PUBLISHED ON : பிப் 17, 2020

தெருவில் தமிழறிஞரான தியாகராச செட்டியார் சென்று கொண்டிருந்தார். அப்போது ''ஏ உலக்கை'' என்று ஒரு குரல் கேட்டது.
'தன்னை யார் திட்டுவது?' என்று திரும்பிப் பார்த்தார், தமிழறிஞர்.
யாரும் அவரைத் திட்டவில்லை. அவருக்குப் பின்னால் உலக்கை விற்பவர் ஒருவர் வந்துகொண்டிருந்தார். அவரிடம் உலக்கை வாங்க விரும்பிய ஒரு கிழவிதான் 'ஏ உலக்கை' என்று அழைத்திருக்கிறாள். கிழவி உலக்கை விற்பவரைத் திட்டினாளா என்றால் இல்லை. சாதாரணமாகத்தான் அழைத்தாள். அவர் பெயர் உலக்கையா என்ன? அதுவும் இல்லை. அவர் உலக்கை விற்றார். அதனால் அப்படிக் கூப்பிட்டாள். உலக்கை என்னும் பொருள் அவரிடமிருந்தது. அவர் உலக்கை இருக்கும் இடம். உலக்கை பொருள். அந்தப் பொருளின் பெயராலேயே கிழவி அழைத்தாள்.
இதற்குப் பெயர்தான் தானியாகு பெயர். தானி என்றால் இடம். உலக்கை இருக்கும் இடம், அதை விற்றவர். அதனால்தான் கிழவி 'ஏ உலக்கை' என்றாள்.
இவ்வாறு மாணவர்களுக்குப் புரியும் வகையில் எடுத்துக்காட்டுகள் கூறி இலக்கணம் நடத்தியவர் தியாகராச செட்டியார். கும்பகோணத்தில் தமிழாசிரியராக இருந்தார்.
ஒரு நாள் அவரைப் பார்க்க செல்வந்தர் ஒருவர் வந்தார்.
அவரைத் தன் நண்பர்களிடம் அறிமுகப்படுத்தும்போது, ''இவருக்கு லட்சுமி கடாட்சம் நன்றாக அமைந்திருக்கிறது, சமுத்திரம் போன்ற செல்வமுடையவர்'' என்று கூறினார்.
அதைக்கேட்டு அந்தச் செல்வந்தர், ''அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. ஏதோ கொஞ்சம் உண்டு'' என்று சிரித்தார்.
தியாகராச செட்டியார் மேலும் தொடர்ந்து ''இலக்கியத்தில் வரும் 'உவர்க்கடலன்ன செல்வரும் உளரே' என்பதற்கு இவர்தான் எடுத்துக்காட்டு. இவரை நினைத்துத்தான் அவர்கள் பாடினார்களோ என்று கூடத் தோன்றுகிறது'' என்றார் .
அதாவது கடல் பெரிதாக இருந்தாலும், அதன் உப்பு நீர் மக்கள் பருகப் பயன்படாது. அதுபோல் சிலர் அளவற்ற செல்வமுடையவர்களாக இருந்தாலும் அவர்களால் யாருக்கும் எந்த நன்மையும் இல்லை என்பதே பாடலின் பொருள்.
அந்தச் செல்வந்தர் அங்கிருந்து அகன்றதும், செட்டியாரின் நண்பர்கள், ''ஏன் அவரைப் பாராட்டுவது போல் இகழ்ந்து கூறினீர்கள்?'' என்று கேட்டனர்.
அதற்கு தியாகராசர், ''பரம்பரையாக உள்ள சொத்து போதாதென்று இவர் மேலும் சேர்த்து வருகிறார். ஒரு காசுகூட தான தருமம் செய்ய மாட்டார். தனக்கு வேண்டியதையாவது வாங்கி அனுபவிக்கிறாரா என்றால் அதுவும் இல்லை'' என்றார்.
''அப்படி இவர் என்ன செய்து விட்டார்?'' என்றனர் தியாகராசரின் நண்பர்கள்.
''இவர் ஒற்றை மாட்டுவண்டி ஒன்று வைத்திருக்கிறார். அதை இவரே ஓட்டிச்செல்வார். அதில் ஏறிக்கொண்டு ஒரு நாள் வீதி வழியே போனார். அப்போது எதிரே ஒரு பெண், முள்ளங்கிக் கிழங்கை விற்றுக்கொண்டு வந்தாள். அவளிடம் ஒரு கொத்து முள்ளங்கி வாங்கிய ஒரு பெண்மணி, கீரையை முறித்து தெருவில் எறிந்து விட்டுப் போனாள்.
இந்தச் செல்வந்தர் திடீரென்று கீழே குதித்தார். அந்தத் தழையைத் தின்ன வந்த ஓர் ஆட்டை அடித்து ஓட்டி விட்டு லபக்கென்று அதை எடுத்துக் கொண்டார். அதை தம் வண்டியில் உள்ள பெட்டியில் வைத்து மூடி அதன் மீது உட்கார்ந்து கொண்டார்.
அதை நான் பார்க்க நேர்ந்தது. ''இந்தத் தழை ஏதாவது மருந்துக்கு வேண்டுமா?'' என்று கேட்டேன்.
''மருந்தா? இதை பிண்ணாக்குடன் சேர்த்துச் சமைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் தெரியுமா? யாரோ ஒரு பைத்தியக்காரி இதன் அருமை தெரியாமல் எறிந்து விட்டுப் போகிறாள். என் கண்ணில் பட்டது. நான் விடுவேனா?'' என்று வேகமாக வண்டியை ஓட்டிக்கொண்டு போனார். எங்கே அந்தக் கீரையில் நான் பங்கு கேட்டு விடுவேனோ என்ற பயத்தில் அப்படி வேகமாகச் சென்றாரோ என்னவோ?'' என்றார் தியாகராசர்.

