PUBLISHED ON : பிப் 17, 2020

'நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்'
என்னும் பாடல் வரிகள், தமிழ்த்தாய் வாழ்த்தின் முதல் இரண்டு அடிகள் என்பது அனைவரும் அறிந்ததே. தமிழக அரசு விழாக்கள், பள்ளி, கல்லூரிகள், முக்கிய நிகழ்ச்சிகளின்போது இந்தப் பாடல் பாடப்படுகிறது.
இந்தப் பாடலை எழுதியவர் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை. இவர் எழுதிய 'மனோன்மணீயம்' என்னும் நாடக நூலில் இடம்பெற்ற பாடல் இது என்பதும் அனைவரும் அறிந்ததே. பாடலின் சில வரிகளை மட்டும் நீக்கிவிட்டு, 1970இல் 'தமிழ்த்தாய் வாழ்த்தாக'
அறிவித்தது தமிழக அரசு. மனோன்மணீயம் நூல், 1891இல் எழுதப்பட்டது. லிட்டன் பிரபு என்ற ஆங்கிலேயர் எழுதிய 'இரகசிய வழி' என்ற நூலைத் தழுவி எழுதப்பட்டது அந்த நாடகம்.
மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை எழுதிய பாடல் தான் முக்கியமாக தமிழர் வாழும் அனைத்துப் பகுதிகளிலும் பாடப்படுகிறதா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். நம் பக்கத்து மாநிலமான புதுச்சேரியில் பாரதிதாசன் எழுதிய பாடல்தான் தமிழ்த்தாய் வாழ்த்தாக இடம் பெற்றுள்ளது.
'வாழ்வினில் செம்மையை செய்பவள் நீயே
மாண்புகள் நீயே என் தமிழ்த் தாயே
வீழ்வாரை வீழாது காப்பவள் நீயே!
வீரனின் வீரமும், வெற்றியும் நீயே!
என்று நீளும் அந்தப் பாடலின் கடைசி இரண்டு வரிகள்
'செந்தாமரைக் காடு பூத்தது போலே
செழித்தஎன் தமிழே ஒளியே வாழி'
என்று முடிகிறது. தமிழின் சிறப்பு, நாகரிகம் தோன்றுவதற்கு முன் தோன்றிய அதன் பழம்பெருமை, அதைப் போற்றிக் காக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் பாடியுள்ளார், பாரதிதாசன்.
'நைந்தா யெனில்நைந்து போகுமென் வாழ்வு
நன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே'
நீ நலிந்து போனால் நானும்தானே அவ்வாறு ஆவேன்? நீ உயர்வும் சிறப்பும் அடைந்தால் அது எனக்கும் தானே? என்று தமிழ்த்தாயை பல விதங்களில் போற்றியுள்ளார் பாரதிதாசன்.
பாரதிதாசன் எழுதிய 'இசை அமுது' என்னும் பாடல் தொகுப்பில் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது. 1971இல் இருந்து புதுவை அரசின் தமிழ்த்தாய் வாழ்த்தாகப் பாடப்படுகிறது.

