே, பனித்துளிகளும் வானத்திலிருந்து பூமி மீது விழுகின்றன' என்று சிலர் நினைக்கலாம். உண்மையில் பனித்துளிகள் அப்படி உருவாவதில்லை!
ஒரு காலிப் பாத்திரத்தில் பனிக்கட்டியைப் போட்டால், பாத்திரத்தைச் சுற்றி நீர்த்துளிகள் உருவாவதைக் கவனித்திருப்பீர்கள். வெப்பக் காற்றில் கலந்திருக்கும் நீராவி, குளிர்ந்த பரப்பைத் தொடும்போது, குளிர்ந்து நீர்த்துளிகளாக உருமாறுகிறது. தாவரங்கள் மீதும் பனித்துளி இவ்வாறுதான் உருவாகிறது.
பொதுவாக, காற்றில் ஓரளவு நீராவியும் கலந்திருக்கும். 'ஈரப்பதம்' என்று இதைக் குறிப்பிடுகிறோம். குளிர்ந்த காற்றில் இருப்பதைவிட, வெப்பக் காற்றில் நீராவி சற்று அதிகமாகவே இருக்கும். வெப்பநிலை அதிகமாக இருக்கும்போது, ஆவிநிலையை அதிகமாகத் தக்க வைக்க முடியும்தானே? அதனால்தான் வெப்பக் காற்றில் நீராவி அதிகமாக இருக்கிறது.
இரவில் தாவரங்கள் குளிர்ந்து இருந்தால், அவற்றை வெப்பக் காற்று தொட்டுச் சென்றால், காற்றில் கலந்திருக்கும் நீராவி குளிர்ந்து பனித்துளிகள் உருவாகும். சூரியன் உச்சிக்குப் போகும்போது, பனித்துளிகள் மீண்டும் ஆவியாகி வெப்பக் காற்றில் கலந்துவிடும்.
சின்னப் பனித்துளி; இவ்வளவு பின்னணி!
