தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/பின்னடைவு அல்ல; பாடம்

பின்னடைவு அல்ல; பாடம்

பின்னடைவு அல்ல; பாடம்


PUBLISHED ON : செப் 09, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 09, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செப்டம்பர் 7 அதிகாலை 1:38 மணி. திட்டமிட்டபடி சந்திரயான் 2இன் விக்ரம் விண்கலம் நிலவில் தரையிறங்கத் தொடங்கியது.

முதலில் முப்பது கிலோ மீட்டர் உயரத்திலிருந்து 7.4 கி.மீ. உயரத்துக்கு வருவது முதல் கட்டம்.

2 கி.மீ. உயரத்துக்கு வருவது இரண்டாவது கட்டம்.

படுக்கை நிலையில் அதுவரை பறந்த விக்ரம், தரையிறங்க ஆயத்த நிலையில் விண்கலம் சற்றே நேராக நிமிர ஆரம்பித்துச் சுமார் 400 மீட்டர் உயரம் வரை வருவது மூன்றாவது கட்டம்.

பின்னர் 400 மீட்டர் உயரத்திலிருந்து செங்குத்தாக மெல்ல தரையிறங்குவது நான்காவது கட்டம்.

திட்டமிட்டபடி பத்து நிமிடத்தில் முதல் கட்டம் முடிந்தது. தங்களை அறியாமலேயே அனைவரும் தங்கள் இருக்கையிலிருந்து எழுந்து குதித்து கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

அடுத்த இரண்டு நிமிடத்தில் இரண்டாம் கட்டமும் சரியாக நடைபெற்றது. இப்போது கைதட்டல் மட்டுமல்ல, பலரும் ஒரே சமயத்தில் நிம்மதிப் பெருமூச்சு விட்ட சப்தம் காதைப் பிளந்தது.

அடுத்த கட்டம் தொடங்கியது. இன்னும் மூன்றே நிமிடத்தில் விக்ரம் விண்கலம் நிலவில் தரையிறங்கி சாதனை படைத்துவிடும் என்ற நம்பிக்கை எல்லோர் மனத்திலும் உருவாகியது.

அப்போது தான், வெண்ணெய் திரண்டுவரும்போது தாழி உடைந்ததுபோல விண்கலப் பாதையில் தடுமாற்றம் தென்பட்டது. அங்கே குழுமியிருந்த அனைவர் மனத்திலும் அச்சம் குடிகொண்டது.

விக்ரம் தரையிறங்கி விண்கலத்தின் நான்கு கால்களிலும் தரையைத் தொட்டதும் உணரும் உணர்வீ கருவிகள் உள்ளன. அவை, தரையைத் தொட்டுவிட்டோம் என்ற செய்தியைத் தெரிவிக்கக் காத்துகிடந்த அந்த நொடியில், திடீரென விக்ரம் விண்கலத்துடன் செய்தித் தொடர்பைத் துண்டித்தது. இதனால், அனைவர் மனத்திலும் கலக்கம். பேய் அறைந்தது போல முகம் மாறியது.

இந்தச் செய்தி புரிந்த அந்த நொடியில், அவர்களில் பலரின் கண்களில் கண்ணீர் கசிந்தது. இஸ்ரோ தலைவர் சிவன் முகம் வாடியது. இருக்காதா பின்னே? பத்து ஆண்டுகளாகக் கண்ணீரை ஊற்றி வளர்த்த செடி கருகிவிட்டதைக் கண்டு கண் கலங்காதவர் யார் இருப்பார்கள்?

நிலவில் தரையிறங்குவதில் என்ன சிக்கல்?

1970களிலேயே செவ்வாய் மற்றும் வெள்ளி கோள்களில் சோவியத் யூனியன், முதல் முதலில் விண்கலங்களை தரையிறக்கியது. அந்தக் கோள்களில் வாயுமண்டலம் உள்ளது. எனவே, பாராசூட் கொண்டு விழும் வேகத்தைக் கட்டுப்படுத்தி தரையிறங்க முடியும். நிலவில் காற்றே இல்லை. எனவே, மேலே செல்ல உதவும் ராக்கெட்டைப் பயன்படுத்தித்தான் கீழே இறங்கவும் செய்ய வேண்டும்.

செடிக்குத் தண்ணீர் ஊற்றும் பைப் குழாயை கையில் பிடித்துக் கொண்டால், நமக்கு முன் புறமாகக் கடகடவென வேகமாக நீர் பீச்சி அடிக்கும்போது, பின் திசையில் நாம் தள்ளப்படுவோம். வலது பக்கம் நோக்கிப் பிடித்துக்கொண்டால், இடது புறம் நோக்கித் தள்ளுவிசை ஏற்படும். மேல் நோக்கிப் பிடித்துக்கொண்டால் கீழ்நோக்கி விசை அமையும். இதுதான் ராகெட் தத்துவம்.

முதலில் சுமார் நானூறு மீட்டர் உயரத்துக்கு விண்கலம் வந்து சேரும். அதன் பின்னர் தான், நிலவில் தரையிறங்கும். இந்த உயரத்திலிருந்து மேலிருந்து விழும் கல்போல விண்கலம் கீழே விழுந்தால் நிலவின் தரையைத் தொடும்போது, அதன் வேகம் சுமார் மணிக்கு 130 கி.மீ. என அமையும். அந்த வேகத்தில் நிலவில் மோதினால் அதோகதி தான்.

விழும் கீழ் திசை நோக்கி ராக்கெட்டைச் செலுத்தினால் மேல்நோக்கி விசை ஏற்படும். மேல் நோக்கிய இந்த விசை நிலவின் கீழ் நோக்கிய ஈர்ப்பு விசையை எதிர் செய்து கீழே விழும் வேகத்தை மட்டுப்படுத்தும். எனவே, விக்ரம் விண்கலத்தின் அடிப்பகுதியில் இருந்த ஐந்து ராக்கெட்டுகளை இயக்கி விழும் வேகத்தை மணிக்கு 2.76 கி.மீ. வேகமாக மட்டுப்படுத்தி, நிலவில் தரையிறக்கம் செய்ய வேண்டும்.

இரண்டாவது சவால்

இரண்டாவது சிக்கல் விண்கலத்தை நேர்செய்வது. நிலவைச் சுற்றியபடி இருக்கும் சமயத்தில் நான்கு கால்கள் முன்புறமாக நோக்கிய நிலையில் படுக்கைவாக்கில் தான் விண்கலம் பறக்கும். தரையிறங்கும்போது, படுக்கைவாக்கு நிலையிலிருந்து செங்குத்தாக நிற்கும் பாங்கு திருப்ப வேண்டும். விபத்தில் கவிழ்ந்து விழுந்த ஆட்டோவை நான்கு பேர் பிடித்துத் தூக்கி நேர் செய்ய முடியும். ஆனால், ஆள் அரவமற்ற விண்வெளியில் எப்படி பல்டி அடிக்க வைப்பது? அதற்கும் ராக்கெட் தான் ஒரே கதி.

கால்களுக்கு இரண்டு வீதம் தீபாவளி ராக்கெட் அளவே உள்ள எட்டு சிறு ராக்கெட் உந்திகள் விக்ரம் விண்கலத்தின் கால்களில் உள்ளது. இதன் ஒரு ராக்கெட்டை இயக்கினால், அதற்கு எதிரான திசையில் விண்கலம் சுழலும். சரியான அளவு சாய்ந்த பின்னர் அதன் எதிர் திசையில் உள்ள கால்களின் ராக்கெட் இயக்கி முதல் ராக்கெட் உந்தை சமன் செய்ய வேண்டும். அப்போது பல்டி அடித்த புதிய நிலையில் விண்கலம் பயணம் செய்யும்.

கண்கட்டி வித்தை

நானூறு மீட்டர் உயரத்திலிருந்து, பாதுகாப்பான இடத்தைத் தெரிவுசெய்து கீழே வரவைக்கும் தரையிறங்கு செயல் நடைபெற வெறும் மூன்றே மூன்று நிமிடங்கள் தான்.

எனவே, வீடியோ கேம் ஆடுவது போல இஸ்ரோ விஞ்ஞானிகள் தரையிலிருந்து கட்டுப்படுத்தி விண்கலத்தை நிலவில் தரையிறக்கம் செய்ய முடியாது.

இதற்கான எல்லா ஆணை நிரல்கள் ஏற்கெனவே விக்ரம் விண்கலத்தில் உள்ள கணினியில் பதிந்துவிடுவார்கள். செயற்கை நுண்ணறிவு கொண்டு விக்ரம் விண்கலம் இயங்கும். இந்தக் கட்டத்தில் விக்ரம் விண்கலத்தில் பழுது ஏற்பட்டது. திட்டமிட்டபடி நிலவில் இறங்காமல் மோதி அழிந்தது.

பின்னடைவு அல்ல; பாடம்

கீழே விழாமல் எவரும் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டதாகச் சரித்திரமே இல்லை. புத்தம் புதிதாக ஒன்றைச் செய்யும்போது பின்னடைவுகள் ஏற்படத்தான் செய்யும். அவ்வாறு சவால் எழும்போது தோல்வியெனச் சோர்ந்து விடாமல் படிப்பினையாக எடுத்து முன்னேறுவது தான் கற்றல்; அதுவே அறிவியலின் பண்பு. பழுது எங்கே எப்படி ஏற்பட்டது என ஆராய்ந்து, அடுத்த முயற்சியில் களைவோம் என இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

- த.வி. வெங்கடேஸ்வரன்

இஸ்ரோ, பெங்களூரு விண்வெளி கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து...


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us